இது அந்த பொண்ணு முத்தம் கொடுக்க வந்துச்சாம் இவரு பயந்து போய் என்னான்னு கேட்டாராம் அதுக்கு ரியாக்சன்.
டிஸ்கி: போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!
கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...
முதலில் நீங்க புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை மற்றவங்களுக்கு காட்டனும் அதுக்கு முதல்ல பதிவர்கள் சந்திப்பின் பொழுது சும்மா ’தேமே’ன்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க கூடாது! அவுங்க பேசும் பொழுது அப்ப அப்ப குறுக்க பூந்து இந்த ஜெயமோகன் எழுதிய புத்தகத்தில் பல ஓட்டைகள் இருக்கு! என்னத்த பெருசா எழுதுறார் முன்ன மாதிரி எழுதறது இல்லை! என்று பீட்டரை எடுத்துவுடணும். சில விசம ஆட்கள் அருகில் இருந்தால், ஏன் கரையான் அரிச்சு ஓட்டை விழுந்துட்டுதா..? என்று கேட்க வாய்ப்புக்கள் இருப்பதால், கொஞ்சம் உஷாராக இருக்கணும்.
அவர் புத்தகத்தை இதுவரை படிக்கவில்லை என்றாலும்,கூட பல புத்தங்கள் படிச்சதாக காட்டிக்கணும். கூடவே, அட்லீஸ்ட் லெண்டிங் லைப்ரரியிலாவது இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக்கிட்டு போய் கையில வெச்சுக்கணும், இப்பதான் கோணங்கியோட பிதிரா புத்தகம் படிச்சுக்கிட்டு இருக்கேன் என்னாமா எழுதி இருக்கிறார் என்று சொல்லிக்கலாம் ஆனால் அந்த புத்தகத்தின் அட்டையை மட்டும் புத்தக கண்காட்சியில் பார்த்தது என்ற ரகசியம் வெளியே தெரியகூடாது.
அடுத்து பதிவு எழுதும் பொழுது பதிவு எருமைநாயக்கன் பட்டியை பற்றியதாகவே இருந்தாலும், அதில் இலக்கியவாதிகள் சொன்னது அல்லது, அவர்களை மேற்கோள் காட்டி எழுதலாம். எடுத்துக்காட்டாக எருமைநாயக்கன் பட்டியில் வளைந்து நெளிந்து ஓடும் ஆற்றை கடப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல! சாருவின் ஜீரோ டிகிரி போன்றது என்று சொல்லணும். ஆக நீங்க ”ஜீரோ டிகிரி” படிச்சாச்சுன்னு என்று மத்தவங்களுக்கு சொல்லியாச்சு..!விமர்சனம் எழுதும் புத்தகம் குறைந்தது குட்டி தலையனை சைஸ் உள்ள புத்தகாமக இருக்கவேண்டும் அதுக்காக லிப்கோ டிக்ஸ்னரிக்கு எல்லாம் விமர்சனம் எழுதலாமா என்று கேட்பவராக இருந்தால் நீங்கள் என் தோழரே!
பெரும்பாலும் இலக்கிய புத்தங்கள் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அதுபோல் உங்கள் பெயரையே ஆங்கிலத்தில் எழுத பிட் அடிப்பவராக இருந்தாலும் ரெண்டு மூன்று ஆங்கில புத்தங்கள் பெயர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளுங்க அப்ப அப்ப பெயரை ஊடால ஊடால போட்டுவையுங்க.
சரி இனி விமர்சனம் எழும் பொழுது ஒரு பக்கத்தை படிக்க ஒருநாள் ஆன கதைய வெளியே சொல்லாமல் முழு புத்தகத்தையும் ஒரே நாளில் படிச்சு முடிச்சாச்சுகீழேவைக்க முடியாத அளவுக்கு சுவாரய்ஸம் என்று சொல்லுங்க. புத்தகத்தின் அட்டைய பெருசா படம் புடிச்சு பதிவில் போட்டால் பாதி இடம் அடைத்துவிடும்மீதி நாலுவரிக்கு எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் திட்டி எழுதினால் உங்களைபோல் ஒருவர் அந்த புத்தகம் படிச்சவர் இருந்தால் எப்படி திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிடுவார் ஆகையால் புத்தகம் அருமை ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் என்று புகழ்ந்து எழுதிடுங்க. அது மிகவும் பாதுகாப்பானது.மேலும் பல புத்தங்கள் பெயர் தெரிய அமேசான்.காம் போனால் அங்கு புத்தகத்தின் அட்டைபடம், ஆசிரியர் பெயர், எத்தனை பக்கம் என்று அனைத்து விவரங்களும் இருக்கும் இது போதாதா உங்களுக்கு அடுத்த புத்தகப்பதிவு எழுத?
அடுத்து உலகதிரைப்படம் பற்றி எழுதுவது எப்படி?
உலகதிரைப்படம் என்றால் என்னான்னு தெரியாதா? வெளியே சொல்லாதீங்க அதை கண்டுபிடிக்க வழி நான் சொல்லித்தருகிறேன்
வீடியோ கடைக்கு போங்க அவனிடம் இதுவரை யாரும் பார்க்காத படம்ஏதும் இருக்கா என்று கேளுங்க அப்படி இதுவரை இருவர் மட்டுமே பார்த்த படம் ஒன்னு இருக்கு என்று தமிழ் வில்லு சீடிய கொடுத்தா வாங்காதீங்க உலகபடம் என்பது தமிழில் இருக்காது இது அடிப்படை பாடம்.
உலகப்படம் அல்லது உலகதரத்தில் இதுவரை தமிழில் வந்தது இல்லை என்ற கருத்தில் தாங்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும்.
வீடியோ கடை ஆரம்பித்த பொழுது வாங்கிய பழய ஆங்கில படம் ஏதும் இருக்கான்னு கேளுங்க,அவரும் ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்துக்கொடுப்பார் அதன் ரிலிஸ் தேதியை பாருங்கள் அது உங்களை விட வயது மூத்ததாக இருக்கவேண்டும் இது இரண்டாவது விதி.
என்னது தேதி சில சீடியில் ரிலீஸ் தேதி இருக்காதா? சரி கவலைய விடுங்க சீடி கவரில் இருக்கும் படத்தில் அவர்கள் போட்டு இருக்கும் உடை,கார் ஆகியவை தாங்கள் பார்த்தது இல்லையா?ஹீரோயின் தொப்பியில் ஒரு கோழி இறகு இருக்கா? அதெல்லாம் உலக திரைப்படங்கள்தான்.
(மேலே உள்ளே படம் ஒரு சாம்பிள்,இது போல் கவர் இருக்கட்டும்)
அப்படி ஏதும் ஒன்னு இரண்டு தேறும் அதை எடுத்துவந்து போட்டு பாருங்கள் முழுவதும் பார்க்க முடியாது இருந்தாலும், ஓட்டி ஓட்டி பார்த்துவிடுங்கள் .
பார்த்துவிட்டு முக்கியமாக நீங்கள் எடுக்கவேண்டிய குறிப்புகள்
1)நடிகர், நடிகையின் பெயர்
2) இயக்குநரின் பெயர்
3) கேமிரா மேன்
பேருக்கு எல்லாம் தமிழில் சப்டைட்டில் வராது! எழுத்துக்கூட்டியாச்சும் அவுங்க பெயரை படிச்சு எழுதி வெச்சுக்குங்க.இல்லை லேப்டாப்பி படம் பார்த்தால் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து அந்த நடிகரின் பெயரை googleல் போட்டு தேடி அவர் நடித்த மேலும் சில படங்களின் பெயர்களை தெரிந்துவைத்து இருப்பது நலம்.
இனி எப்படி பதிவு எழுதுவது..?
தாங்கள் படம் பார்த்த சூழலை விவரிப்பது முக்கியம்! மாலை நேரத்தில் பார்த்தேன் என்று சொல்லிவிடக்கூடாது, ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக உலக திரைப்படத்தை பார்க்கும் ஆவல் இன்றி மறைய தொடங்கினான்; ஆதவனுக்கு கொடுத்துவைத்தது அவ்ளோதான், அமைதியான சூழல் இருக்கும், தனிமையில் இருக்கும் பொழுது எல்லாம் என் தனிமையை போக்குவது ********** இயக்குநரின் படங்கள் தான். அன்று அப்படிதான் பல இடங்களில் தேடி வாங்கி வந்த *********** படம் என் தனிமையை போக்கியது. என்று ஆரம்பிச்சு படத்தில் தாங்கள் ஓட்டி ஓட்டி பார்த்த சீன்களை நினைவு வைத்து நான்கு பத்திகள் எழுதுங்கள், பின் சாதாரண பிலிம் போட்ட கேமிராவிலேயே போட்டோ புடிக்க தெரியாத நீங்க அந்த படத்தில் அந்த ஷாட்டுக்கு வைத்த கேமிரா ஆங்கிள் சரி இல்லை அதை அப்படியே 23 டிகிரி சாச்சு வைச்சு எடுத்து இருந்தா அந்த காட்சி சிறப்பா வந்திருக்கும் என்று சொல்லணும்.
அதுபோல, மாலை 6 மணிக்கு மேல் எதிரே லாரி வந்தால் இரண்டு பைக்தான் வருகிறது என்று குறுக்கே பூந்து போய்விடலாம் என்று நினைக்கும் அளவுக்குபார்வை சக்தி இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த படத்தில் லைட்டிங் தான் ஹீரோ என்று அடிச்சு விடுங்க.
அடுத்து முக்கியமாக நீங்கள் தொடவேண்டிய டாப்பிக் இசை, குழாய் ஸ்பீக்கர் யாராவது அலறினாலும் என்னாது தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாமாதிரியாரோ பேசுகிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு உங்கள் கேட்கும் திறனும், என்னமா வீனை வாசிக்கிரார் குன்னங்குடி வைதியநாதன் என்றும் சொல்லும்அளவுக்கு இசை ஞானம் உள்ளவரா அப்படியே அதை எல்லாம் ஒரு குழிக்குள் போட்டு மூடுங்க, படத்தில் பட இடங்களில் இசைதான் ஆதிக்கம் செலுத்தி இருக்குபடத்தின் பின்னனி இசை படத்தின் முதுகெலும்பு, கால் எலும்பு என்று எல்லாம் சொல்லுங்க.
சில பல கலர் டோன்களின் பெயர் தெரிஞ்சு வைச்சு இருப்பது நல்லது! ஆங்காங்கே படம் முழுவதும் வரும் கிரீன் டோன் பக்காவா இருக்கு! அப்படின்னு எடுத்துவிடுங்க. இப்படி எழுதினா தாங்கள் பாதி உலக பதிவர் ஆகிட்டீங்க...!அடுத்து ஈரான் மொழி படம் ஜப்பான் மொழி படம் என்று தங்கள் எல்லையை விரிவடைய செய்யுங்கள்.
பின்நவீனத்துவ உலக படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டால் தாங்கள் முழுமையான உலகபதிவர். பின்நவீனத்துவ உலக படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப சிம்பிள் மேலே சொன்ன அதே உலகத்திரைப்பட டெக்னிக் ஆனா படத்தில் பேச்சு இருக்காது,இதை நீங்க ஓட்டி ஓட்டிபார்க்க அவசியம் இருக்காது சிலசமயம் திரும்ப திரும்ப அந்த “சீனை” பார்க்கும் படி இருக்கும் அதிகமாக செக்ஸ் காட்சிகள் இருக்கும். அதுவும் முறையற்ற காட்சிகளாக இருக்கும் அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுங்க, படம் பார்க்கும் பொழுது துணைக்கு பியர் போத்தல்கள் இருப்பது அவசியம்.(நன்றி அய்யனார்).
பியர் போத்தல்களோடு இந்த படங்களை பார்ப்பது என்பது வரம் என்று எழுங்க. தலைப்புகளை எப்பொழுதும் கொஞ்சம் டெரராகவே வையுங்க...!
டிஸ்கி: நாலுபேர் மதிக்கனும் என்றால் எதுவுமே தப்பு இல்லை!