Saturday, December 22, 2007

தாரே ஜமீன் பர் - படம் அல்ல ஒரு நல்ல கவிதை

தாரே ஜமீன் பர் இதுபோல் ஒரு நல்ல படம் எப்பொழுது பார்த்தேன் என்று நினைவு இல்லை. படத்தின் தலைப்புக்கே என்ன அர்த்தம் என்று தெரியாமல் நானும் அய்யனாரும், வெள்ளி கிழமை படம் பார்க்க போய் டிக்கெட் கிடைக்காமல் சனி கிழமை இரவு 7.30 க்கு முன்பதிவு செய்துவிட்டு வந்தோம். பின்புதான் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டோம் "சிறு நட்சத்திரம் தரையில்" கிட்டதட்ட மூன்று மணி நேரம் போனது தெரியவில்லை.

கதை:
இசான் அவாஸ்தியாக (Darsheel) அவனுக்கு படிப்பதில் நாட்டம் இல்லை ஒரு வரி கூட தப்பு இல்லாமல் படிக்க எழுத வராது. 3+9= 3 என்று பதில் எழுதும் அவன், அவனுக்கு என்று ஒரு உலகத்தில் இருக்கிறான். மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படிக்கிறான் இந்த முறையும் அவனை பாஸ் ஆக்க முடியாது அவனுக்கு மனதளவில் பிரச்சினை இருக்கிறது அதுக்கு என்று சில சிறப்பு பள்ளிகூடங்கள் இருக்கிறது என்று தலைமை ஆசிரியர் சொல்ல கோவம் அடையும்அவன் அப்பா.

அவன் அண்ணன் போல அனைத்திலும் முதல் மார்க் வாங்கவேண்டும் இப்படி இருந்தால் உருப்படாமல் போய்விடுவான் என்று போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிடுகிறார். இது தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாக கருதும் அந்த சிறுவன் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் தன்னைதானே தனிமை படுத்திக்க ஆரம்பிக்கிறான், அந்த பள்ளிகூடத்துக்கு தற்காலிக ஓவிய ஆசிரியராக வரும் நிக்ஹும் சார் (அமீர்கான்) ஏற்கனவே டுயுலிப்ஸ் என்ற மூளைவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்தியவர் அவர்.அதனால் இந்த சிறுவன் இப்படி இருப்பது ஆபத்து என்று உணர்ந்து அவனிடம் இருக்கும் தனி திறமையை வெளிக்கொண்டுவருகிறார்.

மிகவும் எளிமையான கதைதான் ஆனால் அதை படம் ஆக்கி இருக்கும் விதமும் அனைவரின் மிக இயல்பான நடிப்பும் படம் முடிந்தும் வெகு நேரம் ஆகிறதுஅந்த அனுபவத்தில் இருந்து வெளிவர.

முதல் பாதி படம் முழுவது அந்த சிறுவனின் குறும்புகளால் கலகலப்பாக ஓடுகிறது இடைவேளைக்கு பிறகு சில இடங்களில் அழும் அளவுக்கு அவனின் நடிப்பு இருக்கிறது.

நிச்சயமாக குழந்தைகளோடு அப்பா,அம்மா பார்க்கவேண்டிய படம்.
ஒரு அமைதியான நூலகத்தில் போய் அருமையான கவிதை புத்தகத்தை படித்த உணர்வு இருக்கிறது, படம் பார்த்து முடித்தபின்.
அந்த சிறுவன் இந்தவருடம் விருது வாங்க போவது நிச்சயம், மிக மிக இயல்பான நடிப்பு.

தமிழில் ஏன் இதுபோல் ஒரு படம் வராது!!! என்ன என்ன இல்லை?

முதல் காட்சியிலேயே ஹா ஹா ஊ என்று சத்தத்தோடு காலை தலைவரை தூக்கிவைத்து உடம்பில் இருக்கும் எல்லா பார்ட்டையும் பார்ட் பார்ட்டாக காட்டிவிட்டு வேறு வழியே இல்லாமல் முகத்தை காட்டும் ஹீரோ அறிமுக காட்சி இல்லை, அமீர்கான் அறிமுகம் ஆகும் பொழுது இடைவேளை.

ஹீரோ அடிபட்டு ஆஸ்பிட்டலில் படுத்துகிடந்தாலும் கணவில் வரும் பாட்டு இல்லை, வரும் பாட்டு அனைத்தும் அந்த சிறுவனின் மனநிலையை அல்லது எல்லா குழந்தைகள்மனநிலையை சொல்வதாகவே இருக்கிறது.

அகலமான ரோடு இருக்க துக்கினியோண்டு டிரஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் நடக்காமல் நிறுத்தி இருக்கும் காரின் மேல் ஏறி போகும் ஹீரோயின் இல்லை.

அழுது ஆர்பாட்டம் செய்து ஒப்பாரி வைத்து எனக்கும் நடிக்கதெரியும் என்று காட்டும் ஹீரோவாக அமீர்கான் இல்லை, கண் ஓரத்தில் தளும்பும் கண்ணீராலேயே மனுசன் நம்மை கலங்கவைத்து விடுகிறார்.

முக்கியமாக படத்தில் காதுகிழிய ஏய் ஏய், உய், டுமீல் , டமார் இது போன்ற சத்தம் எதுவும் இல்லை.

தேவை இல்லாத காமெடி இல்லை.

பஞ் டயலாக் இல்லை, ஹீரோ புகழ் அடுத்த முதல்வர், அடுத்த மேயர்,சேர்மேன், ஊராட்சி தலைவர் என்று எல்லாம் புகழ் பாடும் பாட்டு இல்லை.

எல்லாத்தையும் விட முக்கியமாக கல்யாண காட்ச்சிக்கு கூட ஜட்டி & பிராவோடு வலம் வரும் ஹீரோயின் இல்லீங்கோ!!!!

இப்படி எதுவுமே இல்லாதது எப்படி தமிழ் படம் ஆகும். ஆகையால் இதுபோல் தமிழ்படம் வாராது.

டிஸ்கி: ஹிந்தியே தெரியாத எங்கள் ரெண்டு பேருக்காக இங்கிலீஸ் சப் டைட்டில் போட்ட நல்லவனே நீ நல்லா இருப்ப!

29 comments:

said...

அருமயான படம்னு சொன்னாங்க... ஆனா அதைவிட படத்தில் "இல்லாத" வற்றை நீங்க கூறி இருக்கிற விதம் சூப்பர்..:-))

said...

//ஹிந்தியே தெரியாத எங்கள் ரெண்டு பேருக்காக இங்கிலீஸ் சப் டைட்டில் போட்ட நல்லவனே நீ நல்லா இருப்ப!
//
இந்தி தெரியாது !

மெய்யாலுமேவா ..!!???

said...

நன்றி மங்கை, படம் அருமை இல்லை மிக மிக மிக அருமை படம் பார்த்து அழுதது இதுவே முதல் முறை!

அவசியம் பார்த்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க!

said...

ஆயில்யன் said...
///இந்தி தெரியாது !
மெய்யாலுமேவா ..!!???///

என்னது ஒரு கருப்பு தமிழனை பார்த்து இந்தி தெரியாதான்னு கேட்கிறே , ஏய் பஸ்ஸை கொளுத்து, தார் பூசி, ரயிலை மறிங்கடா!!! ஆனா என் பேரனையாவது நான் ஹிந்தி படிக்கவைத்து விடுவேன் ஆயில்யா:)))

said...

குசும்பரே...
அது 'தாரே சமீம் பர்' அல்ல 'தாரே ஜமீன் பர்' . நிலத்துக்கு சொந்தக்காரரை 'ஜமீன்தார்' என அழைக்கிறோமே அது இந்தியிலிருந்து வந்த சொல்லே.

said...

//நாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் கல்வி கோயிலில் சேர ஒரு பைசா கூட வசூல் செய்யமாட்டோம்!!!---- மருத்துவர் ஐயா

இது முன்பு நீங்கள் சொல்லியது போல் நாங்கள் அரசியலுக்கு வரமாட்டோம் என்றது வந்த பின் எங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால் சாட்டையால் அடிக்கலாம் என்றது அது போல் வாக்குறுதி தானே இதுவும்!!!
அப்படின்னா கரெக்ட்டாதான் இருக்கும்!!!//


இது பாத்ததுமேதான் தெரிஞ்சு போச்சே!

இப்படித்தான் பதில வரும்னு

//என்னது ஒரு கருப்பு தமிழனை பார்த்து இந்தி தெரியாதான்னு கேட்கிறே , ஏய் பஸ்ஸை கொளுத்து, தார் பூசி, ரயிலை மறிங்கடா!!! ஆனா என் பேரனையாவது நான் ஹிந்தி படிக்கவைத்து விடுவேன் ஆயில்யா:)))//

:))))))))))))))

said...

இவனுக்கு டிக்கெட் போட்டு கூட்டிகிட்டு போனேன் நன்றினு ஒரு வார்த்தை போடலன்னு அய்யனார் பொலம்பராரு ஏம்பா குசும்பர் நன்றி சொல்ல தெரியாதவனா நீ?

said...

// koothanalluran said...
குசும்பரே...
அது 'தாரே சமீம் பர்' அல்ல 'தாரே ஜமீன் பர்' . நிலத்துக்கு சொந்தக்காரரை
//

பாருங்க்க பக்கத்து ஊர்க்காரரு என்னாமா இந்தி விளக்கம் சொல்றாரு !

நம்ம நிலைமைத்தான் :(((

Anonymous said...

டம்பி
உனக்கு ஏன்யா இந்த கொலவெறி
அடுத்த வாரம் உன்னையும் கூட்டிபோறாம்யா அழாதே

said...

நன்றி கூத்தாநல்லூரான் திருத்திவிட்டேன்!!!

****************************

தம்பி நன்றி என்பது பழக்கவழக்கம் இல்லாத ஆட்களுக்குதான் சொல்லது அவர் செஞ்சது அவர் கடமை.

கடமைக்கு எல்லாம் நன்றி சொல்லகூடாது:))

****************************
ஆமாம் ஆயில்யா என்ன செய்வது:(((

said...

படத்தை பாத்தோமா வந்தோமா விமர்சனம் எழுதி சிலாகிச்சோமான்னு இருக்கணும் அத விட்டுபோட்டு குத்துபாட்டு இல்ல, சண்டகாட்சி இல்ல, ரொமான்ஸ் இல்ல, கால அகட்டி காட்டலன்னு அதனால இந்த படம் சூப்பருன்னுலாம் சொல்லக்கூடாது நீங்க சொல்லலன்னாலும் இது நல்ல படம்தான் ஆனா மத்த மொக்கைபடத்துக்கும் இதுக்கும் ஏன் முடிச்சி போட்டு எழுதற. விமர்சனம் எழுதுறதா இருந்தா இந்த படத்துக்கு மட்டும் எழுதணும். மத்த மொக்க படத்து மொக்க சீன்லலாம் பாக்க மாட்டேன்னு எந்திரிச்சி போனங்களா குசும்பர்?

கமல் மாதிரி முயற்சிகள் எடுத்து நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்ல அமீர்கானும் ஒருவர்.

said...

அய்யனாரை என் வன்மையாக கண்டிக்கிறேன்..;)

said...

\\தம்பி நன்றி என்பது பழக்கவழக்கம் இல்லாத ஆட்களுக்குதான் சொல்லது அவர் செஞ்சது அவர் கடமை.

கடமைக்கு எல்லாம் நன்றி சொல்லகூடாது:))\\

குசும்பு அண்ணே நீங்க எப்போ உங்க கடமையை செய்ய போறிங்க!?..;)

said...

குசும்பன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு முதலில் நாந்தான் விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஓகே. பிழைச்சுப் போங்க.

கடந்தவாரம் ஒரு சேனலின் அழைப்பில் இந்த படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றிருந்தேன். ஆமீர்கானுடன் தம்மடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னது:

குழந்தைகளுக்கான படம் இந்திய மொழிகளில் குறைவு. அதை இந்த்ப் படம் போக்கும். ஒரு தந்தையின் மனநினையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் என்றார்.

பொடியன் தர்ஷீல் ரோட்டில் நின்றால் நடந்தால் ஏகப்பட்ட கூட்டம் கூடிவிடுகிறது. இப்ப இவ்ளோ மாஸா என்று அதிர்ந்தேன்.

படத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற,
'' ஏற்கனவே டுயுலிப்ஸ் என்ற மூளைவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்தியவர் அவர்"'விஷயம் அதுவல்ல.

அந்த நோயின் பெயர், dyslexia. அதாவது சோறை கையில் எடுத்து குழந்தையின் வாயிக்கு அருகில் கொண்டு சென்றால் குழந்தை வாயை திறக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் திறக்கும். திறக்காத குழந்தைகள் இம்மாதிரியான குறைபாடுகளை கொண்டது.

ஓ.கே பாஸூ. படத்தை பார்த்துட்டு நானும் போடுதேன் ஒரு பதிவு.

said...

நல்ல விமர்சனம் நண்பா

விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்.

said...

அமீர்கானின் செவ்வி வானொலியில் கேட்டபோதே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்போது மேலும்..

said...

Avvvvvv.. erkanavae trailera paathuttu indha padam paakanumnu nenachittu irundhen.. nethu dhaan CVR paathutu vandhu nalla irukkunu solli konjam usupethinaar.. neenga postae pottu overa tempt panniteenga.. Seekiram naanum paakaren padatha :)

said...

அவசியம் பார்க்கிறேன் குசும்பன், பார்க்கத்தூண்டும் விமர்சனம்.

ஆனால், தம்பியுடனும் உடன்படுகிறேன். சரவணபவனில் பாஸ்போர்ட் கேட்க்ககூடாது, சாஸ்திரிபவனில் சாம்பார்வடை கேட்கக்கூடாது. நம்ம படங்களோட கம்பேர் பண்றாமாதிரி 100 படம் வருது ஹிந்திலே. நல்ல படமும் எப்பவாச்சும் தமிழ்லேயும் வந்துகிட்டுதான் இருக்கு.. நாம பாக்கறதில்லைன்னா நல்ல படம் இல்லாம போயிடுமா என்ன?

said...

good post.

said...

நான் கூட பதிவு போடலாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்,நீங்களே அற்புதமான ஒரு பதிவு போட்டீங்க!!
நேத்து தான் பாத்தேன்!! எனக்கும் ரொம்ப பிடிச்சு போயிருச்சு படம்!! இதெல்லாம் தான் தவறாம தியேட்டர்ல போய் பாக்க வேண்டிய படங்கள்!! அப்போ தான் இதை எடுக்கறவங்களுக்கு மேலும் இது போல படம் எடுக்கனும்னு உற்சாகம் ஏற்படும்!!
இதுல பையனை Boarding school-la விட்டுட்டு அவன் அப்பா அம்மா செல்லும் போது வரும் பாடல் என் மனதை உருக்கிவிட்டது.பாடல் ஓடும் போது எனை அரியாமல் என் கண்களில் கண்ணீர்!!
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி!! :-)

said...

இதை பாருங்க அண்ணாச்சி! :)

Anonymous said...

http://www.aamirkhan.com/blog.htm

said...

உங்க பதிவை படிக்கும் போதே படம் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை வருது. பதிவுக்கு நன்றி. இது போன்ற படங்கள் பாரப்பதற்காகவே சீக்கிரம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.

said...

குசும்பன் அண்ணாச்சி,
நீங்க மத்த ஹிந்தி படங்களை பார்த்ததே இல்லையா. . .

நம்ம டமிழ் படத்துல வற்ற கவர்ச்சியெல்லாம் அவுங்க 20 வருஷத்துக்கு முன்னாடியே காமிச்சிட்டாங்க. இப்பவும் நம்மளவிட அட்வான்சா தான் போயிகிட்டு இருக்காங்க. . . . .

நானும் BLACK ன்னு ஒரு ஹிந்தி படம் பார்த்தேன். உண்மையிலேயே அருமையான படம்.

தமிழ்ல ராம் படத்துல இடைவேளைக்கு 10 நிமிஷம் முன்னடி தான் கதாநாயகி அறிமுகமாவாங்க.

நம்ம கிட்டையும் நல்ல சரக்கெல்லாம் இருக்கு தல. . . .

said...

//சரவணபவனில் பாஸ்போர்ட் கேட்க்ககூடாது, சாஸ்திரிபவனில் சாம்பார்வடை கேட்கக்கூடாது//

அடடா என்ன தத்துவம் இதுக்குதான் தலைமைச்சீடர் வேணும்னு சொல்றது.

said...

தமிழ் படங்களிலே ரொம்பதான் எதிர்ப்பார்க்கீறிங்க.... :(

said...

தம்பி said...
///கமல் மாதிரி முயற்சிகள் எடுத்து நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்ல அமீர்கானும் ஒருவர்.///

ஆம் தம்பி ஆனால் கமல் மற்றவர்கள் காசில் ரிஸ்க் எடுப்பார் நிறைய, அமீர்கான் சொந்த காசில்.

**************************

கோபிநாத் said...
அய்யனாரை என் வன்மையாக கண்டிக்கிறேன்..;)///

வேண்டும் என்றால் நாலு அடி அடி.

********************

ஆமாம் ஆடுமாடு
எனக்கு அந்த நோயின் பெயர் மறந்துவிட்டது. அதான் அதை பற்றி குறிப்பிடவில்லை.

கண்டிப்பாக பார்த்துவிட்டு எழுதுங்க

தங்கள் வருகைக்கு நன்றி:)

*************************
கண்டிப்பாக பாருங்க மஞ்சூரார், சுல்த்தான் பாய், G3

**************************
பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கண்டிப்பாக பாத்துவிட்டு எழுதுங்க!!

///நாம பாக்கறதில்லைன்னா நல்ல படம் இல்லாம போயிடுமா என்ன?///

அவ்வ்வ் நான் எங்கேயாவது நல்ல படம் தமிழில் வருவது இல்லை என்று சொல்லி இருக்கேனா? இந்த படம் தமிழில் வராது என்றுதான் சொல்லி இருக்கேன்.

*****************************
நன்றி மங்களூர் சிவா

*******************************
CVR
///அப்பா அம்மா செல்லும் போது வரும் பாடல் என் மனதை உருக்கிவிட்டது.பாடல் ஓடும் போது எனை அரியாமல் என் கண்களில் கண்ணீர்!!
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி!! :-)///

ஆமாம் தம்பி மிக அருமையான பாடல் அந்த + அந்த குரல் ஹிந்தி தெரியாததால் புரியவில்லை, பாடல் என்பதால் சப்டைட்டிலை படிக்கும் முன்பு வேறு மாறிவிட்டது.

***************************
Bee'morgan said...
உங்க பதிவை படிக்கும் போதே படம் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை வருது. பதிவுக்கு நன்றி. இது போன்ற படங்கள் பாரப்பதற்காகவே சீக்கிரம் ////

நன்றி Bee'morgan . எனக்கும் சொல்லி தாங்க:)))

******************************
வெங்கட்ராமன் said...
///நம்ம கிட்டையும் நல்ல சரக்கெல்லாம் இருக்கு தல. . . .///

நீங்க சொல்வது சரிதான் அவர்களின் பாடல்களில் உடலுறவை மட்டும்தான் காட்டவில்லை மீதி எல்லாத்தையும் காட்டிவிட்டார்கள். தமிழில் நல்லபடங்கள் இருக்கிறது யார் இல்லை என்று சொன்னது ஆனால் இதுபோல் படம் எடுக்க தைரியம் வேண்டும்!!!

************************
தம்பி said...
///அடடா என்ன தத்துவம் இதுக்குதான் தலைமைச்சீடர் வேணும்னு சொல்றது.///

சொல்லு:)))

**********************
இராம்/Raam said...
தமிழ் படங்களிலே ரொம்பதான் எதிர்ப்பார்க்கீறிங்க.... :(///

அப்படி எல்லாம் இல்லீங்க ஒரு ஆதங்கம் தான்!!! ஆமாம் நீங்க நான் எதை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னீங்க :(((((

*************************

said...

உங்க விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு. அவசியம் படத்த பார்த்துடனும்ன்னு இருக்கேன்.

said...

நல்லதொரு விமர்சனம் - தமிழிலும் நல்ல படங்கள் வருகின்றன. இதுவும் வரும். சில படங்கள் பார்த்த உடனே மனதை உருக்கி விடுகின்றன. அவைகளில் இதுவும் ஒன்று. நான் ஹிந்திப் படங்கள் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. ம்ம்ம்
(நானும் உங்களைப் போன்றதொரு கருப்புத் தமிழன் தான்)