இது வரை 22% குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை ஊருக்கு திரும்ப அனுப்பி விட்டார்களாம், வரும் இரு மாதங்களில் அது 45% ஆக உயரும் என்றும் சர்வே சொல்வதாக ரேடியோவில் சொல்லப்பட்டது. ஏன் இப்படி அனைவரும் மனைவி,குழந்தைகளை அனுப்புகிறார்கள் அப்படி என்ன பிரச்சினை?
பிரச்சினை ஒரு வழியில் வந்தால் பரவாயில்லை அனைத்து வழியிலும் வந்தால் என்ன செய்வது முதலில் தங்கும் இடத்துக்கே பிரச்சினை, முதல் அடி ஷேரிங் என்ற முறையில் குறைந்தவாடகையில் தங்கி இருக்கும் மக்களை குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்களாவை(வில்லா) வாடகைக்கு எடுத்து அதை பல ரூம் போல் தடுத்து வாடகைக்கு விட்டு வந்தார்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தார். ஒரு வில்லாவில் குறைந்த பட்சம் 15 குடும்பங்களாவது இருக்கும் இனி அப்படி இருக்க கூடாது ஒரு வில்லாவில் ஒரு குடும்பம் தான் வசிக்கலாம் ஷேரிங் செய்ய கூடாது இன்னும் 10 நாட்களில் காலி செய்யவேண்டும் என்று குறைந்த வாடகையில் வசித்து வந்தவர்களின் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுவிட்டது.
இங்கு ஷேரிங்கில் இருப்பதுக்கே மாதம் 35,000 தரவேண்டி இருக்கிறது ஒரு ஆள் தனியாக தங்க வேண்டும் என்றால் வில்லாவை வாடகைக்கு எடுக்க அம்பாணிதான் வரவேண்டும்.
மூன்று மாத வாடகை, ஒரு மாத கமிசன் என்று மொத்தமாக பணம் கொடுத்தால் மட்டுமே பிளாட்டில் வீடு கிடைக்கும். எங்கே போவது அவ்வளோ பணத்துக்கு என்று பல கிளம்புகிறார்கள்.
அடுத்த அடி இங்கு துபாயில் குறைந்த வாடகையில் (30,000)க்கு வீடு வேண்டும் என்றால் எல்லோரும் கை காட்டும் இடம் சத்வா என்று அழைக்க படும் இடம். அங்கு எப்படி குறைந்தது 75,000 பேராவது வசிப்பார்கள், குடும்பங்கள், பேச்சிலர் என்று அனைவருக்கும் வீடு கிடைக்கும் பகுதி சத்வா. இப்பொழுது அந்த பகுதி முழுவதையும் இடித்துவிட்டு ஜூமைரா கார்டன் ரெசிஸ்டன்ஸ்கட்ட ஆரம்பிக்க போகிறார்களாம், அதில் குடியேற வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 75 ஆயிரமாவது வாடகை கொடுக்க வேண்டி இருக்கும்.
அடித்த அடி
சாலிக் இது சாலைகளை காரில் கடந்து போகும் பொழுது கொடுக்க வேண்டிய வரி , ஒரு முறை கடக்க 45ரூபாய். குறைந்த வாடகைக்கு ஆசைப்பட்டு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஷார்ஜா சென்ற மக்களிடம் இருந்து பணம் வாங்க செய்யப்பட்டது, இது வரை இரு இடங்களில் இருக்கிறது இன்னும் 2 இடங்களில் வர போகிறது. இதுக்கு சொல்லபடும் காரணம் டிராபிக்கை குறைக்க என்று சொன்னாலும் அது நிஜம் அல்ல. காலியா இருக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஃபில்லப் செய்யவே என்று சொல்லப்படுகிறது. விடுமுறை நாட்கள் அல்லது விடிகாலை நேரங்களில் ஷார்ஜாவில் இருந்து துபாய் வர ஆகும் நேரம் 15 நிமிடம். ஆனால் காலை 6 மணிக்கு ஆபிஸ் கிளம்பினால் துபாய் வர ஆகும் நேரம்2 மணி நேரம் அது போல் மாலையும். 8 மணி நேர வேலைக்கு 4 மணி நேரம் டிராவலிங் டைம். இருந்தும் பரவாயில்லை என்று அங்கு போனவர்கள் ஒரு நாளைக்கு இனி 90ரூபாய்.
அடுத்த அடி விலைவாசி உயர்வு இரு மாதத்துக்கு முன்பு வாங்கிய 20 கிலோ அரிசி மூட்டையின் விலை 598ரூபாய், இன்று 1138 ரூபாய். அதே போல் ஆயில் 4 லிட்டர் பேக் விலை 218 ரூபாய், இப்பொழுது 402 ரூபாய். இப்படி அனைத்திலும் விலைவாசி எகிறி பறக்கிறது. இது போதாததுக்கு WAT இந்த வருட இறுதியில் இருந்துவர போகிறது.
பஸ்ஸில் வேலைக்கு போகலாம் என்றால் குறைந்தது 1 மணி நேரமாவது வரிசையில் நிற்கவேண்டி இருக்கிறது, சரி பணம் கொடுத்து யார் காரிலாவது லிப்ட் போகலாம் என்றால்அப்படி லிப்ட் கொடுப்பது சட்டவிரோதம் , போலீஸ் பிடித்தால் 50,000 ரூபாய் லிப்ட் கொடுத்தவருக்கு அபராதம்.
இங்கு என் ஆபிசில் வேலை பார்க்கும் ஆபிஸ் பாய் 1500 ரூபாயில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்பொழுது மாதம் 3000 வருவதாகவும் , வாடகை (ஒரு பெட் ஸ்பேஸ்)3500ல் இருந்துஇப்பொழுது 5000 ஆகிவிட்டதாகவும் சொல்கிறார் அவருடைய சம்பளம் 15,000ரூபாய். இவர் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு அறையில் குறைந்தது 20 பேர் இருப்பார்களாம் அனைவருக்கும்ஒரே ஒரு பாத் ரூம் காலை 3 மணியில் இருந்து ஒவ்வொருவருக்கும் 15 நிமிடம் வீதம் ஒதுக்கபடுமாம், போய் குளித்துவிட்டு வந்து படுத்து தூங்குவாராம் முன்பு 9,000 ஆயிரம் வீட்டுக்கு கொடுத்துவந்தவர் இப்பொழுது 6,000 கூட அனுப்ப கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.
இங்கு சுமாரான வேலையில் இருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு 45,000 வரை கொடுக்க படுகிறது, அது தனியாக இருக்கும் பொழுது போதுமானதாக இருந்தது எல்லா செலவும் 20,000 முடித்து25 மிச்சம் செய்யமுடிந்தது ஆனால் இனி குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்றால் செலவே 40,000வரை ஆகிவிடும்.
ஒரு சிறு பட்ஜெட் (குடும்பத்தோடு இருக்க) : சம்பளம் 4000 Dhs
வீட்டு வாடகை ஷேரிங்கில்(ஷார்ஜாவில்)-- 1500 Dhs (தனி வீடு என்றால் 2500 Dhs, சிங்கில் பெட் ரூம் வீடு என்றால் 3000 Dhs ஆகும்)
வாட்டர் & எலக்ட்ரிசிட்டி -- 200 Dhs
சாப்பாடு -- 500 Dhs
டிராண்ஸ்போர்ட் -- 600 Dhs
போன் -- 150 Dhs
இதர செலவுகள் -- 200 Dhs
--------
மொத்தம் 3150 Dhs
(1 Dhs = 11.65 Rs)
(அப்பாடா எவ்வளோ ஒரு பொறுப்பா பதிவு போட்டு இருக்கேன், கல்யாணத்துக்கு பிறகு குசும்பனுக்கு பொறுப்பு வந்துடுச்சுன்னு பாராட்டு மழைய ஆரம்பிங்க, வீட்டுல காட்டனும்ல்ல)