Wednesday, December 30, 2009

ரசித்து சிரிக்கவைக்கும் கலக்கல் பார்ட்டி!!!

ஒருவனை சிரிக்கவைப்பது சிரமம், அதுவும் ரசித்து திரும்ப திரும்ப சிரிக்கவைப்பது மிகவும் சிரமம் அப்படி என்னை அடிக்கடி ரசித்து சிரிக்கவைப்பவர் ரைட்டர் பேயோன், அதுவும் 140 எழுத்துக்களுக்குள்.

அவருடைய ட்விட்டுகளை பார்த்தால் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும், அவருடைய ட்விட்டுகள் சில கீழே இருக்கிறது, இவைகள் நான் மிகவும் ரசித்தவை... அவருடைய ட்விட்டர் முகவரி http://twitter.com/writerpayon


என் மகன் பகுத்தறிவுவாதியாகி விடுவானோ என்கிற பயத்தில் தினமும் அவனுக்கான காம்ப்ளானில் ஒரு சிட்டிகை விபூதி கலக்குகிறேன்.

பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை தூற்றாதீர்கள். உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.

என் சமகால மனைவி எனக்களிக்கும் வேதனைகளை புரிந்துகொள்ள மட்டுமாவது இன்னொரு மனைவி இல்லாமல் வேலைக்கு ஆகாது போலிருக்கிறது.

சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தைகள் எழுத்தாளர் ஆகிவிடப் போகிறார்.

முட்டையிலிருந்து கோழியை படைப்பதா, கோழியிலிருந்து முட்டையை படைப்பதா? கடவுளின் முதல் சிக்கல்.

மாலை நேரங்களில் சற்று குளிராக இருக்கிறது. இருந்தாலும் உலகம் வெப்பமாதலை அலட்சியப்படுத்துவதற்கில்லை.

நாங்கள் சிறிது கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறோம். சும்மாவிற்காகவா சமுராய் படங்களை பார்க்கிறோம்?

மனைவியுடனான தகராறுகளை கவனமாக கையாள வேண்டும். கரணம் தப்பினால் சரணம்.

மழை வந்தாலே வாசகர்கள் பயந்து சாகிறார்கள். நான் அதை வர்ணித்து மரண மொக்கை போடுவேனோ என்று.

காலை தெருவில் கொட்டாவி அடக்க கைதூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைபாட்டை தெளிவுபடுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.

இமய மலை உருகிப் போவதற்குள் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். ஆனால் இந்த மழையில் எங்கே போக முடிகிறது. #ஹோபன்கேகன்

புத்தக வெளியீடு என்றால் லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி

என் மகன் எனக்கு சரியான இலக்கிய வாரிசாக வருவான் என தோன்றுகிறது. "அர்த்தம்னா என்னப்பா அர்த்தம்?" என்று கேட்கிறான்.

சுவற்றோரம் சமகால தனித்துவ எறும்பு வரிசை. நம்மிடம் இல்லாத ஒழுங்கு, அழகு என நினைத்துக்கொண்டேன், அவற்றின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றியபடி.

என் ரேஞ்சிற்கு எனது அறையை யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கென்று தனி சீதோஷ்ண நிலையை ஒதுக்கீடு செய்வதுதான் நியாயம்.

புத்தக கடையில் ஒரு சிறுவன் கையில் நான் எழுதிய ஒரு குழந்தைகள் புத்தகம். அவன் பின்னட்டையை திருப்பி என் படத்தை பார்ப்பதற்குள் நடையை கட்டினேன்.

இன்று என் திருமண நாள். கொண்டாட மனைவி என் மாமியார் வீடு செல்கிறார். மாமனாரோ இங்கு வருகிறார். நானும் அவரும் கோவிலுக்கு போவதாக திட்டம்.

எம்ஜிஆரும் ரஜினிசாரும் பல பத்தாண்டுகளில் எட்டிய உயரத்தை ஒரு பத்தாண்டில் எட்ட முயன்றால் என்ன ஆகும் என்பதற்கு அஜித்தும் விஜயும் படிப்பினைகள்.

இவை நான் ரசித்த சில ட்விட்டுகள் மட்டுமே. இன்னும் பல இருக்கிறது அவருடைய பக்கத்தில்!

Monday, December 28, 2009

நாட்டாமைகள் அங்கீகார ஆணையம்இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் வலைப்பதிவு உள்ள அனைவரும் நாட்டாமைகள் ஆகலாம் என்ற போக்கு சமீப காலமாக அதிகரித்துவருவதால் வரும் ஆண்டு முதல் நாட்டாமைகள் அங்கீகார ஆணையம் என்றுஉருவாக்கப்படுகிறது சாமீயோவ்...டும் டும் டும்


பொதுசனம்: என்னது நா.அ.ஆ வா? அது எதுக்கு அதனால் என்ன பயன்?


நா.அ.ஆ குழு: சமீப காலமாக இனையத்தில் ஏதும் பிரச்சினை என்றால் குபீர் குப்பம் போல் குபீர் குபீர் என்று நாட்டாமைகள் தோன்றுவதால் யார் திறமையான நாட்டாமை? யார் சொல்லும் தீர்புக்கு 18 பட்டியும் கட்டுபடனும் என்ற குழப்பங்கள் நிலவுகிறது, ஆகவே நாட்டாமை ஆகவிருப்பம் இருப்பவர்கள், எங்கள் அங்கீகார ஆணையம் மூலம் அங்கிரீக்கப்பட்டவராக இருப்பின் அந்த தீர்ப்பில் ஒரு நியாயம் இருக்கும், மக்களுக்கும் அதனால் யார் தீர்ப்பை ஏற்பது என்ற குழப்பம் இருக்காது. இப்படி பலவிதமான பயன்கள் எங்கள் நா.அ.ஆவினால் ஏற்படும்.


பொதுசனம்: நா.அ.ஆ வினால் யார் யார் எல்லாம் அங்கிகாரம் பெறலாம் அதுக்கு அடிப்படை தகுதி என்ன?


நா.அ.ஆ குழு: முதலில் வலைப்பதிவு இருப்பது ஒரு பேசிக் தகுதியாக இருந்தாலும் அதுமட்டுமே தகுதியாகிவிடாது, ஆகவே விருப்பம் உள்ளவர்கள் அப்ளிகேசன் அனுப்பினால் அவர்களின் வயது, பொறுமை, ஆகியவற்றை சோதித்து பார்த்துவிட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுப்போம். பின்அவர்கள் நாட்டாமைகள் ஆகலாம்.


பொதுசனம்: என்னவிதமான பயிற்சி?


நா.அ.ஆ குழு: முதலில் அவர்களுக்கு எங்கிருந்து பிரச்சினை ஆரம்பம் ஆனது பிரச்சினையின் மையப்புள்ளி என்ன என்பதை கண்டுபிடிக்க பயிற்சி வழங்குவோம்,அவர்கள் அதில் நிபுணர் ஆனபிறகு சம்மந்தப்பட்ட பதிவுகளில் போய் முதலில் ஆஜர் ஆகி இவர் தரப்பு வாதங்களை எடுத்துவைக்க ட்ரைனிங் கொடுப்போம். படிபடியான பயிற்சிகளை முடித்தபின்பே அவர்கள் தீர்ப்பு வழங்கும் நாட்டாமைகளாக உலா வருவார்கள்.


பொதுசனம்: அவர்களுக்கு வேறு என்ன தகுதிகள் எல்லாம் இருக்கனும்?


நா.அ.ஆ: முக்கியமாக மொக்கை பதிவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அவரை சிரிப்பு போலீஸ் என்பது போல சிரிப்பு நாட்டாமையாக ஆக்கிடுவார்கள், ஆகவே அவர் சீரியஸ் பதிவராக இருக்கனும், பினா.வானாவாக இருப்பது கூடுதல் தகுதி.


பொதுசனம்: பலர் இதில் சேர்ந்தால் அவர்கள் அனைவரும் நாட்டாமைகள் ஆகிவிடுவார்கள் ஒரு பிரச்சினைக்கு எப்படி பல நாட்டாமைகள் இருக்கமுடியும்?


நா.அ.ஆ: பிரச்சினை என்று வந்ததும் அங்கு முதலில் யார் சொம்பு, துண்டோடு போய் ஆஜர் ஆகிவிடுகிறார்களோ அந்த நாட்டமையே இறுதி தீர்பு சொல்வார், மற்ற நாட்டாமைகள் அதில் குறிக்கிடமாட்டார்கள்.இதுபோல் பல விதிகள் இருக்கின்றன.


பொதுசனம்: வேறு ஏதும் சர்டிபிகேட் கோர்ஸ் எல்லாம் இருக்கா?


நா.அ.ஆ: பிரச்சினைக்கு தகுந்தமாதிரி சர்டிபிகேட் வழங்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறோம், இப்பொழுது "நற்குடி" சர்டிபிகேட் வழங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம்.


பொதுசனம்: மக்களுக்கு ஏதும் புத்தாண்டு மெசேஜ் இருக்கா?
நா.அ.ஆ: குடி குடியை கெடுக்கும் "நற்குடி" பதிவரின் பெயரை கெடுக்கும். நா.அ.ஆவில் சேருவோம் நாடு முன்னேற நல்ல தீர்பை வழங்குவோம்.
டிஸ்கி: பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையா யூஸ் செஞ்சு வரும் சொம்போடு வகுப்புக்கு வரவும்.

Monday, December 21, 2009

எத்தனை பேரு திட்டப்போறாங்களோ?

போன வாரம் வந்த பிறந்தநாள் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது, இரண்டரை வருடமாக முயற்சி செய்து வந்த டிரைவிங் லைசன்ஸ் சரியாக பிறந்த நாளுக்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு கிடைத்தது, டிரைவிங் லைசன்ஸ் கிடைப்பது என்ன அவ்வளோ பெரிய சந்தோசமா என்று நினைக்கலாம், துபாயில் டிரைவிங் லைசன்ஸ் கிடைப்பது என்பது மிக மிக மிக கடினமான ஒன்று, இதுவரை 8 டெஸ்ட்டுக்கு போய் தோல்வியடைந்து, குறைந்தது நம்ம ஊர் காசுக்கு 1.5 லட்சம் வரை செலவு செய்துகிடைத்தது. அன்று இரவு முழுவதும் சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை. மறுநாள் பதிவுலக நண்பர்களின் வாழ்த்துக்களால் நெஞ்சம் நிறைந்தது, போனில் மனைவி பேசும் பொழுது மகன் கொய்ங் கொய்ங் என்று ஏதோ சத்தம் கொடுக்க அப்பாவுக்கு குட்டி பர்த்டே விஸ் செய்கிறான் என்று மனைவி சொல்லும் பொழுது மட்டும் என்னமோ மாதிரி இருந்தது...
(பயபுள்ள அவன் தூங்கும் பொழுது வீட்டில் இருக்கிறவங்களை சைலண்ட் மோடிலும், முழுச்சிருந்தா வைப்ரேசன் மோடிலும் தான் வெச்சு இருக்கான். முழுச்சிருந்தாலே அழுகைதான்:)
******************
நண்பர் ஒருவர், KVR பதிவில் போட்டு இருந்த என் போட்டோவை பார்த்துவிட்டு என்னங்க Half Hand சட்டை போட்டு டை கட்டியிருக்கீங்க, வித்தியாசமாக இருந்தது என்றார், நான் அப்படி எல்லாம் இல்லை எல்லோரும் கட்டுவதுதான் என்றேன், இல்லீங்க இதுவரை நான் எங்கேயும் அப்படி பார்த்தது இல்லை என்றார் விடாப்பிடியாக, நானும் இல்லீங்க சிலர் வலது கையில் வாட்ச் கட்டுவது போல் சிலர் அரைக்கை சட்டை போட்டும் டை கட்டுவார்கள் நல்லாவும் இருக்கும் என்றேன். இல்லீங்க இப்படி டை கட்டி பார்ப்பதுதான் முதல் முறை என்றார்... அவரிடம் சொல்லமுடியுமா? நாங்க எல்லாம் போட்டோ என்றால் பனியனோட இருந்தாலும் மேலே டை கட்டி போஸ் கொடுக்கும் ஆளுங்க என்று:)
*********************
லைசன்ஸ் வாங்கிட்டு நேற்று(21-12-2009) அண்ணாச்சி காரை அவரை அருகில் வைத்துக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்தேன், பிறகு ஆபிஸ் காரை எடுத்துக்கிட்டு தனியா போய் பார்ப்போம் என்று மெயின் ரோட்டுக்கு போனேன். ஒரு ட்ராக்கில் இருந்து அடுத்த ட்ராக் மாறனும் என்றால் இன்டிகேட்டர் போட்டு சென்டர் மிரரில் பின்னாடி கார் ரொம்ப அருகில் வருதான்னு பார்த்து, பின் சைட் மிரரில் ட்ராக் கிளியரா இருக்கான்னு பார்த்து அடுத்து ஷோல்டர் வழியா திரும்பி ஒருமுறை பார்த்து பிறகு திரும்ப சென்டர் மிரரில் கிளியரான்னு பார்த்துவிட்டு ட்ராக் சேஞ் செய்யனும் இதுதான் ரூல்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க, நானும் ட்ராக் சேஞ் செய்ய இதை எல்லாம் செஞ்சா..பின்னாடி வேகமாக வந்து பப்பரப்பான்னு ஹாரன் அடிச்சு பயமுறுத்தி ஒருவழி செஞ்சுட்டானுங்க.. ஏனோ அன்நியன் படத்தில் விக்ரம் வண்டி ஓட்டுவது நினைவுக்கு வந்தது. இங்க ஹாரன் ஒருவன் அடிக்கிறான் என்றால் மானெங்கெட்ட தனமாக திட்டுக்கிறான்என்று அர்த்தம். ம்ம் இன்னும் எத்தனை பேரு திட்டபோறானுங்களோ:)
**********************
உறவினர் ஒருவர் உடல் நலம் இன்றி இருக்கும் பொழுது அவரோட மனைவி திருப்பதிக்கு அங்கபிரதஸ்னம் செய்வதாக வேண்டியிருக்காங்க, அவரும் உடல்நலம் தேறி வந்ததும் சிலமாதம் கழித்து கோயிலுக்கு நேர்த்திகடன் செலுத்த போய் இருக்காங்க, இவரு அங்க போறவரைக்கும் என்ன இப்படி எல்லாம் வேண்டிக்கிட்டுஇது எல்லாம் தேவையான்னு சொல்லிக்கிட்டே வந்திருக்கிறார். அங்க போய் மனைவி அங்கபிரதஸனம் செய்ய அவங்களுக்கு உதவ இவரு குனிஞ்சு இருக்கிறார், அங்கவந்த ஆளுங்க ஆண்கள் எல்லாம் இங்க அங்கபிரதஸ்னம் செய்ய கூடாது என்று அவரை அங்கிருந்து நகர்த்தி அழைத்து சென்று பக்கத்தில் கொண்டு போய் படுக்க வெச்சு உருட்டி உருட்டி அவரை விளையாண்டு இருக்காங்க...எப்பொழுது நினைச்சாலும் சிரிப்பு வருகிறது


**********************
சாப்பிடும் பொழுது வைக்கப்படும் பதார்த்தங்களில் ஏதும் ஒன்று ரொம்ப பிடித்துவிட்டது என்றால் அதை கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு மீதி வைத்துவிட்டு எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சதும் கடைசியாக அதை சாப்பிட்டு விட்டு அந்த சுவை கொஞ்ச நேரம் இருக்கவேண்டும் என்று நினைப்பது போல், நேற்று I-MAX ல் 3D எபக்ட்டோடு அவதார் திரைப்படம் முடிஞ்சதும், அப்படியே கண்ணை மூடி அந்த அனுபவத்தை திரும்ப திரும்ப அசைபோடனும் என்று தோன்றியது.அப்படிப்பட்ட ஒரு படமாக இருந்தது.

2154 ஆம் ஆண்டு நடக்கும் கதை, பண்டோரா என்ற கிரகத்துக்கு அங்கு இருக்கும் கனிமத்துத்தை எடுத்து வர அனுப்பப்படும் படைக்கும், அந்த கிரகத்து மக்களுக்கும் நடக்கும் சண்டை. யார் வெற்றிபெற்றார்கள் என்ற கதைதான் அவதார். படம் பார்க்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அந்த பண்டோரா கிரகத்தில் ஓரமாக நின்று நடப்பவை அனைத்தையும் பார்ப்பது போல் ஒரு உணர்வை கொடுத்தது. ஜேக் அந்த படுக்கையில் படுத்ததும் அது நகரும் பொழுது நம்மை நோக்கி வந்து நம் மூக்குக்கு முன்னாடி நிற்பதை போன்றும், வெள்ளை கலரில் பறக்கும் பூ நம்மை சுற்றி பறப்பதுபோலும் இருந்தது இப்படியே படம் முழுவதும் ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. பார்த்தா 3Dயில் பாருங்க.
**********************

சித்தப்பு ஒருவர் கழக உடன்பிறப்பு, அவரை சீண்டுவது எப்பொழுதும் என் வழக்கம், இந்த முறை பேசிக்கிட்டு இருக்கும் பொழுது ஊழல் இல்லாத ஆட்சி, எங்கள் கட்சி ஆளுங்க யாரும் ஊழல் செய்வது இல்லை இது தலைவர் கட்டளை என்றார். அப்புறம் ஏன் சித்தப்பூ T.R.பாலுவுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றேன். அதுக்கு அவரு சொன்னாரு, பாலு மந்திரியா இருந்தப்ப 5 மாநிலங்களில் செலவு செய்து போடவேண்டிய ரோடு பாலத்தை எல்லாம் தமிழ்நாட்டுக்கே கொண்டு வந்துட்டாரு, அதனால் மற்ற மாநில ஆளுங்க பிரஸர் கொடுத்து இந்த முறை அவருக்கு மந்திரி பதவி கொடுக்கவிடாம அடிச்சுட்டாங்க என்றார். என்னா பேச்சு!!! உடன்பிறப்பா ஆவதுக்கு மெயின் தகுதியே இந்த "வாய் பேச்சுதான் போல"

***********************

Sunday, December 20, 2009

என்ன கொடுமை சரவணன் இது?

கடந்த வெள்ளி அன்றுஅண்ணாச்சி வீட்டில் ஏற்பாடு செய்திருந்த கீழைராசா எடுத்த குறும்புபடம் வெளியீட்டுக்கு சென்றோம்.

அண்ணாச்சி வீட்டு கதவில் ஆரம்பிச்சு, பாத்ரூம் வரை அண்ணாச்சி அழைக்கிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஒரு அண்ணாச்சியை பார்ப்பதே கஷ்டம் திரும்பிய பக்கம் எல்லாம் அண்ணாச்சி போஸ்டர் என்றால் சொல்லவா வேண்டும்?...திரையை சுற்றி சீரியல் லைட்,ஹோம்தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் என்று கலக்கலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

டேஸ்டி பிரியாணி என்றாலே அவ்வளோ அருமையான சுவையாக இருக்கும், அன்றும் அங்கிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, அனைவரும் சாப்பிட்டு விட்டு சுல்தான் பாய் வருவதுக்காக காத்திருந்தோம். கூட்டம் வரும் வரை நியூஸ் ரீல்ஓட்டுவது போல், போன வாரம் தேவாவின் இன்னிசையில் அண்ணாச்சி பாடிய பாட்டை போட்டார்கள், அதன் பிறகு ஜெஸிலா அவர்கள் பேசிய பட்டிமன்றத்தில் பேசிய வீடியோவும் போட்டார்கள். எதுக்கு கை தட்டுகிறோம் என்றுதெரியாமல் கை தட்டிக்கிட்டே இருந்தோம்!

பிறகு 2 மணிக்கு படம் ஆரம்பம் ஆனது. நான் ஊரில் இல்லாதப்ப என்னை விட்டு சுற்றுலா சென்ற குறையை சுற்றுலாவுக்கு வராதவர்களுக்கு சமர்பனம் செய்து அதை போக்கிவிட்டார் கீழை ராசா. பாட்டுக்கு பாட்டு போட்டியில் ஆசாத் பாய் பாடி முடிச்சதும் "என்ன கொடுமை சரவணன்" இது என்று பிரபு பேசும் டயலாக் பக்காவாக பொருந்தியது, சிரிக்காதவர்களையும் சிரிக்கவைக்கும். அடுத்து பிரியாணி சட்டியை தூக்கிக்கிட்டு போகும் பொழுது "எங்கே செல்லும் இந்த பாதை?..." பாட்டும், கார்த்தி பேசும் பொழுது "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்" டயலாக்கும் பக்கா மேச்சிங்.. மிகவும் அருமையாக இருந்தது...

இந்த முறை புதிதாக பலர் அபு அப்ஸர், ஹூசைனம்மா, கலைச்சாரல் மலிக்காவும்,அப்துல்மாலிக் ஆகியோர் வந்திருந்தனர், ஆனால் படம் முடிஞ்சதும் பலரும் எஸ்கேப் ஆகியதால் சரியாக யாரிடமும் பேச முடியவில்லை...

பிரியாணி இதில் தான் இருந்தது என்பதுக்கு ஆதாரமாக சட்டி மட்டும் மிச்சம்:)
வீடியோவை பார்த்து சிரிக்க..

http://www.youtube.com/watch?v=3kSjIFIbv7w

Wednesday, December 2, 2009

என்ன கொடுமை இது யுவன்?

(8மணிக்கு வந்திருந்த கூட்டத்தினர்)
லைவ் மியுசிக் புரோகிராம் என்றால் மிகவும் பிடிக்கும், போன முறை அப்பாவுடன் சும்மா வந்திருந்த யுவன் இந்த முறை முதன் முறையாக துபாய்க்கு வருகிறார் கூடவே ஹரிஹரன், சங்கர்மகாதேவன், போன்றவர்களும் வருகிறார்கள் என்பதால் நானும் என் நண்பரும் இரண்டு நாட்களுக்கு முன்பே டிக்கெட் வாங்கினோம், நிகழ்ச்சி நடக்கும் இடம் துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம், சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு துபாயை விட்டு அவுட்டரில் இருக்கும் இடம். ஆகையால் டிரைவரிடம் சொல்லி என்னையும் என் நண்பரையும் அங்க ட்ராப் செஞ்சுடு வரும் பொழுது எப்படியாவது வந்துடுறேன் என்று சொல்லி ஆபிஸ் காரிலேயே அங்கு சென்றோம். 5 மணிக்கு கேட் ஓப்பன் ஆகும் என்று போட்டு இருந்தார்கள் நாங்கள் போன பொழுது 6.30. அங்கு காத்திருந்தது மொத்தமாக ஒரு பத்து பேர் இருக்கும், அப்பொழுது லேசாக பயம் ஆரம்பம் ஆனது, ஆஹா தனியா வந்து மாட்டிக்கிட்டோமோ என்று. கடைசியில் 7.45க்கு கேட் ஓப்பன் செய்தார்கள் உள்ளே 30,000 பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்தில் வந்திருந்தது மொத்தம் 100பேர் இருக்கும், நிகழ்ச்சி 8 மணிக்கு என்று சொல்லி இருந்தார்கள் அனைவருக்கும் 6மணிக்கு ஆபிஸ் முடிந்து வருவது என்றாலும் அட்லீஸ்ட் ஒரு 5000 பேராவது வந்திருக்கனும், எல்லா கேலரியையும் சேர்த்து பார்த்தாலும் மொத்தம் 500 பேருக்குமேல் தாண்டாதே என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுது ஆசிப் அண்ணாச்சி போன் செய்தார், டேய் கூட்டம் எப்படி டா என்று அண்ணாச்சி செம கூட்டம் அண்ணாச்சி குறைந்தது ஒரு 5000 பேர் இருக்கும் அவ்வளோ கூட்டம் என்றேன், என்னடா இப்படி சொல்றே என்றார், ஆமாம் அண்ணாச்சி குறைந்தது ஒரு 5000 பேர் செக்கியூரிட்டிங்க இருக்காங்க ஆனா வந்திருப்பது ஒரு 500 பேர் கூட இருக்காது என்றேன். ஆள் இல்லாத ஸ்டேடியத்தில் அவ்வளோ பொருப்பா டீ ஆத்துக்கிறார்கள் என்றேன்.

யாரு பெத்த புள்ளையோ? (தனியாக வந்திருந்த பாக்கிஸ்தானி)

ஸ்டேஜில் பேசியவரும் 30000 டிக்கெட் விற்றுவிட்டது என்று எங்களுக்கு சொன்னார்கள், எல்லோரும் துபாய் ட்ராபிக்கில் மாட்டிக்கிட்டாங்க என்று நினைக்கிறோம், கூட்டம் வரும் என்று நம்புகிறோம் என்றார், அப்பொழுது மணி 9.30. ஒரு வழியாக 10.30க்கு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது ஒரு 4000 பேர் இருந்தாலே ரொம்ப அதிகம். ஸ்டேஜில் இருந்த மிகப்பெரிய ஸ்கிரீனில் இளையராஜா முகத்தில் இருந்து யுவன் முகமாக மாறுவது போன்றும் அதன் பிறகு u 1 (யுவன்) என்று லோகோ கிரியேட் ஆவது போல் ஒரு 5 நிமிடம் ஓடக்கூடிய கிராப்பிக்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருந்தன, யுவன் தவம் செய்கிறார், கத்தி சண்டை போடுகிறார், பறக்கிறார் என்ன என்னமோ செய்கிறார் பக்காவாக இருந்தது அந்த அனிமேசன். அதுவரை தலையில் ரெயின் கோட் போட்டது போல் முகத்தை காட்டாமல் தமிழ் பட ஹீரோயின்கள் போல் ”பேக்கை” காட்டிக்கிட்டு பக்காவா எண்டரி ஆகனும் என்று காத்துக்கொண்டு இருந்தார். அனிமேசனும் முடிந்தது, இவரும் என்ன என்னமோ சொல்லிபார்த்தார் சவுண்ட் சிஸ்டம் வேலை செய்யல...திரும்பி உள்ளே போய்விட்டார். பின் எல்லாம் சரி செஞ்சு திரும்ப அழைத்து வந்து முதல் பாடலை யுவன் பாடினார், என்ன பாட்டு என்று இதுவரை கேட்டதும் இல்லை அது நினைவிலும் இல்லை. அடுத்த பாட்டு சங்கர் மகாதேவன் சரோஜாவில் இருந்து “நிமிர்ந்து நில்..” , ஹரிஹரன் “காதல் செய்தால் பாவம்..”,விஜய் நம்பியார் என்று அனைவரும் பாடினார்கள் என்ன பாடினார்கள் என்று தான் தெரியவில்லை, மியுசிக்கை வைத்து இந்த பாட்டுதான் பாடுகிறார்கள் என்று புரிஞ்சுக்கிட்டோம்.

சிம்புவுக்காக என்ட்ரி மியுசிக் ”வல்லவன் வல்லவன்” என்று ஒரு இரண்டு நிமிடங்கள் போட்டபிறகு வந்து ”நலம் தானா நலம் தானா” பாட்டை பாடினார், பிறகுஅவரே திரும்ப லூசு பெண்ணே பாட்டையும் பாடிவிட்டு பை சொல்லிவிட்டு கிளம்பினார். ரொம்ப எதிர்பார்த்த ”வேர் ஈஸ் த பார்ட்டி” பாட்டை வேறு ஒருவர் பாடினார்...ரொம்ப அடக்கமாகவே வந்துரொம்ப அடக்கமாகவே பேசினார் சிம்பு.

(இவரு பாடினாலே நல்லா இருக்கும்!)

ரொம்ப அட்வான்ஸ் டெக்னாலஜியோடு புரோகிராம் நடத்தனும் என்று வந்திருக்கிறார், அதே டெக்னாலஜிதான் காலைவாரிவிட்டு விட்டது.
ஊரில் நடக்கும் லக்‌ஷ்மன் சுருதி, வானம்பாடிகள் போன்றோர்களின் நிகழ்ச்சி கூட அருமையாக இருக்கும்.


1) என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முன்கூட்டியே வந்து ரிகர்சல், ஆடிசன் எல்லாம் பார்க்கவில்லை என்றால் இப்படிதான் சொதப்பும்.


2) கூட்டம் இல்லாததால் ஏதோ கடமைக்கே என்று நிகழ்ச்சியை நடத்தியது போன்று ஒரு உணர்வு, காம்பியரிங் யாரும் இல்லை, யார் பாட்டு பாடுகிறார்கள், அடுத்த பாட்டு என்ன போன்று எந்த அறிவிப்பும் கிடையாது. மூன்று தேவதைகள் பாடினார்கள் அவர்கள் பெயர் கூட தெரியவில்லை. (தேவதைகள் ஆல்வேஸ் மேட் இன் கேரளா என்று தனியாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.)


3)மிகவும் ரசனையாக இருந்தது பாட்டுக்கு ஏற்றமாதிரி பின்னாடி ஸ்கிரீனில் வந்த கிராப்பிக்ஸ் காட்சிகள், அத்தனை அழகு.

டிஸ்கி: கெஞ்சினேன், கதறினேன் டேய் கொடுத்த காசில் பாதியாச்சும் திரும்ப கொடுங்கடா போய்விடுகிறேன் என்று பாவி பசங்க கொடுக்கவே இல்ல:(