நாம எல்லாம் ஓசி சாப்பாடுன்னாலே காலையில் இருந்து வயிறை காலியா வெச்சுக்கிட்டு போய் செம கட்டு கட்டும் ஆளுங்க, பிரியாணி விருந்துன்னா கேட்கவா வேண்டும்? 7 மணி இஃப்தார் பார்ட்டிக்கு முதல் ஆளாக நானும் நண்பர் சிவராமனும் போய் துண்டை போட்டுக்கிட்டோம். அண்ணாச்சி ஏதும் ஹெல் செய்யனுமா என்று கேட்பது மட்டும் தான் என் வேலை என்பதை அண்ணாச்சி தெரிஞ்சுக்கும் வரை எல்லாம் ஒழுங்காகதான் போய் கொண்டு இருந்தது, அவர் சரியாக இரண்டு மணி நேரத்தில் டேய் இவன் இப்படியே எல்லோரிடமும் கேட்டுக்கிட்டு ஒருவேளையும் செய்யாம சுத்தி சுத்தி வருகிறான் டா என்று அவர் கண்டு பிடிச்சதும் இனி பப்பு வேகாதுன்னு ஆரஞ்சு உறிக்கும் வேலைக்கு போய்விட்டேன்.
நண்பர்கள் ஒவ்வொருவராக வர வர ஆள் ஆளுக்கு வேலைகளை அண்ணாச்சி பிரிச்சுக்கொடுத்துக்கிட்டு இருந்தார், பம்மல் கே சம்மந்தத்தில் கமல் டயலாக் ஒன்னு சொல்லுவார் அதுதான் நினைவுக்கு வந்துச்சு, ஆண் சிங்கம் ஒன்லி டிஸ்ரிபியூட் வேலை மட்டும் செய்யும் பெண் சிங்கம் தான் வேட்டைக்கு போகும் என்று, இங்கு பெண் சிங்கங்களுக்கு பதில் சின்ன சின்ன பூனைகள். அண்ணாச்சி சோக்கா ஒரு வெள்ளை கலர் ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கிட்டார், கடைசி வரை அதில் ஒரு சின்ன அழுக்கு கூட ஆகவில்லை என்றால் எப்படி வேலை பார்த்து இருப்பார் பாருங்க!
கீழை ராசா வீடு எங்கன்னு கேட்க போன் செஞ்சார் லொக்கேசன் சொல்லிட்டு வாங்க என்றேன், திரும்ப போன் செஞ்சு எங்க வரனும் என்றார், திரும்ப இடம் எங்கன்னு கேட்டார் அதையே சொன்னேன், என்ன டா இவரு சும்மா போன் செஞ்சுக்கிட்டே இருக்காருன்னு ஹல்லோ பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு பில்டிங் இருக்கு அந்த பில்டிங் தான் என்று வீட்டு நம்பரையும் சொன்னேன், திரும்ப போன் செஞ்சு அல்லோ எப்படி வருவதுன்னு தெரியல கொஞ்சம் ஒழுங்கா சொல்லு, பிரியாணி வேற சூடு ஆறுதுன்னு சொன்னார், அட பாவி பிரியாணி உங்க (ஒத்தை ஆளா ரெண்டு லிட்டர் ஜூஸ் குடிச்சுட்டு மீதி கொஞ்சமாக வைத்திருக்கும் சுபைர்)கூடதான் வருதுன்னு முன்னாடியே சொல்லக்கூடாதான்னு மனசுல நினைச்சுக்கிட்டு அங்கயே நில்லுங்க நான் வருகிறேன் என்று ஓடி போய் அவரை அழைத்து வர சென்றேன், அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது கீழை ராசா (மனசு) மாதிரியே பிரியாணி பாத்திரமும் பெருசுன்னு, அப்பதான் நம்ம ஆதவன், சென்ஷி, கோபி எல்லாம் வர, ஜிம் பாடியான ஆதவனிடம் செல்லம்
பிரியாணிய தூக்கனும் வான்னு சொல்லி கூட போய் ஒழுங்கா தூக்கிக்கிட்டு வராங்களான்னு மேல் பார்வை பார்த்துக்கிட்டே வந்தேன். இது பொருக்காத கீழை ராசா குசும்பா நோம்பு கஞ்சி ஒரு பாத்திரத்தில் இருக்கு அதை தூக்கிட்டு வான்னு சொல்லிட்டார், வேற வழி வேலை செஞ்சே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்! நானும் கவிஞர் சிம்மபாரதியும் கஞ்சி பாத்திரத்தை தூக்கிட்டு வந்தோம், சிம்ம பாரதியோடு வரும் பொழுது பிரண்ட்ஸ் படத்தில் கடிகாரம் கீழே விழும் சீன் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சை செய்தது. அவர்களுடன் மலேசியா புகழ் இஸ்மத் அண்ணனும் வந்தார்.
அண்ணாச்சியின் சரியான வழிகாட்டுதலின் விளைவாக 20 நிமிடத்தில் வரவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் சுத்தி ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் ஆசாத், சுபையர், தினேஷ். நோம்பு முடிக்கும் நேரம் வரை பொறுமை இல்லாமல் ஏதோ ஐஸ்கிரீம் மாதிரி ஒரு கப்பில் இருந்ததை பார்த்து நைசா அதை ஆட்டைய போடும் பொழுது தம்பி கோபி பார்த்துட்டான் சரி வா அப்படியே வெளியில் நைசா போய்விடாலாம் என்று இருவரும் வெளியில் போவதை பார்த்த ஆதவன் பின்னாடியே வர நான் வழக்கம் போல் முதல் பங்கை கோபிக்கு கொடுத்து டெஸ்ட் செஞ்சேன் கோபி பிடிக்கவில்லை என்றான், சரி நாம சாப்பிட்டு பார்க்கலாம் என்று டேஸ்ட் செஞ்சா எனக்கும் பிடிக்கவில்லை கதவை திறந்து வெளியில் வந்த ஆதவனிடம் இந்தா உனக்குதான் சாப்பிடு என்று சொல்லி கப்பை அவன் கையில் கொடுத்தேன், சரியான சமயத்தில் அண்ணாச்சி தேடிக்கிட்டு வெளியில் வந்துட்டார் இங்க என்னாடா செய்யுறீங்கன்னு, பாருங்க அண்ணாச்சி ஒரு கப் ஐஸ்கிரீமை தனியா சாப்பிடுறான் ஆதவன் என்று போட்டு கொடுத்துட்டு வந்துட்டேன். நிகழ்சி முடியும் வரை ஒரு கப் ஐஸ்கிரீமை தனியா திருடி தின்ன ஆதவன் என்ற பெயர் வரும் படியும் பார்த்துக்கிட்டேன்.
கடைசி நேரம் வரை சுந்தருக்காக காத்துக்கொண்டு இருந்தோம் ஏன் என்றால் அவர் எடுத்து வருகிறேன் என்று சொன்ன வடைக்காக என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவர் வந்ததும் ஆஹா வடை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் ஓடி போய் அவரை வரவேற்க சென்றேன், அந்த சைக்கிள் கேப்பில் நான் தனியாக எதில் அதிகம் இருக்கும் என்று ஸ்பெசலாக பார்த்து பார்த்து உட்காந்திருந்த இடத்தில் வேறு ஒரு நண்பர் உட்கார்ந்துவிட்டார்,
சுந்தரும் வடை இல்லை வேறு ப்ரூட் மிக்ஸ் + ஐஸ்கிரீம் தான் என்றார் ஆஹா வடை போச்சேன்னு சொல்லுவது சரியாக பொருந்தியது. இந்தமுறை வடை திருட முடியாமல் போன வருத்தத்தில் மிகவும் சோகமே உருவாக கலை இருந்தார்.
பின் தட்டு நிறைய பழம், சமோசா, கட்லெட்,என்று என்ன என்னமோ வெச்சுட்டு வெடி வெடிச்ச பிறகுதான் சாப்பிடனும் என்று கட்டளை வேறு போட்டுவிட்டார் சுல்தான் பாய், எவ்வளோ கஷ்டமான விசயம் இது. ஒரு வழியா வெடி வெடிச்சதும் சாப்பிட போகும் நேரம் லேட்டாக வந்த லியோவுக்கு பிளேட் இல்லாததால் வாங்க ஷேர் செஞ்சு சாப்பிடலாம் என்று ரொம்ப பெருந்தன்மையா சொல்லிட்டு உள்ளுக்குள் இன்னைக்கு நமக்கு நேரம் சரில்லை போல என்று நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்.
லொடுக்கும் அவர் குடும்பத்தோடு வந்தார், படகும் அவர்களுடைய கணவரும் குடும்ப சகிதமாக ஆஜர் ஆனார்கள்.
எல்லாம் முடிஞ்சு ஷார்ஜாவில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர் நண்பனும் முத்துகுமரனும்.
(சின்ன கப்பில் ரெண்டே ரெண்டு ஸ்பூன் பிரியாணி, நான் ரொம்ப கொஞ்சமாக சாப்பிடுவதுக்கு சாட்சி)
சில லெக் பீஸ்கள்:
1) அண்ணாச்சி ஒரு வெஜ்டெல்புல் சாலடை கையில் வெச்சுக்கிட்டு குசும்பா கொஞ்சாமாச்சும் வெச்சுக்கடா என்று எவ்வளோ கெஞ்சி பார்த்தார் அவரிடம் ஸ்ரிக்டா அண்ணாச்சி நான் Pure Non veg என்னை மாத்த முயற்சிக்காதீங்கன்னு சொன்ன பிறகுதான் போனார்.
2) செந்திவேலன் சில பிரபலங்கள் விமர்சனம் மோசமாக எழுதுவதால் பலர் படம் பார்க்காமல் போய்விடுகிறார்கள் கொஞ்சம் கவனமாக எழுதனும் என்றார்
3) சுபைர் வெண்ணிலா கபடி குழுவில் வரும் புரோட்டா காமெடி போல் என் தட்டில் பிரியாணி வைக்கவே இல்ல இது போங்காட்டம் திரும்ப முதலில் இருந்து எல்லாத்தையும் வையுங்க என்று சண்டை போட்டுக்கிட்டு இருந்தார்.
4) கலை கடமை வீரராக பார்சலும் எடுத்து சென்றது அவரின் கடமைக்கு சிறந்த உதாரணமாக இருந்தது.
5) ராஜா கமால் எழுதிய பூத்துமகிழும் பூக்கள் புத்தக வெளீயிடு நடந்தது, சென்ஷி புத்தகத்தை பற்றி யாரும் உடனே கருத்து ஏதும் சொன்னால் நல்லா இருக்கும் என்றார், அட்டை அழகாக இருக்கிறது புத்தகம் வாசமாக இருக்கிறது என்று வேண்டும் என்றால் உடனடியாக சொல்லலாம் என்றது சைலண்ட் ஆகிவிட்டார்.
6) செந்தில் நாதனுக்காக பதிவை மட்டும் பார்த்துவிட்டு பணம் அனுப்பிய முகம் தெரியாத நண்பர்களை பற்றி அண்ணாச்சி சொன்னார் மிகவும் சந்தோசமாக இருந்தது.
7) பினாத்தல் சுரேஷ் கதை போட்டி வைக்கனும் என்றார் நீங்கதான் நடுவர் நான் 10 கதை எழுதுவேன் என்றதும் அதன் பிறகு போட்டி பற்றி பேசவே இல்லை!