ஸ்கேன் செய்யும் பொழுது என்னையும் உள்ளே வரசொல்லி இதோ பாருங்க கைய கால எப்படி ஆட்டுது பாருங்க அப்பாவுக்கு ஹாய் சொல்றான் போல என்று டாக்டர் சொல்லியது...
என்னங்க டாக்டர் சொன்ன தேதிக்கு முன்னாடியே வந்துடுங்க, உங்களை பார்த்துட்டுதான் நான் வார்டுக்குள்ளே போவனும், அதுமாதிரி புள்ளைய நீங்கதான் கையில வாங்கனும், சீக்கிரம் வந்துடுங்க என்று ஏர்போர்ட்டில் சொல்லிவிட்டு சென்றது...
அக்டோபர் 20 ஆம் தேதி காலை 4 மணிக்கு குழந்தைய எடுத்துக்கிட்டு வந்து என் கையில் கொடுத்தது, எல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கு. நாட்கள் எத்தனை சீக்கிரமாக ஓடுகிறது. போனவாரம் பையனின் முதல் பிறந்தநாளை கொண்டாடினோம். நண்பர்கள் பலரும் வந்து வாழ்த்த நல்லபடியாக நடந்து முடிந்தது.
குடும்பத்தோடு வந்திருந்த நண்பர்களிடம் ஒரு 15 கேள்வி அடங்கிய பேப்பரை கொடுத்து பதில் சொல்ல சொல்லியிருந்தோம்... அதில் ஒரு கேள்வி எந்த கிழமையில் திருமணம் நடந்ததுன்னு, அதுக்கு நண்பர் ஒருவர் வியாழக்கிழமை என்றும், அவரோட மனைவி ஞாயிறு என்றும் சொல்லியிருந்தார். அப்ப வியாழக்கிழமை கல்யாணம் செஞ்ச பொண்டாட்டி எங்கேன்னு ஆசிப் அண்ணாச்சி புடிச்சி ஓட்டிக்கிட்டு இருந்தார். இன்னொருவர் முதன் முதலாக கொடுத்த கிப்ட்டுக்கு தப்பா பதில் சொல்லியிருந்தார் அவர் முதலிரவின் பொழுது ஒரு கோல்ட் ரிங் வாங்கி கொடுத்திருக்கிறார் அதையே மறந்துட்டாரே வீட்டுக்கு வரட்டும் கவனிச்சிக்கிறேன் என்று ஒருவர் சொல்லிக்கிட்டு இருந்தார்... ஏதோ நம்மளால் முடிஞ்சது என்று சந்தோசமாக இருந்துச்சு.
வந்திருந்த கிப்ட்டில் இருந்த ஒரு மீன் பொம்மைய வெச்சி பயபுள்ள விளையாண்டுக்கிட்டு இருந்தான் அந்த மீன் வாய திறந்து திறந்து மூடும் நானும் அவனை அந்த மீன் கடிக்க வரமாதிரி விளையாட்டு காட்டிக்கிட்டு இருந்தேன் சிரிச்சி விளையாண்டுக்கிட்டு இருந்தான்... மீன் குஞ்ச கடிக்கபோவுதுன்னு கடிக்க வுட்டேன் அதன் பிறகு குஞ்சான மூடிக்கிட்டு ஓடி வந்து என் மேல உட்காந்துக்கிட்டு அந்த பொம்மைய வெச்சி விளையாடவே மாட்டேன்னுட்டான்:))
என் பிறந்தநாளாகட்டும்,திருமணநாளாகட்டும், பையன் பிறந்தநாளாகட்டும் எல்லாத்துக்கும் இன்றுவரை முதல் ஆளாக வாழ்த்துவது காயத்ரி சித்தார்த். இந்த முறை அவன் பிறந்தநாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பே இங்கிருக்கும் quickdubai என்ற ஆன்லைன் கிப்ட் ஷாப்பிங் மூலம் ஒரு கிப்ட் வவுச்சர் அனுப்பியிருந்தார்கள், அந்த ஆளும் போன் செய்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது அட்ரஸ் சொல்லுங்க என்றான், என்னடா பார்சல் யார் அனுப்பியதுன்னு சொல்லு என்றேன் அதெல்லாம் சொல்லமுடியாது உங்க அட்ரஸ் சொல்லுங்க என்றான், அப்ப அந்த பார்சலை நீயே வெச்சிக்க எனக்கு வேண்டாம் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டேன், பிறகு திரும்ப இரண்டு முறை அதே நம்பரிலிருந்து கால் வந்தது எடுக்கவில்லை, கொஞ்ச நேரம் கழித்து வேற மொபைல் நம்பரிலிருந்து கால் வந்தது எடுத்தேன், சார் உங்களுக்கு உங்க நண்பர் ஒருவர் கிப்ட் அனுப்பியிருக்கிறார் சர்பிரைஸாக இருக்கட்டும் என்றுதான் பேரை சொல்லவில்லை அட்ரஸ் சொல்லுங்கள் என்றான், பிறகு சொன்னேன். வந்து கொடுத்துவிட்டு சென்றான்.
***********
வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கதவை திறக்கங்காட்டியும் ஓடி வந்து காலை கட்டிக்கிட்டு ஷூவை கூட அவுக்க விடமாட்டான், தூக்கி கொஞ்ச நேரம் விளையாண்டு விட்டு கீழே விட்டால் தான் பேசாமல் இருக்கிறான், அதுமாதிரி தூங்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் அப்பா மேல லவ்வுன்னா லவ்வு அப்படி பொங்குது பயபுள்ளைக்கு, சாப்பிடும் பொழுது மடிமேல ஏறி நின்னு வாயை புடிச்சு நோண்டி கைய தட்டிவிட்டு ஒருவழி செஞ்சிடுவான், ஏதும் அவனுக்கு திங்க வத்தல் அல்லது அப்பளம் கொடுத்தா ஆசையா வாயில் கொண்டு வந்து ஊட்டி விடுவான், ஆவ்வ்வ்ன்னு கவ்வி அதை தின்னுட்டா கை விரலை திருப்பி திருப்பி பார்ப்பான் கையில் கானும் என்றதும் அவ்வ்வ்ன்னு அழ ஆம்பிச்சிடுவான் திரும்ப கையில் ஒரு பீஸ் வத்தலை கொடுக்கனும் சரி நாம தின்னாதானே அழுவுறான்னு திங்காம சும்மாச்சுக்கும் திங்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தா அதுக்கும் அழகை ....பாசக்கார பய உட்டுட்டு சாப்பிட மாட்டேங்கிறானேன்னு சொல்லிக்கிட்டு சாப்பிடுவேன்.
நைசா கப்போர்டை திறந்து வெச்சிட்டு அவனுக்கு வா வான்னு சைகை காட்டிட்டு வெளியில் வந்துடுவேன் பயபுள்ள போய் கிளி ஜோசியக்காரன் கிளிமாதிரி மடிச்சி வெச்சிருக்கும் டிரசை ஒன்னு ஒன்னா எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த ட்ரே காலியானதும் சமத்தா வந்துடுவான், அவன் அம்மா வந்து பார்த்துட்டு காச்சு மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கும் நாங்க சமத்தா சாஞ்சாடம்மா சாஞ்சாடு விளையாண்டுக்கிட்டு இருப்போம். இன்னும் கொஞ்சம் பெருசா ஆகவுட்டு கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும்.