ஸ்கூலில் படிச்சிக்கிட்டு இருக்கும் பொழுது 10th B செக்சனில் ஒரு பயபுள்ள இருப்பான் பேரு உப்பிலி...மாலை நேரத்தில் கிரவுண்டில் பார்த்தால் காலில் பேடு எல்லாம் கட்டி கிரிக்கெட் பேட்டை இப்படியும் அப்படியுமாக காற்றில் கத்தி வீசுவது போல் வீசிக்கிட்டு இருப்பான்..ஒரு முறை ஆப் சைடிலில் வீசினால்
அடுத்த முறை ரெண்டு ஸ்டெப் போட்டு ஏறி வந்து கங்குலி அடிப்பது போல் பேட்டை வீசுவான்...எதிரே பால் போட யாரும் இருக்க மாட்டார்கள்... அவனை ஆச்சரியமாக பார்ப்போம் ஏன் என்றால் அவன் அப்பொழுதே சொந்தமாக
பேட், பேடு கிளவுஸ் எல்லாம் வெச்சிருந்தான். அவன் அடுத்த செக்சன் என்பதால் அவ்வளோ பழக்கம் கிடையாது...அவன் காற்றில் மட்டை வீசும் ஸ்டைலை பார்த்தால் கிரிக்கெட்டில் பெரிய புலின்னு எல்லோரும் நினைச்சிப்பாங்க.
அவனைப்பற்றி சொல்லணும் என்றால்...பெரிய சைஸ் கிரிக்கெட் பால் என்று சொல்லலாம்...ஏன்னா அப்படியே உருண்டையா இருப்பான்...கழுத்துன்னு ஒரு பார்ட் அவனுக்கு மிஸ் ஆகியிருக்கும். ஆளும் கட்டை. அடுத்தவருடம் எங்க செக்சனுக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சுது அவரு பேட்டிங்கில் மட்டும் இல்லை பவுலிங்கிலும் புலின்னு. உலகத்திலேயே சிறந்த டீம் ஆஸ்திரேலியா தான்...ஷேன் வார்ன் தான் சிறந்த பவுலர் என்று எல்லாம் பீட்டர் வுட்டுக்கிட்டு இருப்பான். போகப்போகதான் தெரிஞ்சது அவன் ஷேர்வார்ன் மாதிரியே
தான் பவுலிங் போடுவதாகவும்...இந்திய டீமில் இடம்பிடிக்கப்போகும் இந்திய ஷேன்வார்ன் இவன் தான் என்றும் சொல்லிக்கிட்டு இருந்தான்.
பவுலிங் போடும் முன்பு ஓடிவரும் ஸ்டைல், பந்தை போடும் முன்பு ஒருகையால் பந்தை சுத்தி சுத்தி பிடிக்கும் ஸ்டைல் கையை மேலே தூக்கும் ஸ்டைல்,நாக்கை ஒரு பக்கமா துருத்திக்கிட்டு பந்து போடும் ஸ்டைல் என்று எல்லாத்திலும்
அப்படியே ஷேன் வார்ன் மாதிரியே இருக்கும்...ஆனால் பந்து மட்டும் பொத்துன்னு எருமைமாட்டு சாணி மாதிரிதான் விழும். எப்பயாச்சும் கல்லு மேல பால் பட்டு எங்கேயாச்சும் திரும்பிட்டா அதுக்கு ஒரு பேரு சொல்லி கொல்லுவான்... பேட்ஸ் மேன் காலிலோ, அல்லது கேட்ச் மாதிரி தெரிஞ்சாலே அப்படியே ஷேன் வார்ன் மாதிரியே அவுட் ஷாஆஆஆஆஅட்
என்று இருகையையும் தூக்கிக்கிட்டு அப்படியே வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காந்திருப்பது போன்ற பொசிசனில் கத்துவான்....அம்பையர் அவுட் கொடுக்காட்டி...கொஞ்சங்கொஞ்சமாக கீழே இறங்கி இந்தியன் டாய்லெட் பொசிசனுக்கு வந்து தலையில் கையவெச்சிக்கிட்டு உட்காந்துவிடுவான்.
நாளுக்கு நாள் அவன் மேனரிசம்தான் அதிகமாச்சே ஒழிய பந்து திரும்புவதாக இல்லை...இவன் பவுலிங் என்றாலே பேட்டிங் புடிப்பவனுங்களுக்கு செம குஷி ஆகிடும்.
எவனாவது தப்பு தவறி இவன் பந்தில் அவுட் ஆகிவிட்டால் அன்னைக்கு முழுவதும் இவன் பேச்சு தாங்கமுடியாது...அது எப்பயாச்சும் தான் நடக்கும் என்பதால் அதைக்கூட தாங்கிக்கலாம். ஆனால் மச்சி இந்த மாதிரி பவுலிங் எல்லாம் நம்ம பிட்சில் எடுக்காது மச்சி...பிட்ச் மட்டும் ஒழுங்கா இருந்துச்சுன்னு வையி...எல்லா விக்கெட்டும் எனக்குதான் ஒருத்தன் அடிக்கமுடியாதுன்னு அவன் பேசும் பேச்சைதான் கேட்கமுடியாது. ஒரு முறை இவன் ஓவரில் 4 சிக்ஸ் 2 போர் போனதில் ரொம்ப வருத்தத்தில் இருந்தான். மச்சி இனி இந்த மாதிரி பிச்சிக்கு சைனாமேன் பவுலிங் தான் சரிவரும் இனி சைனாமேன் பவுலிங் என்றால் என்ன என்றேன்? வெயிட் என்று சஸ்பென்ஸ் வெச்சிட்டு போனான்...இரண்டு நாள் விளையாடவும் வரலை...
திடீர் என்று ஒருநாள் வந்து நின்னவன் பாலை புடுங்கி மச்சி இன்னைக்கு சைனாமேன் பவுலிங் என்றான்....என்னடான்னு பார்த்தா சவுத் ஆப்ரிக்கா பால் ஆடம்ஸ் மாதிரி ஒரு குதி குதிச்சிட்டு ஸ்டெம்பை பார்க்காம என்னென்னமோ குரளி வித்தை எல்லாம் காட்டி பவுலிங் போட்டான்....இம்சை அரசன் வில்லு பயிற்சி எடுத்த மாதிரி பேட்ஸ் மேன் இருக்கும் பக்கத்தை தவிர மத்த பக்கம் எல்லாம் பால் போச்சு...அந்த வொயிட்க்கு எல்லாம் விலகி போகும் டிஸ்டென்சை கால்குலேட் செஞ்சு ரன் கொடுக்கனும் என்றால் குறைந்தது 4 ரன் கொடுக்கனும்..(ஒரு சைனாமேன் வொயிடு = 4 நார்மல் பவுலிங் வொயிட்) தொடர்ந்து வொயிடா போய்கிட்டு இருந்துச்சு ...மச்சி போதும் இந்த மாதிரி பவுலிங்குக்கு இந்த பிட்ச் சரிவராது போல அதான் பால் எங்கெங்கோ எகிறுது...இது சேப்பாக் ஸ்டேடியத்தில் போடவேண்டிய பவுலிங் இப்ப இதை இங்க போடவேண்டாம் என்று சொல்லிட்டு பவுலிங் மாத்திக்கொடுத்ததிலும் பசங்க சிரிச்சதிலும் கோவப்பட்டு சைக்கிள் எடுத்துக்கிட்டு போய்விட்டான்...அப்புறம் ஒருவாரம் கழிச்சி திரும்பவும் ஷேர்ன்வார் அவதாரம் எடுத்தான்...என்னடா மச்சி ஆச்சி சைனாமேன் பவுலிங் என்றேன்...அந்த பவுலிங் பிராக்டிஸ் செஞ்சதிலிருந்து கை வலி டாக்டரிடம் போய் காட்டியதில் எல்.போ இன்ஜுரியா இருக்கும்...இனி இதுமாதிரி பவுலிங் எல்லாம் பிராக்டிஸ் செய்யாதீங்கன்னு அட்வைஸ் செஞ்சாரு மச்சி..நம்ம டிஸ்ரிக்ட்லேயே சைனாமேன் பவுலிங் போட தெரிஞ்ச ஒரே ஆளு நான் தான் மச்சி...இந்த எல்போ இன்ஜுரி மட்டும் வராம இருந்திருந்தா...
ப்யூஸ் சால்வா பவுலிங்கை பார்த்தப்ப எல்லாம் எனக்கு உப்பிலி நினைவுதான் வந்துச்சு...