Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Sunday, August 2, 2009

டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி

டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி ஸ்கூலில் படித்ததை நினைக்கும் பொழுதே ஒரு சிறு புன்னகை வருகிறது, எத்தனை இனிமையான காலங்கள்.எங்கள் ஊரில் இருக்கும் சுத்துவட்டராத்துக்கும் அல்லது பதினெட்டு பட்டிக்கும் ஒரே ஸ்கூல் சுவாமி தயானந்தா மேல் நிலைப்பள்ளி சுருக்கமாக சு.த.மே.நி.பள்ளி சுற்றிலும் இருக்கும் கிராம மக்கள், ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்குதரமான கல்வி இலவசமாக வழங்கி வருகிறது.

ஒன்னாவது முதல் ஐந்தாவது வரை கீத்து கொட்டகைதான் அதன் பிறகு 6 வது முதல் ஒட்டு கட்டிடம் அதனால் எப்படா அந்த கிளாசுக்கு போவோம் என்று இருக்கும். கரு நீலகலர் டவுசர், வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்க சீருடை,ஆனால் எப்பொழுதும் அது வெள்ளை கலராக திரும்பி போனது இல்லை, சர்ப் எக்சலுக்கு வரும் விளம்பரத்தில் சிறுவன் மழை சேறு எல்லாம் அப்பி போவது போல் அது எப்பொழுதும் ஒரு வித காக்கி கலரில் தான் இருக்கும்.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு போவதும் திரும்ப வருவதுமே ஒரு ஜாலிதான் கொஞ்ச நாள் வரை ஆள் வைத்து சைக்கிளில் விட்டு வர செய்தவர்கள் இனி தேவை இல்லை இது ஊரை வித்துட்டு வந்துடும் என்பதாலோ என்னவோ கொஞ்ச நாட்களில் நிறுத்திவிட்டார்கள், அதனால் என்ன நடராஜாதான், ஜிப் வெச்ச ஜோல்னா பையை முதலில் முன்பக்கமாக கழுத்தில் தொங்கவிட்டு அதன் இரு பக்கத்தையும் கைகளுக்கு இடையில் அழுத்தி பிடிச்சுக்கிட்டு பையே அப்படியே பின்னாடி கழுத்து வழியா போட்டால் ஷோல்டர் பேக் மாதிரி ஆயிடும் அதுமாதிரி போட்டுக்கிட்டு போவோம் நடையில் ஒரு அலட்சியம் ஒரு ஸ்டைல் இருக்கும் அவை பெரும்பாலும் ரஜினியை இமிடேட் செய்வது போல் இருக்கும், சில சமயம் அந்த வழியாக வரும் மாட்டு வண்டியில் பைய மாட்டிவிட்டு அந்த வண்டி பின்னாடி வவ்வால் மாதிரி தொங்கிக்கிட்டு வருவோம்.

பள்ளிகூடத்தில் பேசிய பேச்சுக்கள்
டேய் நீ உட்டியாடா? இல்லடா, நீ உட்டியா?இல்லடா டேய் நீ உட்டியா?இப்படி ஒரு விசாரனை போகும், எவனும் ஒத்துக்கமாட்டானுங்கஇங்க வாங்கடா இப்ப பாரு கண்டுபிடிக்கிறேன் வட்டமா நில்லுங்கடான்னு நிக்க வெச்சு வரிசையா இப்படி சொல்லனும் ”ஆடு, மாடு, பசு,குசு” அவ்வ் என்னிடமே முடியும், இல்ல இல்ல திரும்ப கடைசியா ஒரு தடவை என்று இந்த முறை உசாரா அடுத்தவனிடம் இருந்து திரும்ப ஆரம்பிக்கும் ”ஆடு, மாடு, பசு, குசு” டேய் நீதான் டா விட்டவன் என்று யாரையோ ஒருவனை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம், லேசா சத்தம் மட்டும் வந்து இவன் தான் என்று தெரிஞ்சிடிச்சிஅவன் அவ்வளோதான் காலி அடுத்த ஒருவன் என்னைக்கு இவனை விட கொஞ்சம் சத்தமாக விட்டு மாட்டுறானோ அதுவரை அவன் பெயர் குசுவண்டி அல்லது குசுவுனி!

யாராவது மொட்டை போட்டுக்கிட்டு வந்துட்டா இந்த ரைம்ஸ் கண்டிப்பா இருக்கும்
“மொட்டையும் மொட்டையும்
சேர்ந்துக்கிச்சாம்
முருங்க மரத்துல ஏறிக்கிச்சாம்
கட்டெறும்பு கடிச்சிச்சாம்
வால் வால்ன்னு கத்துச்சாம்”

அதுபோல் எவனாவது டூ விட்டால் போடா இவரு பேசலைன்னா எங்க ஊட்டு கோழி முட்டைவுடாது பாரு போடா! அதுபோல் அடுத்த வார்த்தை ”டேய் அன்னைக்கு நான் வாங்கி கொடுத்த முறுக்கு, ஐஸ் எல்லாம் வாங்கி கொடுடா, சூடு சொரனை வெட்கம் மானம் இருந்தா எல்லாம் இப்ப வந்தாவனும்.”

”டூ டூ டுப்பாக்கி
போலீஸ் காரன் பொண்டாட்டி
சவுக்கார கட்டி
கொண்டுவாடி ரொட்டி” இது டூ விடும் பொழுது பாடப்படும் ரைம்ஸ்.

டூ விட்டவனோடு எவனும் சேரக்கூடாது டேய் அவன் என் கூட சண்டை இனி அவன் கிட்ட பேசுனா என்கிட்ட பேசாத! நீ என் ஆளா அவன் ஆளா? இப்படி கட்சி பிரிப்பது என்று ஜாலியாக இருக்கும்.

எவனாவது விளையாட்டில் தோற்றுவிட்டால்
”தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி தொட நடுங்கி
எறுமை மாட்டு மயிர் புடுங்கி” இப்படி ஒரு ரைம்ஸ்

சிலேட்டு குச்சி, பேனா கானும் என்றால் டேய் எடுத்தவன் கொடுத்துடுங்க இல்ல இப்ப வீட்டப்பத்தி கன்னாபின்னான்னு திட்டப்போறேன் என்றதும் வரும், அதுபோல் என்ன டா நீ எடுத்தியா என்று கேட்டா இல்ல வேணும்னா நீ எடுத்தவனை திட்டிக்க என்பார்கள்.

ஏப்ரல் ஒன்னாம் தேதி யாரு சட்டையிலாவது மை, காக்கா பீன்னு சொல்லி ஏமாற்றி விட்டு ஏமாந்தியா ஏப்ரல் ஃபூல் என்று கோரஸ் பாடுவது, எவன் மேலயாவாது காக்கா ஆய் போய்ட்டுன்னா மற்றவர்கள் கொடுக்கு வெச்சுக்கனும் இப்படி சின்ன சின்ன சேட்டைகள் நிறைந்தது பள்ளி நினைவுகள்.

தொடர் எழுத அழைத்த கலையரசனுக்கு நன்றி! மேலும் ஸ்கூல் சேட்டைகள் பற்றி முன்பு எழுதியது ஜாலியாக இருக்கும்

http://kusumbuonly.blogspot.com/2009/04/blog-post.html

http://kusumbuonly.blogspot.com/2007/11/blog-post_11.html

நானே மிகவும் தாமதமாக விளையாட்டில் பங்கெடுப்பதாலும், நண்பர்கள் பலர் தொடர்விளையாட்டால் டயர்ட் ஆகி இருப்பதாலும் நான் யாரையும் கூப்பிடவில்லை! மன்னிக்கவும்!

Tuesday, June 2, 2009

எப்பூடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

இது சந்தோஷ் கடன்...

நமக்கு இந்த கடன் என்றாலே அலர்ஜிங்க அதன் பாதிப்பு ரொம்ப அதிகம் என்பதால் சில மாதங்களுக்கு முன் சந்தோஷ் மாப்பி என்னை தொடர் பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார். சிலபல காரணங்களால் எழுதமுடியவில்லை இருந்தாலும் அவர் அழைப்பை ஏற்காமல் இருப்பது சரி இல்லை என்பதால் முதலில் அவர் கடனை முடித்துவிடுகிறேன். இளைஞர்கள் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து எழுதியிருந்தார் அதுமாதிரி நானும் எழுதனும் என்றார்...



ஓட்டு போடுவது என்பது ரொம்ப முக்கியம், அதுவும் நல்ல பதிவுகளுக்கு ஓட்டு போடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழ்மணத்திலும், தமிழிஸிலும் ஓட்டு போடுவதால் பதிவுகளை அதிகம் பேர் படிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஓட்டு போடுங்க, ஓட்டு போடுங்க , ஓட்டு போடுங்க:))(மாப்பி நீ சொன்னது மாதிரியே அனைவரையும் ஓட்டு போட சொல்லிட்டேன் மாப்பி)



********************
இனி சஞ்சய் கடன்...
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னமோ கூரியரில் வந்தமாதிரி கேள்வி கேட்குறீங்க, என் முழு பெயரான சரவணவேல் முருகனின் பெயர் என்பதாலும் அழகு என்ற சொல்லுக்கு முருகா என்ற மீனிங் இருப்பதாலும் இந்த பெயர் வந்தது. பிடிக்கும்


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அம்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணத்துக்காக அலைந்த அன்று...


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கல்லூரியில் விழுந்து விழுந்து படிக்கும் நண்பர்களை விட அதிக மார்க் வாங்கும் பொழுது அவர்கள் சொல்வார்கள், டேய் உனக்கு ஏன் மார்க் அதிகம் கிடைக்குது தெரியுமா? உன் கையெழுத்தால் தான் என்பார்கள்.

பெயில் ஆக்கினா திரும்ப இந்த கையெழுத்தை பார்க்கவேண்டி இருக்குமே என்பதால் அதிகமார்க் போட்டு பாஸ் ஆக்கிவிடுகிறார்கள் என்பார்கள்.

அப்படி இருக்கும் என் கையெழுத்து இன்று எழுதியதை இரண்டு நாள் கழிச்சு பார்த்தா எனக்கே புரியாது...


4).பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் விரால் மீன் வறுவல்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

மேல்தட்டு மக்களுடன் என்றால் மிகவும் யோசிப்பேன்... நம்மை மாதிரி பய புள்ளைங்க என்றால் உடனே வச்சுக்குவேன்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சுற்றிலும் கோபியர் கூட்டம் என்றால் குட்டையில் கூட குளிக்க பிடிக்கும் :)


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆணா பெண்ணா என்பதை பொருத்து பதில் மாறும். ஆண் என்றால் மோட்டுவளைய பார்ப்பேன். பெண்ணாக இருந்தால் நான் சொல்லும் பதிலை பார்த்து சிரிக்காம இருக்கனும் சரியா! ஆபிஸ்க்கு பிரிண்ட் செய்யவரும் லெபனிஸ் பெண்களையும், ரஸ்ய அழகிகளையும் கண்களை மட்டுமே பார்ப்பேன். (ஒவ்வொரு ஊருக்கும் ஒன்னு ஒன்னு ஸ்பெசல் போல! இருந்தாலும் நான் நல்ல பிள்ளை சாமியோவ்வ்வ்வ்)


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது---கோபம்

பிடிக்காதது---கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

கமலை ஏன் பிடிக்கும் என்றால் நடிப்புக்காக என்று சொல்லலாம், மனைவிக்கிட்ட பிடித்த விசயம் ஏன் அவர்களை பிடிக்கும் என்று ஆராய்வது அபத்தமாக தோன்றும்... ஓஷோ சொன்னது ...”If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.”

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

குடும்பத்தோடும் நண்பர்களோடும்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

எப்படி இப்படி எல்லாம்? முடியல...


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒரு பிகரை பார்த்துக்கிட்டு இருக்கேன்...


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இப்பொழுது இருக்கும் அதே கருப்பு கலரில்...எல்லா பொருட்களிலும் கருப்புக்கு ஒரு கம்பீரம் இருக்கும் BMW கருப்பு கலர் கார், கருப்பு கலர் பைக், கருப்பு கலர் பேனா இப்படி பல ... ஆனால் தோலில் மட்டும் கருப்புக்கு மரியாதை கிடையாது.


14.பிடித்த மணம்?

தலைகுளித்துவிட்டு பெண்கள் தலையில் வைக்கும் சந்தனமுல்லையோடு மரிக்கொழுந்து வாசம் இருந்தாலே...ம்ம்ம்ம்ம்ம் நரம்பு எல்லாம் முறுக்கேறும்!


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

இதை அவர்களும் படிப்பார்கள் அந்த காரணம் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் நேசிப்பதற்கு அழகு


நாமக்கல் சிபி

அனுஜன்யா

மகேஷ்

ஆதிமூலகிருஷ்ணன்


மற்றவர்களை பரிசலும் மற்ற நண்பர்களும் கூப்பிட்டுவிட்டார்கள்...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?



17. பிடித்த விளையாட்டு?

உள்ளேவா வெளியேவா?


18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, ஆனால் போஸ் கொடுப்பவர்:)


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கருத்து கந்தசாமியாக இல்லாமல் இருக்கும் படங்கள் பிடிக்கும்...


20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்


21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம்---சிலு சிலுக்கும் காற்றோடு வரும் சாரல், மழை விட்டதும் தேங்கி கிடக்கும் தண்ணியில் ஆட்டம் போடும் குழந்தைகள்., கரண்ட் இல்லாமல் அரிக்கேன் வெளிச்சத்தில் சாப்பிடும் சாப்பாடு, படுக்கும் தரையில் இருக்கும் ஒரு வித சிலீர் சில்லுப்பு, குளித்து முடித்து தலை துவட்டாத மரங்கள் என்று பல காரணங்களுக்காக மழைகாலம் ரொம்ப பிடிக்கும்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புலிநக கொன்றை


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பொழுதும் ஓஷோ


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ச்ச்ச்!

குழந்தையின் அழுகை சத்தம், தகரத்தை டர டரன்னு அறுக்கும் சத்தம்.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய்


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சமா கிரியேட்டிவாக யோசிக்கும் திறமை...


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நடத்தையில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு பெண் இவன் தான் காரணம் என்று முழு பழியையும் ஆடவனின் மீது போடும் பொழுது. உதாரணம் கொடுக்கலாம் ஆனால் விரும்பவில்லை.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

மை டியர் குட்டிசாத்தான்


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிம்லா


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இல்லை என்று கேட்டபர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கனும் என்று ஆசை!


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி ஒன்றும் இல்லை...


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

:) :(


நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

******************
இது கண்ணன் கடன்
அமீரகத்தில் இருக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் சேர்ந்து பழய பதியவர்களுக்கு ட்ரீட் தரவிரும்புவதால் அவர்கள் சந்தோசத்துக்காக நண்பர்களும் வாசகர்களும் கராமா சிம்ரன் ஆப்ப கடைக்கு எதிரில் இருக்கும் பார்க்குக்கு வந்துவிடவும்.
நாள்: வெள்ளி கிழமை
நேரம்: மாலை 6 மணி

Friday, October 24, 2008

துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசு
அனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர் பயிற்சிக்காக வந்தவர் என்று சொல்வார், அங்கு அவர் அண்ணன்,அண்ணி இருவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் அங்க தமிழ் ஆட்களை கண்டால் சிங்களருக்கு பிடிக்காது மிகவும் கொடுமை படுத்துவார்கள்
என்று சொன்னது நினைவு இருக்கிறது. மேலும் அங்கு நடக்கும் சண்டைகள் பற்றி விளக்கமாக சொல்வார். அவர் கண் புருவத்தின் மேல் கருப்பாக காச்சி போய் இருக்கும் என்ன என்றால் துப்பாக்கி டிரிகர் குறிபார்க்கும்
பொழுது அது கண்ணை அழுத்தி அழுத்தி அந்த இடம் காய்சிபோய்விடும் என்றார். இதனால் தான் பலரும் போலீஸில் பிடிபடுவார்கள் என்று சொல்வார்.

துபாயில் இருந்து டிராண்சிட் பிளைட்டில் வந்த பொழுது 4 மணி நேரம் ஸ்ரீலங்காவில் இருக்க நேரிட்டது, தாழ்வாக விமானம் பறந்த பொழுது அந்த நாட்டின் அழகு ஈடு இனை இன்றி இருந்தது. சண்டை மட்டும் இல்லை என்றால் சுற்றுலா தலங்களில் முதன்மையாக வருவாய் ஈட்டும் வாய்பு உள்ள நாடு!

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

தமிழீழம் சீக்கிரம் மலரவேண்டும் ஆனால் அப்படி மலரும் பொழுது தமிழ் மக்கள் அதை கொண்டாட இருக்கவேண்டும்,இப்பொழுது நடக்கும் சண்டைகளை பார்த்தால் குறைந்தது அதிகார பகிர்வு மூலம் அதிகாரத்துக்கு வந்தாவது உயிர்பலியை தடுக்கவேண்டும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

http://www.lankasrinew.com/

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரசியல் அரசியல் அரசியல்!, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கொடுக்கும் குரல்கள் சீசன் பிஸினஸ் போல் சீசன் அரசியல்!

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

சொல்ல வார்தைகள் ஏதும் இல்லை! காலேஜில் படிக்கும் பொழுது பிரபாகரன் படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அந்த அளவுக்குஅவரை பிடிக்கும், சில வருடங்களுக்கு முன்பு பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின் பொழுது அவருடைய செக்யூரிட்டி இருவர் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருந்தார்கள் அது எக்ஸ்ரே கிளாஸ் என்றும் அது போல் இந்திய தலைவர்களுக்கு கூட பாதுக்காப்புகிடையாது என்றும் சொன்னார்கள், அப்பொழுதும் முதன் முதல் வான் வழி தாக்குதல் நடத்திய பொழுதும் இருந்த மகிழ்ச்சி, பெருமை எல்லாம்கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது, இப்பொழுது எதைப்படித்தாலும் புலிகளுக்கு பின்னடைவு என்றே செய்திகள் வருகிறது.தமிழ்ச்செல்வன் இல்லாத குறை நன்றாக தெரிகிறது. பழயபடி புலிகளின் கை விரைவில் ஓங்க வேண்டும்.

மூன்று பேரை அழைக்கவேண்டும் என்பது தூயாவின் கட்டளை!

1) இலங்கை அரசியலை பற்றி மிகுந்த அனுபவம் உடையவரும், பிரபாகரனை நேரில் சந்தித்தவருமான ஆசிப் அண்ணாச்சியின் அப்பா திரு. அப்துல் ஜப்பார் http://smabduljabbar.blogspot.com/ (அண்ணாச்சி அப்பாவுக்கு கேள்வியை அனுப்பி பதில் வாங்கி போடுங்க, அவுங்க அனுபவத்தில் சொல்வது சிறந்ததாக இருக்கும்).

2) பினாத்தல் சுரேஸ் அவர்கள் இவரின் அரசியல் நிலைப்பாடு வித்தியாசமாக இருக்கும்.

3) பாரி அரசு அரசியல் பதிவுகளில் அதிரடி போடும் இவர் கொஞ்சம் நாட்களாக எழுதாமல் இருக்கிறார் அவரும் இதைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

Tuesday, October 14, 2008

தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!

பரிசல்காரன் தாங்கள் அருமையாக எழுதுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் தாங்கள் எழுதிய கடந்த சில பதிவுகள் என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!

1) தாங்கள் எழுதும் பதிவுகள் வர வர பெரிதாகிகொண்டே போகிறது.
2) அப்படி எழுதிய பதிவை என்னை படிக்க வெச்சது( என்னை எழுத அழைத்ததால்)
3)படிக்க வெச்சது மட்டும் இன்றி இம்மாம் பெரிய பதிவை என்னை எழுத வெச்சது.

பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.

இனி உங்கள் கேள்விகளுக்கு பதில்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது நினைவு இல்லை வீட்டுக்கு அருகிலேயே சித்தப்பாவின் டூரிங் டாக்கிஸ் இருந்ததால் தினம் படம் தான்.நினைவு தெரிந்து பார்த்த படம் என்று சொல்வதை விட விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ் கும்பகோணம் விஜயாவில், படம் பேருக்கு ஏத்தமாதிரி கணுக்காலுக்கு மேல கூட காட்டவில்லை. தியேட்டரில் மூட்டைபூச்சி கடி அதனால் வீக்கத்தை உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -ஷார்ஜா கான்கோர்டில்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து பொல்லாதவன் படம் ஒரிஜினல்பிரிண்டில் பார்த்தேன். என்ன உணர்ந்தேன் என்றால், வயிறு புல் ஆனது போல் உணர்ந்தேன் மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா!
வீரம் விளைஞ்ச மண்ணு- எப்படி தாக்கினுச்சின்னு சொல்றேன். அன்று வழக்கம் போல் காலேஜ்க்கு போய் எல்லா புரொபசரும்ஒழுங்கா வந்து இருக்காங்களான்னு ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம். நான் பேசிக்கா நடக்க அலுப்பு படும் சோம்பேறி,அதனால் ரயிலை விட்டு இறங்கியதும் தஞ்சை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இருக்கும் ராஜராஜன் தியேட்டருக்கு போகலாம் விஜயகாந்து படம் ரிலீஸ் ஆகி இருக்கு போகலாம் என்றேன், நாங்க மொத்தம் 20 பேர் சரி என்று வந்தார்கள் படம் போட்டு அரை மணி நேரம் கூட ஓடவில்லை,அத்தனை பேரும்போட்டு கும்மி எடுத்தானுங்க. அன்னைக்கு விட்டது விஜயகாந்து படம் பார்ப்பதை.ரொம்ப தாக்கிடுச்சு:(

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன். நம் பிளாக்கர் தமிழ் சினிமா அவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்கிறேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன். சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம் , அடிக்கடி அதோட டிக்கியில் கொசு கடிச்சுது போல அடிக்கடி டிக்கியில் அடிச்சு அடிச்சு டான்ஸ் ஆடினது பாருங்க ம்ம்ம் செம பாட்டு செம டான்ஸ்!(கடைசி வரை அந்த கொசு அடிப்பட்டுதா இல்லையான்னு தெரியலை) பாட்டை பற்றி விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(ஒரு நேரத்தில் ஒரு கேள்வி கேட்டாலே பேபேன்னு முழிக்கும் ஆள் இப்படி வரிசையா கேட்டா எப்படி?)

நேரடி தொடர்பு இருந்தது, சேது படத்து தயாரிப்பாளர் குடும்ப நண்பர் அதுக்காக படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா? பாலா திரும்ப எங்க ஊருக்கு படம் எடுக்க வந்தால் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? இப்ப தமிழ் மேம்பட பிளாக் எழுதுவது போலவா!!!:)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள். ராகுவில் ஜே.கே ரித்திஸ் இருப்பதால் அடிக்கடி நல்ல காமெடி படம் கிடைக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நோ பிராபளம், யாரடி நீ மோகினி படத்தில் நடிச்ச அந்த குட்டி பொண்ணு போட்டோவை வெச்ச ஒரு வருடத்தை ஓட்டிவிடலாம்.தமிழர்களுக்கு என்ன ஆகும் பணம் மிச்சம் ஆகும், பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.

இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்

1)அகில உலக குறும்பட வித்தகரும், குறும்பதிவரும் ஆன -- அண்ணன் உண்மை தமிழன் (உங்க பெயருக்கு பின்னாடி நீங்க போடும் நம்பர் தெரியவில்லை கோச்சுக்காதீங்க)

2) சிங்கப்பூர் தமிழ்குடிதாங்கியும், அநியாயத்துக்கு எதிரா பொங்கும் பொங்கல்பாண்டியும், பதிவர் மாநாடு ஆர்கனைசரும், சிங்கப்பூர் பதிவர் சங்க போர் வாளும் ஆன நண்பர்- ஜோசப் பால்ராஜ்

3) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மது மதி

4) ஷங்கரின் அடுத்தப்படத்துக்கு கேமிரா மேன் ஆக வேலை செய்யப்போகிறவரும், நோய்யினில் விழுந்தவரும், வலையுலக மார்கண்டேயனுமான நந்து தாத்தா of நயன்தாரா

5) ஆராய்சி கட்டுரையும், அறிவியல் சிறுகதையும் எழுதும் இளம் சைன்டிஸ்டும் ,விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன்

Tuesday, July 29, 2008

A for அசின், B for பிபாசாபாசு, C for சாய சிங், D for தீபிகாபடு கோன்

டேய் நாம படிக்கும் பொழுது ஸ்கூலில் A for Appile , B for Ball, C for Cat ன்னுதானேடா சொல்லி கொடுப்பாங்கஅது எப்படா C for Catch ஆனது என்று ஒரு காமெடி தூள் படத்தில் வரும்... அது போல எனக்கு பிடித்த சைட் பேரை சொல்லனும் என்றால்

A for அசின்,
B for பிபாசா பாசு
C for சாய சிங்,
D for தீபிகாபடு கோன்

என்றுதான் நான் சொல்லனும் அப்படி சொன்னா அடிக்கவந்துடுவீங்க இருந்தாலும் முடிந்த வரை நல்ல வெப்சைட்டா சொல்லி இருக்கேன் ஏதும் தேறுதான்னு பார்த்துக்குங்க.

A-- போட்டோசாப் பற்றி பல உபயோகமான பாடங்கள் இருக்கும் இடம் இது

A-- வர போகும் புது ஆங்கில பட டிரைலர் தமிழே அரை குறையாதான் தெரியும் இதுல உனக்கு ஆங்கில பட டிரைலரா என்று எல்லாம் கேட்க கூடாது!

B-- அழகான புகைப்படங்கள் இங்கே இருக்கும் டிசைனிங் செய்யும் பொழுது இங்கே இருந்து படங்களை எடுத்துக்கொள்ளாம்.

C-- இலவசமாக MP3 பாடல்களை இறக்குமதி செய்ய இங்கே போகலாம்.

D-- வெப்சைட் செய்யும் பொழுது தேவைபடும் ஜாவா ஸ்கிரிப்ட் மெனுவை ஜாவாவில் 90% மார்க் வாங்கிய(5 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதி அதில் 4 மதிப்பெண் வாங்கினேன்) மக்கு மாணவர்களுக்கும் ஈசியாக புரியும் படி ரெடிமேடாக இருக்கும் இடம்.


D-- புது ஆங்கில படங்களை DVD தரத்தில் பார்க்க

E--இ இ இ ஒன்னும் தெரியவில்லை Enemies of kusumban .காம் என்று புச்சா ஒன்னு ஓப்பன் செஞ்சு அதுல என்னை பார்த்து ரித்தீஸ் என்று சொன்னவங்களை காலி செய்யும் ஐடியாவில் இருக்கேன்.


F-- விளையாட்டு தளம்

G--வெப்சைட் ஹோஸ்ட் செய்ய, டொமைன் புக் செய்ய அடிக்கடி போகும் தளம்.

H-- இதுல ரொம்ப ஈசியாக HTML, PHP போன்றவற்றை படிக்கலாம்.

I-- இங்கிருந்துதான் வெப் டிசைன் செய்ய படங்களை சுடுகிறேன்.

J-- ஜாங்கிலிமாங்கிலி. காம்

k-- மிகவும் எளிமையாக புரியும் படி Flash பற்றிய பாடம் இவரிடம் இருக்குங்க.
l--எத்தனையோ டெஸ்ட் எழுதி இருப்பீங்க இதையும் கொஞ்சம் எழுதுங்களேன்.

M-- 3D மேக்ஸ் பற்றிய வலைதளம்

N--ஒன்னியிம் இல்லை

O-- நான் அடிக்கடி நுழைந்து கேள்வி கேட்கும் இடம், ரொம்ப சின்ன விசயமாக இருந்தாலும் பொருமையாக சொல்லி தருவார்கள்.கண்டிப்பாக பதில் கிடைத்துவிடும்.


O- இதுக்கு என் பிளாக்கிலே லிங் இருந்தாலும் இங்க ஒருதபா கொடுத்துக்கிறேன்.

இதுக்கு மேலே ABCD மறந்துபோச்சுங்கோ!!!

டிஸ்கி1: பல பல “நல்ல” வெப்சைட்டுகளை இங்கே தடை செய்துவைத்து இருக்கிறார்கள் அதனால் மேலும் பல வெப்சைட் லிங்கை தர முடியாததுக்கு வருந்துகிறேன்

ஞானவேட்கைக்கு தீனி போடும் முயற்சி அது இதுன்னு பொய்வார்த்தைகள் இருந்ததால் அதை எல்லாம் டெலிட் செஞ்சுட்டேன்!!!

மூன்று பேரை கூப்பிடனுமாம்

1) lotto tickets
2) lottery results
3) lotto 649


மேலே உள்ள நபர்கள் வெகுகாலமாக பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்காங்க ரொம்ப நல்லவனுங்க ,கடமைவீரர்களான அவுங்களை எழுத அழைத்து வர ஒரு சிறு முயற்சி!

புதுகைதென்றல் யக்கோவ் நீங்க என்னை A for ஆப்பிள் என்றுதான் எழுத சொன்னீங்க. சரி அப்படியே எழுதிடலாம் என்று நினைச்சா எழுத வரமாட்டேங்குது,பிறகு என்ன செய்ய A for அசின் என்று தலைப்பு வெச்சதும் சும்மா சூப்பரா எழுத வருது. அசினுக்கு எம்புட்டு பவர் என்று தெரிஞ்சுக்கிட்டேன்.