ரெண்டு மூனு படத்துக்கு மிட் நைட் ஷோ காட்சிக்கு (1.15மணிக்கு) போய் வாங்கி வாங்கிட்டு வந்த அடியே மறக்காதப்ப சிறுத்தைக்கு போகலாமா வேண்டாமா என்று குழப்பத்திலேயே இருந்து கடைசியில் மன்மதன் அம்பு குத்தின புண்ணையும் ஒரு முறை பார்த்துக்கிட்டு தயங்கி தயங்கிதான் போனோம்..
சந்தானம் எண்ட்ரி ஆகி பேசும் டயலாக்கிலேயே வெட்டு போட ஆரம்பிச்சிடுறாங்க...படம் முழுக்க அவரும் கார்த்தியும் செய்யும் அலப்பறை செமயா இருக்கு. கிளைமேக்ஸ் வரை தியேட்டரில் நான் ஸ்டாப்பா சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தது. ரெத்தினவேல் பாண்டியனாகவும், ராக்கெட் ராஜாவாகவும் இவர் செய்யும் சேட்டை எல்லாம் அப்படியே அண்ணன் சூர்யா சிங்கத்திலும் , அபேஸ் பாண்டியனாகவும் நடிப்பதை பார்ப்பது மாதிரியே இருந்துச்சு. படத்தில் ஆந்திர வில்லனுங்க இல்லாமல் நம்ம ஊரு வில்லனுங்க மாதிரி மாத்தியிருந்தா இன்னும் அடி பட்டைய கிளப்பியிருக்கும்.
படத்தின் மைனஸ்
குளிர் ஜுரம் வந்தவன் மாதிரி கம்பளி போர்வைய போத்திக்கிட்டு வரும் வில்லனை பார்க்க சகிக்கவில்லை. ஒரு துவைக்காத பழய போர்வைய போத்திக்கிட்டு ராப்பிச்சைக்காரன் மாதிரி இம்சை செய்யிறான் என்றால் பவுடர் அடிச்ச பல்லி மாதிரி இந்த தமன்னா அடிக்கடி இடுப்ப காட்டி காட்டி எரிச்சலை கிளப்புது நமக்கு கொஞ்சம் கலர் கம்மியா இருந்தால்தான் புடிக்கும் போல. மத்தப்படி படம் பக்கா கமர்சியல்.
*****************
இனி மரபை மீறாமல் மற்றவர்கள் எழுதுவது போல் ஒரு பார்வை...
ஒருபுதுபடம் பார்த்தோம் என்றால் அதுக்கு முன் அந்த டைரக்டர் இயக்கிய, அந்த நடிகர் நடித்த படங்களை பற்றி ரெண்டுபத்தி எழுதிவிட்டு, இந்த படத்துக்குவருவதுதான் மரபு அதே மரபு இங்கேயும் கடைபிடிக்கப்படுகிறது...
பழயபடங்கள் ஒரு பார்வை:
பருத்திவீரன் படத்தில் அறிமுகம் ஆன கார்த்தி அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான படங்களில் எதுவும் நடிக்கவில்லை,ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் பருத்திவீரன் சாயல் இருந்தது... ஆனால் இந்த படத்தில் இரண்டுவேடங்கள், பல பெரிய நடிகர்களே அறிமுகம் ஆகி 20 படங்கள் கழித்துதான் இரண்டுவேடங்களில் நடிப்பார்கள்...சில நம்மால் நடிக்கவும் யோசிப்பார்கள், கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கிட்டு டபுள் ஆக்ட்டிங் என்று சொல்லிக்கிட்டவர்கள் பலர். ஆனால் இதில் கார்த்தி பாண்டியன் IPS ஆகவும், ராக்கெட் ராஜாவாகவும் உடல் மொழி( பாடி லாங்வேஜ்ஜை இப்படி சொல்லனுமாம்!), பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
காப்பி அடித்தல்:
(உ (பிள்ளையார் சுழி) IMDB யே துணை)
ஒரு படத்தை பார்த்தோம் என்றால் அது எந்த எந்த படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது என்று லிஸ்ட் சொல்வது முக்கியம், முக்கியமாக அந்த லிஸ்ட் கொரியன், ஈரானியன்,ஜப்பானியன், படமாக இருக்கவேண்டும். ) இந்த சிறுத்தையும் பல படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது. பாண்டியன் போலீசாக வரும் காட்சிகள் “தி போலீஸ்” என்கிற ஆங்கிலபடத்தில் இருந்தும், பிக்பாக்ட் காட்சிகள் “தீப் & போலீஸ் “ படத்திலிருந்தும் காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது. சப்பானிய மொழி படமான “சுமோவோ சுசுக்கியாக” படத்திலிருந்து முடிவு காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது. “மை பை சைக்கிள் வீல்ஸ்” என்ற ஒரு ஈரானிய படத்தில் வரும் ஒரு உடைந்த சைக்கிள் வீல்மாதிரியே ஒரு சைக்கிள் வீல் கார்த்திக் குடியிருக்கும் வீட்டின் மூலையிலும் கிடக்கிறது. கதைகளை தான் காப்பியடிக்கிறார்கள் என்றால் படத்தில் வரும் பிராப்பர்டியையும் காப்பியடித்து படத்தில் வைக்கிறார்கள். இதற்காகதான் நான் தமிழ்படங்களே பார்ப்பது இல்லை.
டெக்னிக்கல் பகுதி:
படத்தில் எதுவும் புதுசாக முயற்சி செய்யாமல் அதே ஆஸ்பிட்டல் சீன், அதே பெரிய பெரிய கத்திய வெச்சிக்கிட்டு இருக்கும் வில்லனுங்க,பிக்பாக்கெட்டை லவ் செய்யும் ஹீரோயின், உடைஞ்ச பாலத்தில் தொங்கும் கிளைமேக்ஸ் சீன் என்று எல்லாமே அந்த காலத்து படத்திலிருந்து பார்த்துக்கிட்டு வருகிறோம். இதிலும் அது எல்லாம் இருக்கு ஆனால் திரைக்கதையில் பரபரன்னு வேகம் காட்டியிருப்பதாலும் காமெடியாக போவதாலும் நமக்கு போர் அடிப்பது இல்லை.
ஆணீயம் பெண்ணீயம் இந்துத்துவா
படம் முழுக்க சந்தானம் & கார்த்தி அடிக்கும் காமெடிகள் ஏ வகையை சேர்ந்தவையாக இருக்கிறது அதுக்கு எல்லாம் சென்சார் போர்ட் ஒன்னும் சொல்லாமல் இருந்துவிட்டு,கிளைமேக்ஸ் சீனில் தமன்னா வில்லனிடம் ராக்கெட் ராஜா மயிறை கூட புடுங்க முடியாதுன்னு சொல்லும் டயலாக் மட்டும் கட் ஆகிவெறும் சைலண்டாக சைகையில் வருகிறது, இதன் மூலம் ஆண் எவ்வளோ கெட்டவார்த்தைவேண்டும் என்றாலும் பேசலாம்ஆனால் பெண் ஒரு வார்த்தைக்கூட பேசக்கூடாது என்று இந்த சமூகம் அவளை அமுக்கிவைக்கிறது.
படத்தில் வரும் வில்லன் சாமியார்கள் கூட இருந்து கஞ்சா குடிப்பது போல் காட்சி வைத்திருப்பதன் மூலம் இந்துக்களின் மனசை புண்படுத்திவிட்டார். அதுபோல் வில்லன் காதில்,கழுத்தில் எல்லாம் ருத்ராட்ச மாலை போட்டுக்கிட்டு இருக்கிறார் இதன் மூலம் ருத்ராட்ச மாலை அணிந்தவர்களை எல்லாம்கெட்டவர்களாக சித்தரித்து இந்துக்களின் மனசை புண்படுத்திவிட்டார்.
வில்லனை கடையில் கையில் இருக்கும் சக்கரம் மூலம் கொல்கிறார் கார்த்திக். சக்கரம் விஷ்ணுவின் குறீயிடு. ஆகையால் தேவை இல்லாமல்அந்த சீனை வைத்து அதர்மத்தை அழிக்க இந்து கடவுளே வருவார் என்கிறமாதிரி காட்சி வைத்திருக்கிறார். ஸ்டேசனுக்கு வெளியில்அமர்ந்து மிரட்டும் ஆட்களில் 5 பேரில் 3 பேர் முஸ்லீம் ஆகவே அங்கேயும் தன்னுடைய இந்துத்துவா புத்தியை காட்டியிருக்கிறார்.
சிறுத்தை பாய்ந்து அடிக்கிறது
சிறுத்தை வசூலில் பாய்ச்சல்