டிஸ்போசல் சிரஞ்ஜில் மருத்தை எடுத்து அதை ஒரு அமுக்கு அமுக்கி ரெண்டு சொட்டு மருத்து சும்மா சாமிக்குன்னு தரையில் விழுந்ததும், டாக்டர் சொன்னாங்க கொஞ்சம் பேண்டை இறக்குங்க என்று.. பதறிபோன ஹீரோ அச்சிச்சோ முடியாது கையில் போடுங்க என்று சொல்ல டாக்டர் இல்லை இதை கையில் போடமுடியாது, பின்னாடிதான் போடனும் என்று பிடிவாதம் பிடிக்க அப்ப வேற ஜென்ஸ் டாக்டரை விட்டு போட சொல்லுங்க இல்லை ஊசியே வேண்டாம் என்று சொல்லி பிடிவாதம் பிடிச்சான். கூட வந்த நண்பன் திட்டியும் போடா உடம்பு சரி இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கிளம்பி வெளியே வந்துட்டான் நம்ம ஹீரோ. கடைசிவரை ஊசி போட்டுக்கவே இல்லை.
சரி இப்ப எதுக்கு இந்த ப்ளாஸ் பேக் என்று கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கு, இப்படி ஊசி பின்னாடி போட்டுக்கவே கூச்சப்படும் நம்ம ஹீரோ வாழ்வில் ஒரு புயல் அடிச்சு அவன் கட்டி காத்து வந்த கற்பு காற்றில் பறந்து போச்சு.. எப்படின்னு சொல்றேன் கேளுங்க.
நம்ம ஹீரோவுக்கு கல்யாணம் ஆகி ஒருமாசம் கூட ஆகவில்லை வேலை விசயமாக மனைவியை விட்டு பிரிஞ்சு இருக்க வேண்டிய சூழ்நிலை, எப்படியும் மனைவியை ஒரு இரண்டு மாசத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு அழைச்சுக்கிட்டு போய்விடனும் என்ற வெறியோடு கிளம்பி போனான் நம்ம ஹீரோ. போய் ஒரு பத்து நாள்தான் ஆகியிருக்கும் தலைவருக்கு ஒண்ணுக்கு அடிக்கும் பொழுது ஒண்ணுக்கோடு வலியும் கொஞ்சம் இரத்தமும் சேர்ந்து வர ஆரம்பிச்சிட்டு. ஆஹா இதுவரைக்கு ஒழுங்காதானே இருந்துச்சு, மனைவியை அழைச்சிக்கிட்டு வரும் நேரம் பார்த்து இப்படி ஆவுதே என்ற கவலையோடு டாக்டரை பார்க்க போனான் நம்ம ஹீரோ.
அங்க ரிசப்சனில் இருந்த டீவியில் வயசுக்கு வராத பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்ட கவுண்டமணிக்கு செந்தில் ஐடியா கொடுத்து கிரிக்கெட் விளையாட சொல்லி, பால் கரெக்ட்டா பொண்ணோட அப்பா மண்டையை உடைக்காமல் கவுண்டமணியை பதம் பார்க்கவேண்டிய இடத்தில் பதம் பார்த்துவிடும், டாக்டர் ஆப்ரேசன் முடிஞ்சதும் உங்களை காப்பாத்திட்டோம் ஆனா இனி நீங்க தாம்பத்தியம் வெச்சிக்க முடியாது என்று சொல்லுவார், இந்த காமெடியை பார்த்ததும் நம்ம ஹீரோ கொஞ்சம் ஜர்க் ஆனாலும். பயப்படாத மாதிரி உள்ளே போய் டாக்டரை பார்த்தான், எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து வந்ததும் அதை பார்த்த டாக்டர் உங்களுக்கு சிறுநீரக கல் இருக்கு, இந்த பக்கம் கிட்னியில் இரண்டு அந்த பக்கம் இரண்டு இதோ கிட்னிக்கும் பிளாடருக்கும் போகும் பாதையில் ஒன்னு வந்து சிக்கி ஜாம் ஆகி நிக்குது அதான் அது நகரும் பொழுது வலியோடு இரத்தமும் வருகிறது என்றார். அவசரமாக அதை ஆப்ரேசன் செஞ்சு கல்லை உடைக்கனும் என்று டாக்டர் சொல்ல. முதலுக்கு மோசம் வராது என்ற உறுதி மொழியை வாங்கிக்கிட்டு விரைவில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான் நம்ம ஹீரோ.
வீட்டுக்கு போய் படுத்ததும் நம்ம ஹீரோவுக்கு பல யோசனை, இந்த ஊரில் இருக்கும் டாக்டருங்ககிட்ட நாம ஒன்னு சொல்லி அது புரியாம அவர் ஒயரிங்கை மாத்தி கொடுத்து ஏதும் சார்ட் சர்கியூட் ஆகி புகைஞ்சு போய்ட்டா என்ன செய்வது? பெட்டர் நம்ம ஊருக்கே போய் ஆப்ரேசன் செஞ்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்து நண்பர்கள் பலர் கைக்காட்டிய டாக்டரிடம் போய் காட்டி அவரும் சீக்கிரம் ஆப்ரேசன் செஞ்சுடுவது நல்லதுன்னு சொன்னதும், சரி என்று அன்றே அட்மிட் ஆகிவிட்டான் நம்ம ஹீரோ.
மறு நாள் காலை 10 மணிக்கு ஆப்புரேசன், இரவில் இருந்து ஏதும் சாப்பிட கூடாது குடிக்க கூடாது என்று எல்லாம் சொன்னாங்க சரின்னு அங்கிருந்த பெட்டில் படுத்து இருந்தான், ஒரு அழகான நர்ஸ் வந்து, சார் எழுதிருங்க ஆப்ரேசனுக்கு பிரிப்பேர் செய்யனும் என்று சொன்னதும் எழுந்தான், என்ன செய்யனும்? உட்காருங்க என்றதும் உட்காந்தான், கண்ணை ஒரு பச்சை துணியால் கட்டியது அந்த நர்ஸ், படுக்க சொன்னுச்சு அந்த நர்ஸ். படுத்ததும். கொஞ்சம் பேண்டை கழட்டுங்க,சட்டை பனியனை தூக்குங்க என்றதும் பதறி எழுந்த நம்ம ஹீரோ எதுக்குன்னு கேட்டான்.
"ஷேவ் செய்யனும்"
"எங்க?"
"அங்க"
"கொடுங்க நான் செஞ்சுக்கிறேன்"
"முடியாது, வயிறில் இருந்து முட்டி கால் வரை சுத்தமா ஷேவ் செய்யனும்"
"முடியாது நானே செஞ்சிக்கிறேன்"
"இல்லை டாக்டர் என்னைதான் திட்டுவார், கண்ணை கட்டிக்கிட்டு படுங்க"
"என்னங்க இது கண்ணை கட்டிக்கிட்டா சரி ஆகிடுமா? அதெல்லாம் முடியாது."
"சொன்னா புரிஞ்சுக்குங்க, இன்னும் ரெண்டு பேசண்டுக்கு பிரிப்பரேசன் செய்யனும் படுங்க"
"அல்லோ நீங்க சொன்னா புரிஞ்சுக்குங்க, முடியாது அட்லீஸ்ட் Male நர்ஸ் இருந்தா அனுப்புங்க"
"அவுங்களுக்கு நைட் டூட்டி கிடையாது காலையில்தான் வருவாங்க"
"அப்ப காலையிலேயே செஞ்சுக்கலாம் நீங்க போங்க"
"முடியாது"
"ஆப்ரேசன் செய்யலைன்னா கூட பரவாயில்லை, நான் ஒத்துக்கமாட்டேன்"
ஹல்லோ டாக்டர் நான் கமலா பேசுறேன், 203 பேசண்ட் பிரிப்பரேசனுக்கு ஒத்துக்கமாட்டேங்கிறார் அடம்பிடிக்கிறார்,ரொம்ப கூச்சப்படுகிறார். நீங்க பேசுங்க... " ஹல்லோ இந்தாங்க டாக்டர் லைனில் இருக்கிறார்.
டாக்டர் நான் லேடி டாக்டரிடம் ஊசி போட்டுக்க கூட கூச்சப்படுவேன், இதுக்கு எல்லாம் ஒத்துக்கமாட்டேன், ஆப்ரேசன் டிலே ஆனாலும் பரவாயில்லை வலியை தாங்கிக்கிறேன். இது நம்ம ஹீரோ
"ஓக்கே ஓக்கே போனை அவுங்க கிட்ட கொடுங்க"
"ஓக்கே டாக்டர், ஓக்கே டாக்டர் சொல்லிடுறேன்....
"என்ன சொன்னார் டாக்டர்?"
"காலையில் வருவாங்க.." படார்ர்ர்ர்ர்ர்ர்ர் கதவு வேகமாக சாத்தப்பட்டது.
காலையில் ஒரு ஆள் வந்து எல்லாம் முடிஞ்ச பிறகு பச்சை கலர் அங்கி நம்ம ஹீரோவுக்கு கொடுக்கப்பட்டது, ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைச்சிக்கிட்டு போய் மயக்க மருந்து கொடுத்த பிறகு சில பெண் குரல் கேட்டது, தூக்கி வாரி போட்டாலும் நம்ம ஹீரோவால் ஒன்னும் செய்யமுடியவில்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு. ரூமில் கொண்டு வந்து போட்ட பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சு நிமிர்ந்து பார்க்க தலையை தூக்கி பார்க்க முடியவில்லை கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருந்துச்சு, மற்றொரு கையால் என்ன நடந்திருக்கு என்று ஆராய்ந்த பொழுது, டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்து அதில் ஒரு விரல் மொத்த பிளாஸ்டிக் டியூப் சொறுவி இருந்தது, ஆஹா அது எங்க போவுதுன்னு பார்த்தா ஒரு பிளாஸ்டிக் பையில் போய் முடிவடைந்தது.
கண்ணில் கண்ணீர் வழிய படுத்திருந்தான் நம்ம ஹீரோ, அவனோட நண்பன் ஏன் டா ரொம்ப வலிக்குதா என்றான். அதுக்கு அவன் இல்லைடா இத்தனை வருசம் பொத்தி வெச்சிருந்த கற்பு காற்றில் பறந்து போய்ட்டுடா, ஆப்ரேசன் தியேட்டரில் யாருன்னே தெரியவில்லை பெண் குரல் கேட்டுச்சுடா. என்று அழுதான். அதுக்கு நண்பன் அதான் நீ அவுங்க மூஞ்சை பார்க்கவில்லையே என்றான்.. அதுக்கு ஹீரோ டேய் அவுங்க மூஞ்சை நான் பார்க்கவில்லை என்றால் என்ன....என்று திட்டிவிட்டு போச்சே போச்சே எல்லாம் போச்சேன்னு படுத்து இருந்தான்.
அப்பொழுது கிளிக் என்று கதவு திறக்கும் சத்தம், வெள்ளை டிரஸில் ஒரு ட்ரேயில் மருந்தோடு வந்த நர்ஸ் எப்படி இருக்கு, வலி இருக்கா? என்று கேட்டுக்கிட்டே வலிக்காத மாதிரி ஒரு ஊசியை போட்டு விட்டு, டக்கென்று பச்சை அங்கியை தூக்கி டியூபை பிடிச்சு பார்த்துவிட்டு, ம்ம்ம் இன்னும் யூரின் கலர் மாறல என்று டியூபை ரெண்டு ஆட்டு ஆட்டிவிட்டு போய்விட்டார்கள். ஹீரோவால் ஒன்னியும் சொல்லமுடியல. அதன் பிறகு போற வர நர்ஸ் எல்லாம் தூக்கி பார்த்து டியூபில் வரும் யூரின் கலரை நோட் செய்வது வழக்கமா போய்விட்டது. தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன ஹீரோ சோகமாக படுத்து கிடந்தான்.
அருகில் இருந்த நண்பனை கூப்பிட்டு மச்சி வரண்டாவில் யாரும் டேபிள் சேர் போட்டுக்கிட்டு உட்காந்து இருக்காங்களா பாரு என்றான். அவனும் ஓடி போய் பார்த்துட்டு இல்லைடா, ஏன் ஏதும் செய்யுதா? நர்ஸை கூப்பிடவா என்றான். அதுக்கு ஹீரோ, இல்லை இல்லை கூப்பிட வேண்டாம் என்னமோ எக்ஸ்பிஸன் நடக்கிறமாதிரி போறவங்க வரவங்க எல்லாம் தூக்கி பார்த்து பிள்ளையார் கோவிலில் மணி அடிப்பது போல் டியூபை ஆட்டுறாங்களே, அதான் வெளியில் யாரும் உட்காந்து டிக்கெட் கொடுத்து அனுப்புறாங்களோன்னு டவுட் என்றான். உனக்கு தையலை கீழே போட்டு இருக்க கூடாது. வாயில் போட்டு இருக்கனும் என்று திட்டிவிட்டு படுத்தான் நண்பன்.
இரண்டாவது நாள் ஒயரிங் எல்லாம் கட் செஞ்சுவிட்டு டாக்டர் நீங்க வீட்டுக்கு போகலாம், ஆனா ஒரு மாசம் "ஒன்னியும் செய்யக்கூடாது". ஊர்ல பாம்பு அடிக்கும் பொழுது தலையை அடிச்சு நசுக்கிட்டாலும் வாலு ஆடும், உயிர் இருக்கு பாருன்னு போட்டு செத்த பாம்பை அடிஅடின்னு அடிப்பாங்க அதுமாதிரி அடிச்சிட்டு பேசுறீங்க பேச்சு, நீங்க சொல்லவில்லை என்றாலும் ஒன்னியும் முடியாது போல டேமேஜ் அப்படி இருக்குன்னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வரும் பொழுது முறைச்சு பார்த்துக்கிட்டே போனது, பிரிப்பரேசன் செய்யவந்து திரும்பி போன நர்ஸ், ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்த்துவிட்டு உன்னை மட்டும் விரட்டி அடிச்சிட்டேனே, நீ விட்ட சாபமா இருக்குமா இல்ல ஏதும் நாயை கல்லால் அடிச்சு பிரிச்சதால் அந்த நாய்விட்ட சாபமா இருக்குமா ஏன் இப்படி என்று யோசனையில் வீட்டுக்கு வந்தான் ஹீரோ.
விவேக் ஒரு படத்தில் பின்னாடி வேஸ்டியை தூக்கி பிடிக்க ஆள் இருப்பது போல் இவன் முன்னாடி கைலியை தூக்கி பிடிச்சுக்கிட்டு சேரில் உட்காந்திருந்தப்ப விசுக் என்று ஒரு கல் பறந்து போய் வேலியில் விழுந்ததும் லொள் லொள் என்று சத்தத்தோடு இரண்டு நாய்கள் பிரிந்து வேறு வேறு பக்கம் ஓட அதை தொரத்திக்கிட்டு ஒரு சிறுவர் கூட்டம் ஓடியது. அந்த பசங்களை நினைச்சு சிரிச்சுக்கிட்டு உட்காந்திருந்தான் நம்ம ஹீரோ.
*************சில வருடங்களுக்கு பிறகு********************
அதன்பிறகு லேடி டாக்டர் ஜென்ஸ் டாக்டர் என்று எல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டான் நம்ம ஹீரோ.
டாக்டர் ஹல்லோ ஹல்லோ இப்ப எதுக்கு பேண்டை கீழே இறக்குறீங்க இந்த ஊசியை கையிலேயே போட்டுக்கலாம். என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டான் நம்ம ஹீரோ.