Tuesday, September 29, 2009

சிரிக்க! சிந்திக்க அல்ல!

புளியமரத்துக்கு பக்கத்துல இருக்குற ஒத்த கீத்துக்கொட்டாதான் எங்கூரு பஸ்ஸ்டேண்டு. அதுல இத்துப்போன தகரத்துல எந்த காலத்திலயோ எழுதுன பயணியர் நிழற்குடை போர்டுங்கற பேர சொமந்துக்கிட்டுருக்குது.போனமுறை தேர்தலப்போ வச்ச தண்ணிக்குடம் மண்பானை ஒடஞ்சு அங்கயே கிடக்கும். ஆனா ஒருநாளைக்கு நாலு தரம் ரோட்டுல மண்ணள்ளி தூத்திக்கிட்டு வர்ற பஸ்ஸுல ஏறதுக்கு எவனும் இருக்கறதுதான் கெடயாது.

பஸ்டேண்டுக்கு எதிர்க்க இருக்கற பொட்டிக்கடையை தண்டல்ல எடுத்து, சக்தி சின்னதா கெரசின் ஸ்டவ் வச்சு டீக்கடையும் சேத்து நடத்திட்டு இருக்கான். ராத்திரில படுத்துக்கறதுக்காக வச்சிருக்கற ரெண்டு கட்ட பெஞ்சுல ஒண்ண எடுத்து வெளில டீ சாப்பிட வர்றவங்களுக்குன்னு போட்டு வச்சிருப்பான். சில சமயம் சும்மா உக்காந்து பெஞ்சை தேச்சுட்டு போறவங்கள அடுத்த முறை உக்காரும்போதே எவனையோ திட்டுற கணக்கா சக்தி காறித்துப்புறதால அங்க உக்கார்றதுக்கு முன்னாடியே டீ சொல்லிட்டுத்தான் பெஞ்சுல உக்காருவாங்க.

சக்தியோட கடைக்கு தவறாம வர்ற ஆளுங்கள்ல முக்கியமானவன் கா.கா.பீ அவுங்க அப்பா அம்மா வெச்ச பேரு சுரேஸ்.ஆனா காலோஜூக்கு படிக்கப்போன பொறவுதான் ”ஸ்” வட மொழி எழுத்து என்பதை கண்டுபிடிச்சு இவனா இவனுக்கு வச்சுக்கிட்ட புதுப்பேரு. காகாபீ.

பழைய பேரு தேவலையா இருக்குதேன்னு யோசிக்கறவங்க காகாபீயோட அர்த்தம் கேட்டு மூக்குல விரலை வச்சு மூடிக்கிட்டு போவானுங்க. கார்லஸ் கார்மன் பீக்ஸ்கன் என்று மூன்று வெளிநாட்டு புரட்சி கதை எழுதறவங்க பேர சேத்து வெச்சுக்கிட்டு சுருக்கமா கேகேபீன்னு சொல்லிக்குவான். கே.கே.பீன்னாலும் காகாபீன்னாலும் மூஞ்சை சுளிக்குற ஊரா இருக்குறதால இவன் வருத்தப்படாதது ஆச்சரியம்தான். சிலசமயம் K.K.P சொன்னேன் என்று ஒரு சிகரட் வாங்கி வான்னு அடிக்கடி சின்னப்பசங்கள அனுப்பி வைக்கறப்ப அவங்க மூலமா கே.கே.பீ காக்காப்பீயா கொடி கட்டி பறந்துச்சு.

காகாபீ என்றதும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றது அவன் கையில் தெனமும் வச்சிருக்கற விதவிதமான தடியான பொஸ்தவம். ஒருநா கருப்பு சட்டை, தலையில் தொப்பி போட்டு தாடியோடு வாயில் அப்பத்தா குடிக்கும் சுருட்டோடு ஸ்டைலா போஸ் கொடுக்கும் ஒருவரோட அட்டை படம் இருக்கும், அடுத்த நாள் தொங்கு மீசை, வெட்டருவா மீசை என்று வித விதமான வெளிநாட்டுக்காரங்க போட்டோ அட்டை படமாக இருக்கும் புத்தங்கள் கையில் தவறாமல் இருக்கும். பேசுறப்ப சாதாரணமா வார்த்தையால த்தோயோளி, மானா பூனான்னு வார்த்தையை போட்டுத்தான் ஆரம்பிப்பான்.அந்த வகையில் முதல் புரட்சிக்கி வித்திட்டவன்.

கீழத்தெரு வடக்கு வூட்டுக்கார பய மாரி ஏழாவது வரைக்கும் படிச்சுட்டு அப்பனாத்தா பேச்ச கேட்டு படிப்ப விட்டவன். மாடுமேச்சுக்கிட்டு இருக்கான். சொந்தமா அடுத்த வருடத்திலாவது ஒரு எருமை மாடு வாங்கிடனும் என்று நோக்கத்துல இருக்கறதப் பாத்து அவன் மாமனே ஒரு மாட்டை இனாமா கொடுத்து அவர் பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தாரு. மாரி காகாபீயோட கொஞ்சம்நாள் ஸ்கோல்ல சேர்ந்து படிச்சதால நெறய்ய படிச்ச காகாபீக்கு ரசிகனாக மாறிட்டான்.

டீக்கடைக்கு காகாபீ வந்து உக்காந்திருக்கும்போது ஒடனே மாரி எழுந்து நின்னுப்பான். நிக்கலைன்னா டீ காசு மாரி தலையில வுழுந்துடும். ஆனா வுடாம காகாபீ, ”எலேய் மாரி! எதுக்கு எந்திருக்கிற.. நீயும் மனுசன். நானும் மனுசன். எதுக்கு இதெல்லாம், கைகட்டுறதுங்கறது அடிமைத்தனம்டா,குனியறது ஒரு குறீயிடுடா. அது இதுன்னு பேசிக்கிட்டே இருப்பான். ஒருதரம் மாரி கையில் வச்சிருந்து சினிமாப்படம் பாத்துட்டு இருந்த ஒத்தைப்பேப்பரை பார்த்துட்டு ”இந்த பேப்பர் பீ தொடைக்கக்கூட லாயக்கு இல்லை”ன்னு ஆரம்பிச்சு இந்தப்பேப்பரை நடத்துறவரை பத்தி அந்தப்பேச்சு பேசினான். அன்னிலேந்து வெறுங்கையில போண்டா தின்னாலும் திங்கறான் அந்த பேப்பரை வச்சி மடிச்சு கொடுத்தா தொடுறது போண்டாவை தொடுறது இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதியாலதான் இந்தியா குட்டிச்சுவராப் போனதாவும் அவர்களை அடிச்சு துரத்தினால் தான் நாடு வெளங்கும்ன்னும் காக்காப்பீ அடிக்கடி சொல்லுவான்.

ஒருதரம் மாரி ”யாரு இவரு? சுருட்டு குடிக்கிறவரு” ஒரு பில்டர் சிகரெட் வாங்க கூட காசு இல்லாதவரும் இம்மாம் பெரிய புக்கு எழுதியிருக்கிறாரு என்று காகாபீ கையில இருந்த பொஸ்தக அட்டையில் இருக்கறவரைப் பத்திக் கேட்டதும் சத்தம் போட்டு சிரிச்சான் காக்காப்பீ. சிரிச்சுக்கிட்டே ”ம்ம்ம் இவரை பத்தி தெரியாததால் தான்டா இன்னும் உன் தெருவுல எல்லா வூடும் அப்படியே குடிசையா இருக்கு”ன்னான்.

”ஏனுங்க! இவரு இலவச வீடு கட்டிதர்றாரா”ன்னதும் காக்காப்பீ சிரிச்ச சிரிப்பு மாரியை என்னமோ செய்தாலும் அதுக்கப்புறம் அவன்கிட்ட பொஸ்தவம் பத்தி எதுவும் பேசுறது இல்லை.

காக்காபீக்ட்ட ஒரு பத்து நிமிசம் பேசினால் அதில் ஒரு நொடிக்கு குறைச்சல் இல்லாம ஈயம்,ஈசம்,அடிமை, இதுல்லாம வேறு ஏதும் இருக்காது.மாரிக்கு கா.கா.பீ என்றாலே ஒரு புரட்சியாளன் அல்லது தேவதூதன் ரேஞ்சுக்கு அவனை வைத்திருந்தான். காரணம் கா.கா.பீ ஒருதரம் பேசுறப்ப கட்டினா உங்க சாதி பொண்ணைதான்டா மாரி கட்டுவேன், இல்ல பைபாஸ் ரோட்டில் இராத்திரி நிக்கும் ஒருவளை சீக்கு இல்லாதவளா பார்த்துதான் கட்டுவேன் என்று சொன்னது கூட காரணமாக இருக்கலாம்.

நேத்தைக்கு மொத நாள், பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு இலை வாங்கிட்டு வரச்சொல்லி மாரியை டவுனுக்கு அனுப்பினாரு காரைவீட்டுக்காரர். மாரி சைக்கிளில் டவுனுக்குப் போனவன் வெய்யிலுக்கு சாஸ்தியா இருந்ததால சர்பத் குடிக்க ஒரு கடைக்கு போனான். அந்த நேரத்துல எதிர்க்க காகாபீ மெத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னாடி கையில் இருந்த தடி பொஸ்தவத்தை பக்கத்து பொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு வராண்டாவில் நின்னான்,நேர்ல பார்த்தா காறித்துப்பி செருப்பால அடிக்கணும்ன்னு சொன்ன சாதிக்கார ஆளு முன்னாடி கும்பிடு போட்டுட்டு, அவர் ஏதோ சொல்ல சொல்ல கை கட்டி குனிந்து நின்று கேட்டுக்கிட்டு தலையாட்டி இருந்தான் காகாபீ.

புரட்ச்சியாம் புண்ணாக்காம் போங்கடா மயிறாண்டிகளா...என்று முனுமுனுத்துக்கிட்டு சர்பத்தை குடிச்சு முடிச்சான் மாரி

Sunday, September 27, 2009

ஸ்வைன் ப்ளூ சில சந்தேகங்கள்???


இங்கே நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ போன வாரம் வந்துவிட்டது, இவர்களும் பயந்து போய் அவர் கூட இருந்த அனைவருக்கும் ஒருவாரத்துக்கு மேல் லீவ் கொடுத்துவிட்டு, ஆபிஸ் பக்கம் வரவேண்டாம் என்று அனைவரையும் சொல்லி விட்டார்கள்.
அவரை இங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள், இங்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பது இல்லை என்று சொல்லி அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறார்கள், அங்கு சென்றதும் டாக்டர்கள் ரொம்ப கூலாக ஒன்னும் பயப்படவேண்டியது இல்லை, தனியாக இவரை ஒருவாரம் வைத்திருங்கள் இந்த மாத்திரைகளை எல்லாம் கொடுங்கள் சாதாரண ப்ளூ மாதிரிதான் இதுவும் சரி ஆகிவிடும். குழந்தைகள், கர்பிணிகளுக்குதான் பாதிப்பு அதிகம் கொஞ்சம் அதிகம் கேர் எடுத்துக்கனும் என்று சொல்லிவிட்டு மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார்கள், இப்பொழுது ஒருவாரத்தில் நல்ல அவருக்கு பரவாயில்லையாம், அடுத்த வாரத்தில் இருந்து வேலைக்கு வரலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க ஏன் இத்தனை பீதி? எது உண்மை?

இங்கு நேற்றுமுதல் ஒரு லோக்கல் கமெணிக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள், இங்கு இனி அந்த லோக்கல் கம்பெணிதான் ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்தை தயாரிக்க போகிறது. நம்மை விட மருத்துவதுறையில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று சொல்லமுடியாது அப்படி இருந்தும் இவர்களால் தயாரிக்கும் பொழுது நாம் ஏன் வெளிநாடில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்?

Wednesday, September 23, 2009

கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்

டரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!

எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர் விருது கொடுத்துவிடாதீங்க!

Friday, September 18, 2009

உன்னைபோல் ஒருவன் - விமர்சனம்

துபாயில் எப்பொழுதும் ஒரு நாள் முன்னதாகவே புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடுவதால், நேற்று இரவு 10மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு சென்றோம். கமல் படம் + வென்ஸ்டேயின் ரீமேக் என்பதால்கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார், இதில் பாட்டு வெச்சது பிளண்டர் மிஸ்டேக் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு ஒத்துவராது என்று ஆருடம் சொன்னவர்கள் முகத்தில் கரி, படம் பார்க்கும் நமக்கே ஒத்துவரும் ஒத்துவராது என்று தெரிகிறது என்றால் கமல் போல் 50வருடமாக சினிமாவில் வாழும் கலைஞனுக்கு தெரியாதா? படத்தில் பாட்டு கிடையாது. (இரண்டு இடங்களில் மட்டும் ஜானே அல்லா ஒரு நிமிடத்துக்கும் குறைவாக வருகிறது).


ராகவன் மறாராக மோகன்லால், ஹோம் செகரட்டரியாக லெட்சுமி(கொடுமை), இவர்கள் இருவரும் பேசும் இடங்களில் வசனங்கள் பட்டாசு, இங்கு தியேட்டரில் வசனத்துக்கு கைதட்டல் கேட்டது புதுமையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இரா.முருகன் வசனத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறார். பிளாக் ஹீயுமர் வகையில் மோகன் லால் லெட்சுமியிடம்பேசும் வசனங்கள் உங்களை அறியாமல் சிரிக்கவைப்பதோடு கை தட்டவும் வைக்கிறது, மிகவும் சென்ஸ்டிவானகளம் இந்த கதை, இதில் கத்தியில் நடப்பதுபோல் வசனங்கள் இரா.முருகனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங், நிச்சயம்இனி அடுத்து பெரிய பெரிய இயக்குனர்களோடு இவர் பணியாற்ற போவது உறுதி. சில இடங்களில் சறுக்கி இருக்கிறார். குஜராத் பிரச்சினை பற்றி தீவிரவாதி பேசும் வசனத்துக்கு தமிழக பி.ஜே.பியில் இருக்கும் நான்கு பேரும் இன்று படத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வென்ஸ்டேவையும் இதை ஒப்பிட்டு பார்த்து கருத்துசொல்வது தேவையற்றது, தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது, கடைசியாக உங்க பேர் என்ன சொன்னீங்க என்று நஸ்ருதின் ஷாவிடம் கேட்கும் காட்சி சிறப்பாக இருக்கும் இதில்அது மிஸ்ஸிங். படம் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடுகிறது.

சுருதி இசையும் பக்காவாக இருக்கிறது முதல் படம் போல் தெரியவே இல்லை, நடஷா ராஜ்குமார் மோகன் லாலிடம் இங்க தம் அடிக்கலாமா என்று கேட்கும் காட்சி போன்றவை ஒரு தேவையற்ற இடைசொருகள். இதுபோல் சின்ன சின்ன குறைகள் தான்.

கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:), பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகளை இடம் மாற்றம் செய்கிறோம் என்றுதமிழில் சொல் CM டீவி பார்த்துக்கிட்டு இருக்கார் என்று சொல்லும் இடம், இனி கடவுள் கையில் தான் இருக்கு என்று மோகன்லால் சொல்லும் பொழுதுCM அடா அடா அவர் ரொம்ப சிக்கலான ஆளாச்சே என்று சொல்லும் இடங்கள் எல்லாம் அருமை. ஆங்கிலத்தில் அதிகம் வரும் வசனங்களை தவிர்த்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

Tuesday, September 15, 2009

கார்ட்டூன்ஸ் 16-09-2009