Sunday, April 5, 2009
தமிழ்மணத்துக்கு ஒரு கோரிக்கை+ நன்றி நன்றி நன்றி
எப்பொழுதும் படிக்கும் அதே மக்கள் அதே நபர்கள் பின்னூட்டம் என்று ஸ்டார் வாரத்தில் முதல் இரு நாட்கள் ஓடிய பொழுது அதுக்கு முன்பு ஸ்டாராக இருந்த மக்களிடம் கேட்டதில் அவர்களும் அதையேதான் சொன்னார்புது ஆட்கள் மிகவும் குறைவு! அல்லது வருவது இல்லை என்று கொஞ்சம் உற்ச்சாகம் குறைந்தது. இருந்தும் சரி பரவாயில்லை என்று தொடர்ந்து எழுதியதில்,பல பல புதிய பதிவர்கள் வந்தபொழுது மிகவும் உற்சாகமாய் இருந்தது, டாக்டர் ருத்ரன் அவர்கள் பின்னூட்டம் போட்ட பொழுது அட..! நம் பதிவை கூட படித்து இருக்கிறாரே என்று மிகவும் சந்தோசமாக இருந்தது.
பின் புது புது ஆட்கள் ஃபாலோயராக ஆரம்பித்தவுடன் அட..! ஸ்டார் வாரத்திலேயே 200 தொட்டுவிட்டால் நன்றாக இருக்குமே! என்று மனம் பேராசை பட்டது.அது நடக்கவில்லை என்றாலும், ஹிட் கவுண்டர் சூடு வெச்ச மீட்டர் போல செம ஸ்பீடூ.
ஈ ஓட்டிக்கிட்டு இருந்த நம்ம கடை T-நகர் ரங்கநாதன் தெரு கடைத்தெரு போல் ஆனது,தினம் 500 பேர் வரும் இடத்தில் 3000பேர் வரை போனது ஒரே நாளில் இவை அனைத்துக்கும் காரணமாக இருந்த தமிழ்மணத்துக்கும்,ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
இது கொஞ்சம் பேராசைதான் இருந்தாலும் பரவாயில்லை, இதுபோல் தொடர்ந்து தங்கள் ஆதரவை தரும் படி கேட்டுக்கிறேன்.
தமிழ்மணத்துக்கு நான் வைக்கும் ஒரு கோரிக்கை
புதிதாக எழுத வரும் பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிதாய் இணைபவர்களுக்கு முதல் பக்கத்தில் ஒரு இடம் கொடுத்தால், அவர்கள் தனியாக கவனம் பெற வாய்ப்பு இருக்கிறது, முன்பு இருந்த அண்மையில் இணைந்தவர்கள் போல கடந்தவாரத்தில் இணைந்தவர்கள் அல்லது கடந்தமாதத்தில் இனைந்தவர்கள் என்று ஒரு சிறு பகுதி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்த ஏதுவாக இருக்கும். முதல் பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது அங்கு முடியவில்லை என்றாலும் புதிதாக வந்த சினிமா, தேர்தல் 2009 லிங்குக்கு அருகிலாவது புதியவர்களுக்கு என்று ஒரு இடம் கொடுங்கள் மிகுந்த ஆர்வமோடு எழுத வரும் பதிவர்களுக்கு பின்னூட்டம் மட்டுமே உற்சாகத்தை கொடுக்கும் அது இப்பொழுது கிடைக்க வழி இல்லை இருக்கும் கூட்டத்தில் யார் புதியவர்கள் என்பது கண்டுபிடிப்பது மிகவும்கடினம்.
முடிந்தால் செய்யவும்..
நன்றி...!
Saturday, April 4, 2009
துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!
ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.
என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.
இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.
தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.
வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.
இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.
டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!
ஆண்களின் குளியலறை

Friday, April 3, 2009
11 ஸ்டார் கிரிக்கெட் குழு
அதுவரை எங்களிடம் இருந்தது மரப்பலகையில் பேட் போல செதுக்கப்பட்ட ஒரு பேட் தான், கைப்புடி உருண்டையா எல்லாம் இருக்காது!பட்டையாகதான் இருக்கும். சில சமயம் கார்க் பாலில் விளையாடும் பொழுது கை எல்லாம் வலிக்கும் இருந்தும் விளையாடுவோம்,அப்பொழுது பேசிக்கிட்டு இருக்கும் பொழுது யோசனை சொன்னேன் டேய்.. இங்க விளையாடுவது வரைக்கும் இந்த பேட் ஓக்கே, ஆனாகுடவாசலில் போய் விளையாடப்போறோம் அங்க போகும் பொழுது இந்த பேட்டை தூக்கிட்டு போவது நல்லா இருக்காது, ரன்னருக்கு இந்த பேட்வெச்சுக்கலாம் பேட்டிங் புடிப்பவனுக்கு ஒரு நல்ல பேட் வேணும்டா என்றேன், எப்பொழுதும் எதிர் வீட்டிலேயே இருக்கும் ஃபிகரை சைட் அடிக்கணும்என்றால் தினம் தினம் மேக்கப் போட்டுக்கிட்டு போகணும் என்ற அவசியம் இல்லை, அந்த ஃபிகரோட அத்தை பொண்ணோ அல்லது வெளியூர் பிரண்டோவீட்டுக்கு வந்து இருக்கும் பொழுது சைட் அடிக்க மேக்கப் போட்டுதானே போகணும்! அதுபோலதான் இதுவும் வெளியூர் என்றால் நல்ல பேட் வேண்டும் என்ற லாஜிக்கும்!
விசாரித்து பார்த்ததில் 180க்கு குறைந்து நல்ல பேட் இல்லை, சரி அதான் இன்னும் இரண்டு மாசம் இருக்கிறதே பக்கத்து ஊரு பசங்களோட பெட் மேட்ச்போட்டோம் என்றால் அட்லீஸ்ட் ஒரு 5 மேட்சில் செயிச்சா ஒரு 25 தேறும் இனி ஐஸ் வாங்கி திங்குற காசு,முட்டாய் வாங்கி திங்கிற காசு,சர்பத்குடிக்கிற காசு எல்லாத்தையும் இதில் போடணும் என்று சொல்லி ஒரு பாண்ட்ஸ் டப்பாவில் ஓட்டை போட்டு காசு சேர்க்க ஆரம்பிச்சோம்!நாள்ஆக ஆக ஒண்ணும் உண்டியல் நிரம்புகிற மாதிரி தெரியவில்லை! இனி அதிரடி ஆக்சன் தான் என்று ஒரு தொழிலதிபருக்கு உண்டான மூளையோடு செயல்பட்ட ஆரம்பித்தேன்.ஆலோசனை செய்ததில் ஒவ்வொருவர் சொன்ன யோசனைகள்
சினிமா காட்டுவது
கூட்டாஞ்சோறு ஆக்குவது
விறகு விற்பது
தேங்காய் விற்பது
சினிமா காட்டுவது ஊரில் இருக்கும் நண்டு சிண்டுங்களை எல்லாம் ஒண்ணாக்கி கூடத்துக்குள்ள அடைச்சு அதுங்க வைத்து இருக்கும் 5 பைசாவை எல்லாம் வாங்கி படம் காட்டுவது என்று முடிவு செய்தேன், சித்தப்பாவின் சினிமா தியேட்டரில் ஆப்ரேட்டர் கட் செஞ்சு போடும் பிலிம் சுருள் எல்லாத்தையும் எடுத்துவந்து சேர்த்து வெச்சு,ஒரு தகர டின்னில் ஒரு சின்ன ஓட்டை போட்டு அதுக்குள்ள டார்ச் லைட்டை வெச்சு அதன் ஒளி வெளியில் இருக்கும் பிலிம் சுருளில் படுமாறு வைத்து எதிரே வெள்ளை துணியில் பிலிமில் இருக்கும் படம் விழும் அந்த சுருளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றினால் படம் ஸ்லைட் ஸ்லைடாக மூவ் ஆகும்,இப்படிதான் படம் காட்டினோம், இருக்கிற நண்டு சிண்டு எல்லாம் ஒண்ணு சேர்த்து அதுங்ககிட்ட இருந்து ஆட்டைய போட்டதில் ஒரு மாதத்துக்கு 10க்கு மேல தேறவில்லை.அப்பா டார்ஜ் லைட்டுக்கு போடும் பேட்டரி ஒரு வாரத்திலேயே தீர அப்பா எவ்ரெடி காரனை திட்டிக்கிட்டு இருந்தார் பிள்ளை தொழிலதிபர் ஆவது தெரியாமால்!(வடிவேலு ஸ்கூலில் படிக்கிற பசங்க ஐஸ் பாய் விளையாடும் பொழுது எங்க ஒளிஞ்சு இருக்கான் என்று காட்டி கொடுக்க 25 பைசா வாங்குவார் அதுதான் நினைவுக்கு வருது இப்ப).
கூட்டாஞ்சோறு அவுங்க அவுங்க வீட்டில் இருந்து அரிசி,சர்க்கரை அது இதுன்னு எது கையில கிடைக்கிறதோ அதை ஆட்டைய போட்டுக்கிட்டு வரணும் அதன் பிறகு அதைவெச்சு சமைச்சு அதை வித்தோம் என்றால் காசு கிடைக்கும் என்று தக்காளி சாதம் செஞ்சா எங்களாலயே அதை வாயில் வைக்கமுடியவில்லை இப்படியாக சரவணபவனுக்கு போட்டியாக சரவணனால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமும் தோல்வியில் முடிந்தது!
விறகு விற்பது ஊரில் சும்மா பொறம்போக்கு நிலத்தில் விளைஞ்சு இருக்கும் கருவமரத்தை வெட்டி பாய் கடையில் கொடுத்தால் மனுவுக்கு 2 ரூபாய் தருவார் என்பதால் விறகு எல்லாம் வெட்டி கோழி வீட்டு வண்டியில் ஏற்றி பாய் கடையிலும் போட்டு மொத்தமாக 45ரூபாய் தேறியது ஆஹா சூப்பரு இதையே இன்னும் ரெண்டு மூணு நாள் செஞ்சா ரன்னர் பேட்டையும் வாங்கிடலாம் என்று பேராசை பட்டு அடுத்த நாள் போய் வெட்ட ஆரம்பிச்சதும் ஆயா வூட்டு மணியும் தலையாரியும் தொரத்த விழுந்தடிச்சு ஓடினோம் என்னாடான்னு பார்த்தா அது பொறம்போக்கு இடம் இல்லை அது ஆயா வூட்டு மணியோட இடம் என்று பிறகுதான் தெரிஞ்சது.
யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து அதை விற்றுவிடலாம் என்று இரண்டு நாள் செஞ்சோம் அதிலும் தலையாரி தொந்தரவு சரி இன்னும்15 நாள்தான் இருக்கு இதுவரை எம்புட்டு தேறி இருக்கு என்று பார்க்கலாம் என்று உண்டியலை உடைச்சு காசு எல்லாத்தையும் எண்ணினா 90 இருந்தது, இன்னும் 90 பேட்டுக்கு வேண்டும் கும்பகோணம் போய் வர 10 ஆக இன்னும் 100 வேண்டும் என்ன செய்யவது என்று யோசிச்சுக்கிட்டு வீட்டில் படுத்து இருக்கும் பொழுது டேய்..
காடுமாதிரி முடி வளர்ந்து இருக்கு பாரு போய் முடிய வெட்டிட்டு வா என்று அம்மா கொடுத்த 5 கையில் வந்தது கும்பகோணம் போக காசு ரெடி, வருவதுக்கு காசு என்று யோசிக்கும் பொழுது முரளி சைக்கிளில் போனான் என்னாடா என்றால் அவனும் முடி வெட்ட என்றான் ஆஹா சூப்பரு வாடா என்று அவனை அப்படியே ஸ்கூல் பக்கம் தள்ளிக்கிட்டு போய் நீ எனக்கு முடி வெட்டி விடு நான் உனக்கு வெட்டி விடுகிறேன் 10ரூபாய் கிடைக்கும் என்றேன் அவனும் அரை மனதாக சரி என்றான் முதலில் நான் அவனுக்கு வெட்டிவிட பின் அவன் எனக்கு வெட்டிவிட வீட்டுக்கு வந்ததும் என்னாடா இது எவன்டா இப்படி வெட்டினது வா போய் என்னான்னு கேட்கலாம் என்று அப்பா சத்தம் போட, அதுக்குள் சித்தப்பாவும வந்து விட நான் சொன்னதை கேட்டு சிரி சிரி என்று சிரித்துவிட்டு போய் திரும்ப ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு வர சொல்லிட்டு மீதி எவ்வளோ பணம் வேண்டும் என்று கேட்டு சித்தப்பாவே போய் பேட்டும் அதோடு புது டென்னிஸ் பாலும் வாங்கிகொண்டு வந்து தந்தார்!
மேட்ச் ரிசல்டா! அத ஏன் கேட்குறீங்க புது பேட்டில் விளையாடத்தெரியாம சீக்கிரம் முதல் ரவுண்டோடு வெளியேறினோம், மரகட்டை என்றால் பிரிச்சு உதறுகிறார்கள் பேட்டை கொடுத்து விளையாடு என்றால் குச்சியை உட்டுட்டு நிக்கிறானுங்க!
Thursday, April 2, 2009
பாலாவுடன் சேது அனுபவங்கள்
அப்புறம் அண்ணாச்சி சரவணனை கூடவே வெச்சுக்குங்க என்ன வேண்டும் என்றாலு சொல்லுங்க பார்த்துக்கலாம் நான் கிளம்புறேன்..! என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சித்தப்பா.பட்டாசு எங்கே கிடைக்கும், சவுக்கு மரம் காலேஜ் பாலத்தில் கடை செட் போட எங்கே கிடைக்கும் என்று பல தேவைகளுக்கும் அவர்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தேன், தட.. தட.. என்று சத்தத்தோடு வந்து நின்றன வரிசையாக பத்து பன்னிரெண்டு பஸ்கள்.
கும்பல் கும்பலாக இளைஞர்கள்பட்டாளம் என்று இறங்கிக்கொண்டு இருந்தது, அண்ணாச்சி ஹோட்டலில் ஹீரோ விக்ரம், ஹீரோயின் புதுசு, இளையராஜாதான்இசை என்று சொல்லிவிட்டு ஹோட்டலிலேயே ”கானஙகருங்குயிலே...”பாட்டை போட்டு காட்டினார். பின் அவர்புரொடெக்ஷன் மேனேஜர்,பாலா,இவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணன் பையன் இந்த ஊருதான் என்ன வேணும்னாலும்சொல்லுங்க..! என்று.

அப்பொழுது விக்ரமும், மற்றவர்களும் கூப்பிட்டு வம்பிழுப்பது போல் காட்சி, மோகன் வைத்யா அப்பொழுதுதான் அந்த உண்மையைசொன்னார் பாலாவிடம், இதுவரை சைக்கிள் கூட ஓட்டியது இல்லை, எனக்கு எதுவும் ஓட்ட தெரியாது என்று, பாலாவும் சும்மா ஒரு ரெண்டு அடி ஓட்டுங்க அட்ஜெஸ்ட் செஞ்சுக்கலாம் என்று சொல்ல,ஒண்ணும் சொல்லமுடியாமல் ம்ம்ம் என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்காந்தால், ம்ம்ம்ம் ஒரு இன்ஞ் கூட காலை ஊன்றாமல் ஸ்டெடி செய்யமுடியவில்லை,பின்னாடி அபிதாவை உட்கார வெச்சு அப்படியேபின்னாடி இருந்து தள்ளி விட்ட கொஞ்ச தூரம் ஓடும் கொஞ்சம் ஸ்டெடி செய்யுங்க.. என்று சொல்லி பாலாவின் உதவியாளர் சண்முகமும்,இன்னொருவரும்தள்ளிவிட டொம்.. என்று வண்டி கீழே விழுந்தது.இது கதைக்கு ஆவாது என்று இரண்டு நாளில் ஓட்டி கத்துக்குங்க என்றார் பாலா! மோகன் வைத்யாவுக்கு வண்டி கத்துக்கொடுக்க யாரும் முன்வராததால் என்னிடம் கேட்டார் சரவணன் நீங்க கத்துக்கொடுங்க! என்று சரி என்று சொல்லிவிட்டு பழய TVS50 ஒன்றில் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்று கத்துக்கொடுத்தேன், கத்துக்கிட்ட பிறகுதான்அந்த காட்சி எடுக்கப்பட்டது.
சரணம் பவ கருணாமயி பாட்டில், அபிதா பூ கட்டுவது போல் ஒரு காட்சி வரும் அதுக்கு பாலா ஒரு பூ சொன்னார், காம்பு மட்டும் பிங் கலரில்
இருக்கும் அந்த பூ தான் வேண்டும் என்றார், சேங்காலிபுரம் அக்ரஹாரத்தில் இருக்கும் பலரிடமும் கேட்டு பார்த்துவிட்டு வடவேர் என்ற ஊரில்ஒரு கோயிலில் அந்த மரம் இருக்கிறது என்று பைக் எடுத்து போய் அந்த பூவை எடுத்துவந்து கொடுத்தோம், பின்புதான் தெரிந்தது அந்தஅபிதாவுக்கு பூவே கட்டத்தெரியாது..! என்று.பின் கொஞ்சம் கட்டிய பூவை கையில் கொடுத்து மீதியை கட்டுவது போல் சும்மா ஆக்ட்டிங்கொடுத்தாங்க அம்மணி.
அதுபோல் அந்த அக்ரஹாரத்து வீட்டில் இருக்கும் ஊஞ்சல், பூஜை சாமான்கள், நாற்காலிகள் எல்லாம் நம்ம வீட்டு பொருட்கள்.கும்பகோணத்தில் விக்ரமிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்களை விட சீமானிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்கள் அதிகம் அப்பொழுது ஏதோ ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் அவர். விக்ரம் முழங்காலில் இருந்து தொடை வரை இருக்கும் ஒரு பெரிய பள்ளம் விபத்தில் ஏற்பட்டதாம், அது தெரியாமல் இருக்கதான் ”தில்”லில் காலில் அடிப்படுவது போல காட்சியும், அதன் பிறகு காலில் பேண்டேஜும் இருக்கும்.
பாலாவுக்கு சாப்பாடு தண்ணி எல்லாமே கிங்ஸ் பில்டர் தான்,தினம் நான்கு பாக்கெட்டுக்கு குறையாமல் பிடிப்பார்.அட்வைஸ் ஆறுமுகமா இருந்தவர் அபிதாவின் அப்பா பசி சத்யா, பாலாவுக்கு இந்த ஷாட் இப்படி வெச்சா...! என்று ஆரம்பிப்பார், அவரும் ம்ம்ம் ம்ம்ம் என்று கேட்டுவிட்டுஅவர் நினைத்ததை முடித்துவிட்டு போய்விடுவார், இவரிடம் மாட்டியது அதிகம் விக்ரமின் தோழராக வரும் ஸ்ரீராம் என்ற பையன் தான் கையில் எப்பொழுது ஒரு புத்தகத்தோடு அவருக்கு ஏதேனும் போதனைகள் சொல்லிக்கிட்டே இருப்பார்.மதியம் அவர்களோடு சாப்பாடு முடிந்ததும் கொஞ்சநேரம் ரத்தினவேலு,விக்ரம்,அவுங்க அஸிஸ்டண்டோடு அண்ராம்ஸ் போட்டுஒரு சின்ன கிரிக்கெட் நடக்கும். ஐந்து மாதம் ராஜ உபசாரத்தோடு நாட்கள் கழிந்தன!
அந்த டீமில் டைரக்டர் அமீர் கானகருங்குயிலே பாட்டில் குரூப்பாக ஆடி இருப்பார் அவரை நன்றாக நினைவு இருக்கிறது, அப்பொழுது சசி கிளாப் அடிப்பார் மிகவும் ஒல்லியாக இருப்பார் சசியும் அண்ணாச்சி கந்தசாமிக்கு உறவினர் என்பதால் இவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன் இவர்கள் எல்லாம் பெரிய ஆளாக வருவார்கள் என்று அப்பொழுது தெரியவில்லை.
அண்ணாச்சி கந்தசாமி, அபிதா,ஆர்ட் டைரக்டர் ஆகியோரை தவிர மீதி அனைவரும் சக்ஸஸ் ஆகிவிட்டனர்.பாலாவின் அசிஸ்டண்டாக இருந்து டயலாக் எல்லாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த சண்முகம் என்பவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை, எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வார். இன்று அவர்களுக்கு என்னை நினைவு இருக்காது! ஆனால் அந்த நினைவுகள் சேது ஒரு வெற்றிப்படமாகவும் இன்று பாலாவும் விக்ரமும் ஒரு வெற்றியாளர்களாக இருப்பதாலும், என் நினைவில் அவர்கள் இருக்கிறார்கள்!
டிஸ்கி: இன்று விடுமுறை ஆகையால் ஒரே நேரத்தில் இரு போஸ்ட் இனி இன்றைக்கு இனையம் பக்கம் வரமுடியாது ஆகையால் நாளை சந்திக்கலாம்.
தேனாம்படுவை தப்பு தாளங்கள்!
சாதாரண சரக்கு சீமை சரக்கு என்பது போல் லோக்கல் ஆளுங்க அடிக்கும் தப்பு தாளத்துக்கே ஒரு இது இருக்கும்,இதில் சீமை சரக்கு மாதிரி ஆட்கள் தான் தஞ்சாவூர் அருகில் இருக்கும் தேனாம்படுவை கிராமத்தை சேர்ந்தவர்கள். தேனாம்படுவை கிராமத்து தப்பு செட்டு ஆட்கள் என்பவர்கள் சாவு தப்பு அடிப்பவர்கள் அல்ல, கிராமத்து திருவிழாக்களுக்கு தப்பு அடிப்பவர்கள்.
கிராமத்து திருவிழா என்றால் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் களைகட்டும், தேனாம்படுவை தப்பு செட்டு ஆட்களோடு கூடவே நாதஸ் ஆட்களும், மேளம் கொட்டுபவர்களும் வருவார்கள், கூடவே ரெண்டு ஜிகினா சுந்தரிகள்!எங்கு ஆஜர் ஆகவேண்டுமோ அங்கு சரியாக மாலை 7 மணிக்கு ஆஜர் ஆகிவிடுவார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு கொஞ்சம் லைட்டா “சுதி” ஏத்திக்கிட்டு வைக்கோல் போட்டு கொளுத்தி தப்பை தனலில் காட்டி வார் இழுத்து கட்டும் பொழுது ”டம்” டம்” என்று தட்டிப்பார்பார்கள். எல்லாம் சுதி ஏத்தலும் முடிஞ்சு , ஜிகினா சுந்தரிகளும் அப்படியே ஒரு கப் சுதி ஏத்தின பிறகு, ஊர் மைதானத்தில் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
தப்பு அடிப்பவர்களும் கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு,ஒரு வெள்ளை பனியன் வரிந்து கட்டிய வேட்டியோடு அவர்கள் ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டு அடிக்க ஆரம்பிப்பார்கள்,சாதரணமாக மற்ற குழுவினர் எல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் காட்டுவார்கள், ஆனால் நம்ம தேனாம்படுவை தப்பு செட்டுக்காரர்கள் அடிக்கும் முதல் அடியே 20:20 மேட்ச் போல வேகம்தான், சட சட சடன்னு வரும் பேய் மழை போல் டன்னா டர்னா ரகம் தான்.
கூடவே வரும் ஜிகினா சுந்தரிகள் போடும் குத்தாட்டம் இளசுகளை கட்டிப்போடும் அவுங்க போடும் ஒவ்வொரு குத்து ஆட்டத்துக்கும் பறக்கும் விசில்கள் தான் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கார், விசில் சவுண்டு எகிற எகிற இவுங்க ஆட்டத்திலும் சூடு பறக்கும் ஆனால் விரசம் இருக்காது. குழுவாக வரும் இவர்கள் சிறிது நேரத்தில்இரு குழுவாக பிரிந்து போட்டி கச்சேரி போல் நடக்கும் ஒருவகையில் அவர்களுக்கு சிறிது ஓய்வு போல தோன்றினாலும் போட்டி செம சுவாரஸ்யமாக இருக்கும். தப்பு அடித்துக்கொண்டே நெருப்பில் விளையாடுவது, கீழே வைத்து இருக்கும் குண்டு ஊசியை கண் இமைகளால் தப்பு அடித்துக்கொண்டே எடுக்கும் பொழுது நெஞ்சம் பதறும், பண்ணையார்கள் வைக்கும் 50 ரூபாய் நோட்டை கண் இமையால் கீழே இருந்து எடுப்பது போல் சாகசங்கள் பல செய்வார்கள் பின் இரு குழுக்களும் திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து கடைசியாக இரு குழுவும் இணையும் இடத்தில் முடிகள் சிலிர்க்கும் படி ஒரு அதகள ஆட்டம் போடுவார்கள்.
மிகவும் துள்ளல் இசை வேண்டும் என்றால் ஒரு முறை தேனாம்படுவை தப்பு செட்டை உங்க ஊருக்கு கூப்பிட்டு பாருங்கள் வித்தியாசமான இசை அனுபவம் கிடைக்கும்!
டிஸ்கி: இப்பொழுது கிராமங்களில் திருவிழாக்கள் நடப்பதே குறைந்து வருகிறது, அப்படி நடக்கும் இடங்களிலும் டிவி புகழ் நடிகை நடிகர்கள் மேடையை ஆக்கிரமித்துவிடுகிறார்கள், இதுபோல் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்று பாருங்கள், குத்தாட்டம் வேண்டாம் என்றால் முன்பே சொல்லிவிட்டால் அவர்கள் இல்லாமலும் வருவார்கள்!
ஒரு ஜொள்ளு போட்டி! இதில் சார்மி அடிக்கும் கொசு எத்தனை?
இந்த வாரத்தில் ஒரு ஜொள்ளு போஸ்ட் கூட போடவில்லை என்றால் சங்கத்தில் சேர்க்கமாட்டார்களாம் ஆகையால் இந்த போட்டி
இந்த பாடலில் சார்மி அடிக்கும் கொசுக்கள் எத்தனை, அதுபோல் அவர் கூட்டாளிகள் அடிக்கும் கொசுக்கள் எத்தனை என்று சரியாக சொல்பவர்களுக்கு ஸ்டார் வாரம் முடிந்த மறுநாள் ஒரு பரிசு காத்திருக்கு.
http://www.youtube.com/watch?v=OdcPtg92d7A
டிஸ்கி: வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார்.
உலக புத்தகங்கள், உலக படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எப்படி???
முதலில் நீங்க புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை மற்றவங்களுக்கு காட்டனும் அதுக்கு முதல்ல பதிவர்கள் சந்திப்பின் பொழுது சும்மா ’தேமே’ன்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க கூடாது! அவுங்க பேசும் பொழுது அப்ப அப்ப குறுக்க பூந்து இந்த ஜெயமோகன் எழுதிய புத்தகத்தில் பல ஓட்டைகள் இருக்கு! என்னத்த பெருசா எழுதுறார் முன்ன மாதிரி எழுதறது இல்லை! என்று பீட்டரை எடுத்துவுடணும். சில விசம ஆட்கள் அருகில் இருந்தால், ஏன் கரையான் அரிச்சு ஓட்டை விழுந்துட்டுதா..? என்று கேட்க வாய்ப்புக்கள் இருப்பதால், கொஞ்சம் உஷாராக இருக்கணும்.
அவர் புத்தகத்தை இதுவரை படிக்கவில்லை என்றாலும்,கூட பல புத்தங்கள் படிச்சதாக காட்டிக்கணும். கூடவே, அட்லீஸ்ட் லெண்டிங் லைப்ரரியிலாவது இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக்கிட்டு போய் கையில வெச்சுக்கணும், இப்பதான் கோணங்கியோட பிதிரா புத்தகம் படிச்சுக்கிட்டு இருக்கேன் என்னாமா எழுதி இருக்கிறார் என்று சொல்லிக்கலாம் ஆனால் அந்த புத்தகத்தின் அட்டையை மட்டும் புத்தக கண்காட்சியில் பார்த்தது என்ற ரகசியம் வெளியே தெரியகூடாது.
அடுத்து பதிவு எழுதும் பொழுது பதிவு எருமைநாயக்கன் பட்டியை பற்றியதாகவே இருந்தாலும், அதில் இலக்கியவாதிகள் சொன்னது அல்லது, அவர்களை மேற்கோள் காட்டி எழுதலாம். எடுத்துக்காட்டாக எருமைநாயக்கன் பட்டியில் வளைந்து நெளிந்து ஓடும் ஆற்றை கடப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல! சாருவின் ஜீரோ டிகிரி போன்றது என்று சொல்லணும். ஆக நீங்க ”ஜீரோ டிகிரி” படிச்சாச்சுன்னு என்று மத்தவங்களுக்கு சொல்லியாச்சு..!விமர்சனம் எழுதும் புத்தகம் குறைந்தது குட்டி தலையனை சைஸ் உள்ள புத்தகாமக இருக்கவேண்டும் அதுக்காக லிப்கோ டிக்ஸ்னரிக்கு எல்லாம் விமர்சனம் எழுதலாமா என்று கேட்பவராக இருந்தால் நீங்கள் என் தோழரே!
பெரும்பாலும் இலக்கிய புத்தங்கள் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அதுபோல் உங்கள் பெயரையே ஆங்கிலத்தில் எழுத பிட் அடிப்பவராக இருந்தாலும் ரெண்டு மூன்று ஆங்கில புத்தங்கள் பெயர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளுங்க அப்ப அப்ப பெயரை ஊடால ஊடால போட்டுவையுங்க.
சரி இனி விமர்சனம் எழும் பொழுது ஒரு பக்கத்தை படிக்க ஒருநாள் ஆன கதைய வெளியே சொல்லாமல் முழு புத்தகத்தையும் ஒரே நாளில் படிச்சு முடிச்சாச்சுகீழேவைக்க முடியாத அளவுக்கு சுவாரய்ஸம் என்று சொல்லுங்க. புத்தகத்தின் அட்டைய பெருசா படம் புடிச்சு பதிவில் போட்டால் பாதி இடம் அடைத்துவிடும்மீதி நாலுவரிக்கு எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் திட்டி எழுதினால் உங்களைபோல் ஒருவர் அந்த புத்தகம் படிச்சவர் இருந்தால் எப்படி திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிடுவார் ஆகையால் புத்தகம் அருமை ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் என்று புகழ்ந்து எழுதிடுங்க. அது மிகவும் பாதுகாப்பானது.மேலும் பல புத்தங்கள் பெயர் தெரிய அமேசான்.காம் போனால் அங்கு புத்தகத்தின் அட்டைபடம், ஆசிரியர் பெயர், எத்தனை பக்கம் என்று அனைத்து விவரங்களும் இருக்கும் இது போதாதா உங்களுக்கு அடுத்த புத்தகப்பதிவு எழுத?
அடுத்து உலகதிரைப்படம் பற்றி எழுதுவது எப்படி?
உலகதிரைப்படம் என்றால் என்னான்னு தெரியாதா? வெளியே சொல்லாதீங்க அதை கண்டுபிடிக்க வழி நான் சொல்லித்தருகிறேன்
வீடியோ கடைக்கு போங்க அவனிடம் இதுவரை யாரும் பார்க்காத படம்ஏதும் இருக்கா என்று கேளுங்க அப்படி இதுவரை இருவர் மட்டுமே பார்த்த படம் ஒன்னு இருக்கு என்று தமிழ் வில்லு சீடிய கொடுத்தா வாங்காதீங்க உலகபடம் என்பது தமிழில் இருக்காது இது அடிப்படை பாடம்.
உலகப்படம் அல்லது உலகதரத்தில் இதுவரை தமிழில் வந்தது இல்லை என்ற கருத்தில் தாங்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும்.
வீடியோ கடை ஆரம்பித்த பொழுது வாங்கிய பழய ஆங்கில படம் ஏதும் இருக்கான்னு கேளுங்க,அவரும் ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்துக்கொடுப்பார் அதன் ரிலிஸ் தேதியை பாருங்கள் அது உங்களை விட வயது மூத்ததாக இருக்கவேண்டும் இது இரண்டாவது விதி.
என்னது தேதி சில சீடியில் ரிலீஸ் தேதி இருக்காதா? சரி கவலைய விடுங்க சீடி கவரில் இருக்கும் படத்தில் அவர்கள் போட்டு இருக்கும் உடை,கார் ஆகியவை தாங்கள் பார்த்தது இல்லையா?ஹீரோயின் தொப்பியில் ஒரு கோழி இறகு இருக்கா? அதெல்லாம் உலக திரைப்படங்கள்தான்.
(மேலே உள்ளே படம் ஒரு சாம்பிள்,இது போல் கவர் இருக்கட்டும்)
அப்படி ஏதும் ஒன்னு இரண்டு தேறும் அதை எடுத்துவந்து போட்டு பாருங்கள் முழுவதும் பார்க்க முடியாது இருந்தாலும், ஓட்டி ஓட்டி பார்த்துவிடுங்கள் .
பார்த்துவிட்டு முக்கியமாக நீங்கள் எடுக்கவேண்டிய குறிப்புகள்
1)நடிகர், நடிகையின் பெயர்
2) இயக்குநரின் பெயர்
3) கேமிரா மேன்
பேருக்கு எல்லாம் தமிழில் சப்டைட்டில் வராது! எழுத்துக்கூட்டியாச்சும் அவுங்க பெயரை படிச்சு எழுதி வெச்சுக்குங்க.இல்லை லேப்டாப்பி படம் பார்த்தால் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து அந்த நடிகரின் பெயரை googleல் போட்டு தேடி அவர் நடித்த மேலும் சில படங்களின் பெயர்களை தெரிந்துவைத்து இருப்பது நலம்.
இனி எப்படி பதிவு எழுதுவது..?
தாங்கள் படம் பார்த்த சூழலை விவரிப்பது முக்கியம்! மாலை நேரத்தில் பார்த்தேன் என்று சொல்லிவிடக்கூடாது, ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக உலக திரைப்படத்தை பார்க்கும் ஆவல் இன்றி மறைய தொடங்கினான்; ஆதவனுக்கு கொடுத்துவைத்தது அவ்ளோதான், அமைதியான சூழல் இருக்கும், தனிமையில் இருக்கும் பொழுது எல்லாம் என் தனிமையை போக்குவது ********** இயக்குநரின் படங்கள் தான். அன்று அப்படிதான் பல இடங்களில் தேடி வாங்கி வந்த *********** படம் என் தனிமையை போக்கியது. என்று ஆரம்பிச்சு படத்தில் தாங்கள் ஓட்டி ஓட்டி பார்த்த சீன்களை நினைவு வைத்து நான்கு பத்திகள் எழுதுங்கள், பின் சாதாரண பிலிம் போட்ட கேமிராவிலேயே போட்டோ புடிக்க தெரியாத நீங்க அந்த படத்தில் அந்த ஷாட்டுக்கு வைத்த கேமிரா ஆங்கிள் சரி இல்லை அதை அப்படியே 23 டிகிரி சாச்சு வைச்சு எடுத்து இருந்தா அந்த காட்சி சிறப்பா வந்திருக்கும் என்று சொல்லணும்.
அதுபோல, மாலை 6 மணிக்கு மேல் எதிரே லாரி வந்தால் இரண்டு பைக்தான் வருகிறது என்று குறுக்கே பூந்து போய்விடலாம் என்று நினைக்கும் அளவுக்குபார்வை சக்தி இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த படத்தில் லைட்டிங் தான் ஹீரோ என்று அடிச்சு விடுங்க.
அடுத்து முக்கியமாக நீங்கள் தொடவேண்டிய டாப்பிக் இசை, குழாய் ஸ்பீக்கர் யாராவது அலறினாலும் என்னாது தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாமாதிரியாரோ பேசுகிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு உங்கள் கேட்கும் திறனும், என்னமா வீனை வாசிக்கிரார் குன்னங்குடி வைதியநாதன் என்றும் சொல்லும்அளவுக்கு இசை ஞானம் உள்ளவரா அப்படியே அதை எல்லாம் ஒரு குழிக்குள் போட்டு மூடுங்க, படத்தில் பட இடங்களில் இசைதான் ஆதிக்கம் செலுத்தி இருக்குபடத்தின் பின்னனி இசை படத்தின் முதுகெலும்பு, கால் எலும்பு என்று எல்லாம் சொல்லுங்க.
சில பல கலர் டோன்களின் பெயர் தெரிஞ்சு வைச்சு இருப்பது நல்லது! ஆங்காங்கே படம் முழுவதும் வரும் கிரீன் டோன் பக்காவா இருக்கு! அப்படின்னு எடுத்துவிடுங்க. இப்படி எழுதினா தாங்கள் பாதி உலக பதிவர் ஆகிட்டீங்க...!அடுத்து ஈரான் மொழி படம் ஜப்பான் மொழி படம் என்று தங்கள் எல்லையை விரிவடைய செய்யுங்கள்.
பின்நவீனத்துவ உலக படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டால் தாங்கள் முழுமையான உலகபதிவர். பின்நவீனத்துவ உலக படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப சிம்பிள் மேலே சொன்ன அதே உலகத்திரைப்பட டெக்னிக் ஆனா படத்தில் பேச்சு இருக்காது,இதை நீங்க ஓட்டி ஓட்டிபார்க்க அவசியம் இருக்காது சிலசமயம் திரும்ப திரும்ப அந்த “சீனை” பார்க்கும் படி இருக்கும் அதிகமாக செக்ஸ் காட்சிகள் இருக்கும். அதுவும் முறையற்ற காட்சிகளாக இருக்கும் அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுங்க, படம் பார்க்கும் பொழுது துணைக்கு பியர் போத்தல்கள் இருப்பது அவசியம்.(நன்றி அய்யனார்).
பியர் போத்தல்களோடு இந்த படங்களை பார்ப்பது என்பது வரம் என்று எழுங்க. தலைப்புகளை எப்பொழுதும் கொஞ்சம் டெரராகவே வையுங்க...!
டிஸ்கி: நாலுபேர் மதிக்கனும் என்றால் எதுவுமே தப்பு இல்லை!
Wednesday, April 1, 2009
வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன்!
இனி சொய்ய்ய்ய்ய்ய்ங்ங்.........
ஓரு கீத்துக்கொட்டகை, கீழே ஆற்று மணல் கொட்டிய தரை, அதன் மேலே குட்டி குட்டியாய் பிள்ளைகள் அமரும் விதத்தில் சின்ன சின்ன பெஞ்ச்,
கருநீல டவுசரு,வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்கள் சீருடை, எங்கள் வகுப்பு ஆசிரியை கஸ்தூரி டீச்சர். டீச்சரை கண்டால்தப்பு செய்தவர்கள் அனைவரும் கால் சட்டையிலேயே மூச்சா போகும் அளவுக்கு மிகவும் கண்டிப்பானவர்.காலையில் ஸ்கூலுக்கு வரும் பொழுது தலை நிறைய எண்ணெய் தடவி, படிய தலை வாரிக்கிட்டு வரவேண்டும் போன்ற பல விதிகள் உண்டு.டீச்சரை கண்டால் இரண்டு கைகளையும் நெற்றியில் வைத்து குட் மானிங் டீச்சர் சொல்லும் அளவுக்கு பயம், பயத்துக்கு முக்கிய காரணம் டீச்சர் கையில் எப்பொழுதும் வைத்து இருக்கும் அகப்பை கம்பு, சாதாரணமாக பொங்கல் சமையத்தில் சிரட்டையில் துளை போட்டு அதில்
மூங்கிலை சிறிய சிறிய குச்சுகளாக வெட்டி நன்றாக வழு வழுன்னு சீவி அதன் முனையில் சிரட்டையை மாட்டி இருப்பார்கள், ஆனால்
பொங்கல் சமயத்தில் டீச்சர் எக்ஸ்ட்ராவாக இரு அகப்பை வாங்குவார்கள் போல சிரட்டையை மட்டும் எடுத்துவிட்டு அந்த குச்சோடுதான் வருவார்கள்.
டேய் சரவணா....!அட நான்தாங்க அப்ப என்னா குசும்பான்னா கூப்பிடுவாங்க?ரெண்டு ரெண்டும் என்னா என்பார்கள் (2 x 2) அதுக்கே நமக்கு நொண்டும்,அதுக்குள் எட்டோட்டு என்பார்கள் (8x8) நானும் ம்ம்ம்... ம்ம்ம்ம்.... ம்ம்ம்... என்று யோசிக்கங்காட்டியும், டீச்சர் எங்க சொல்லு பார்க்கலாம் ரெண்டும் ரெண்டும் நாலு , எட்டோட்டு அறுபத்தினாலு ம்ம்ம் சொல்லு.. சொல்லு.. என்று கையில் வைத்து இருக்கும் அகப்பை கம்பினால் நாலு விளாறு, வலி தாங்க முடியாது அப்படியே தடிச்சு தடிச்சு போய் இருக்கும்.
இப்படியே நாளுக்கு நாள் டீச்சரின் அடி அதிகமாகிட்டே போக, ஒரு நாள் அந்த முடிவை எடுத்தேன். அதுக்கு துணையும் சேர்த்தேன். அவன் பெயர் விஜயன். டீச்சர் வீட்டுக்கு போகும் பொழுதுடீச்சர்ஸ் ரூமில்(அது ஒரு தனி தடுப்பு அவ்வளவுதான்) அங்கதான் அந்த கம்பை வெச்சுட்டு போவாங்க. பிளான் போட்டு அந்த கம்பை எடுத்து கீத்துக்குள்ள சொருகி வெச்சுட்டோம்ன்னா அதன் பிறகு கம்பு கிடைக்காம போய்விடும், நமக்கு அடியும் கிடைக்காது என்று பல பிளான்கள் போட்டு ஒர் நாளையும் குறிச்சேன் கம்பை கடத்தி ஒளிய வைக்க. பின்னாடிதான் தெரிஞ்சுது பிளான் போட்ட நேரத்தில் ரெண்டாம் வாய்ப்பாட்டை ஒழுங்கா படிச்சு இருந்தாலே அடி கிடைச்சு இருக்காதுன்னு!சரி விடுங்க திரும்ப பிளானுக்கு போவோம், பிளான்படி 4 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சதும் எல்லோரும் ஓடிவிடுவார்கள், சில பசங்க அங்க இங்க விளையாடிக்கிட்டு இருப்பாங்க, எல்லா டீச்சரும் பேசிவிட்டு கிளம்ப எப்படியும் 4.45 க்கு மேல ஆகிவிடும், எல்லோரும் போன பிறகு யாரும் பார்க்காத மாதிரி கடத்தணும் அதுக்கு வெளியே நின்னு பாத்துக்கதான் விஜயன். குரு படத்தில் கமல் மீனை கடத்துவது போல.. :-) எல்லோரும் போன பிறகு நான் நைசா ஸ்டாப் ரூம் போய் கம்பை எடுத்து அப்படியே சட்டைக்குள் ஒளிய வெச்சு எடுத்து வந்து ஸ்கூல் கீத்து கொட்டகைக்கு பக்கத்தில் இருக்கும் தட்டியில் ஏறி மெதுவாக கம்பை கீற்றுக்குள் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஏத்திவிட்டு கீழே வந்து பார்த்தால் உள்ளே அதோட முனை அப்படியே நீட்டிக்கிட்டு தெரியுது, திரும்ப போய் மேலே ஏறி பக்கவாட்டில் வைத்து கீற்றை மூடிவிட்டு வீட்டுக்கும் வந்தாச்சு.
மறுநாள் காலையில் கிளாசே அதகளமாக இருக்கு. டீச்சர் கம்பை காணவில்லை, டீச்சர் எல்லோரிடமும் கேட்கிறார்கள் டேய்... எவன்டா அதை
எடுத்தது என்று எங்கே? என்று தேட பல குழுக்களாக தேடிபார்த்துவிட்டு டீச்சருக்காக போத்துமர கம்பு ஒன்னை உடைச்சுக்கிட்டு வந்து கொடுத்தேன்.(அதுதான் பார்க்க பெருசா இருந்தாலும் அடிச்சா வலி தெரியாது), டீச்சரும் தீட்டிய மரதிலேயே கூர் பார்பது போல் என்னையே அந்த கம்பால் அடிச்சுபார்த்து சோதனை வேற செஞ்சுக்கிட்டாங்க...அடி கிடைத்தாலும் உள்ளுக்குள் ரொம்ப சந்தோசம், மக்கள் அனைவருக்கும் அகப்பை கம்பு அடியில் இருந்து விடுதலை வாங்கி கொடுத்துவிட்டதாக.
நாட்கள் வாரங்களாக உருண்டு ஓடின...சில வாரங்களுக்கு பிறகு ஒரு சோதனை வந்தது எலந்த உருண்டை வடிவில். ஐந்து பைசாவுக்கு வாங்கியஎலந்த உருண்டையில் பாதி கேட்டான் கூட்டாளி விஜயன். நான் போடா... முடியாது என்று சொன்னதோடு இல்லாம தின்ன எலந்த கொட்டைய அவன் மேலவிட்டெறிய கோவம் வந்து படுபாவி நேரா போய் கஸ்தூரி டீச்சரிடம்... டீச்சர் உங்க கம்பை ஒளிய வெச்சது சரவணன் தான் டீச்சர் என்று சொன்னதுமட்டும் இன்றி ஒளிய வெச்ச இடத்தையும் காட்டி கொடுத்துவிட்டான் எட்டப்பன். டீச்சர் கம்பு கைக்கு வந்ததும் முதல் பூசை போட்டு கொடுத்தவனுக்குதான்! இத்தனை நாள் ஏண்டா சொல்லவில்லை, நீயும் உடந்தைதானே என்று... கூட நின்னவன் வாங்கும் அடியை பார்த்ததுமே ஒண்ணுக்கு முட்டிக்கிச்சு எனக்கு, (அப்ப பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு) அப்புறம் என்னா எல்லோரும் ஆவலோடு எதிர்ப்பார்த்துகிட்டு இருக்கும் கிளைமேக்ஸ்தான் ...
டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... அந்த அளவில் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டது!
ம்ம்ம் நான் மட்டும் வெள்ளையா பிறந்து இருந்தேன்னா அன்னைக்கே வரி குதிரை ஆகி இருப்பேன்...அட ஆமாங்க டீச்சர் அடிச்ச அடியில் உடம்பு முழுக்க வரி வரியா கோடுகள் கருப்பு உடம்பு என்பதால் கோடு வெளியே தெரியாம போச்சு!இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-))
Tuesday, March 31, 2009
காமத்தில் இருந்து கடவுளுக்கு
மேலும் இந்த புத்தகத்தில் எங்கும் ஆன்மீகத்தை பற்றியோ கடவுளை பற்றியோ எதுவும் இல்லாததால் நாத்தீகர்கள் கூட படிக்கலாம் இதை.
ஓஷோவை சாமியாராக அனுகவேண்டாம் ஒரு ஆசிரியராக அனுகவும் எவ்வித முன் முடிவுகளும் இல்லாமல் காமத்திலிருந்து கடவுளுக்கு புத்தகதை வாங்கி படியுங்கள் காமத்தை பற்றி பல புரிதல் கிடைக்கும். ஏன் மனிதனுக்கு காமம் மேல் அத்தனை ஆசை என்று.
Monday, March 30, 2009
வலையுலக பிரபலங்களின் பார்வையில் குசும்பு ஒன்லி
ஹ்யூமர் என்பது நமக்கு அதிகம் வராத கலை. அதை நீங்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.
--பத்ரி
***********************************
'இருங்க அண்ணாச்சி. அவங்களுக்கு ஏதோ பிரச்னை போலிருக்கு' என்று எழுந்து போய் சும்மா நின்று கொண்டிருக்கும் பெண்ணிடம் 'எனி ஹெல்ப் மேடம்?' என்று கேட்டு விட்டு , அந்தப் பெண் முறைத்ததும் 'பிரசனை ஒண்ணுமில்லயாம் அண்ணாச்சி' என்று திரும்பி வந்து சொல்லும்வரை குசும்பனின் வாடிக்கையாளர் விசுவாசம் பிரமிப்பு தருவது.
"குசும்பன் வலையுலகில் தவழும் பிள்ளை.. சவலைப்பிள்ளை.. செல்லப் பிள்ளை.. இவன் செய்கின்ற குசும்புகள்தான் வலையுலக வீட்டையும் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சிலும், விளையாட்டிலும் மயங்குவதைப் போல, நாங்கள் குசும்பனின் செல்லத்தில் சொக்கிப் போய் இருக்கிறோம்.. என்றென்றைக்கும் எங்களது குசும்பனுக்கு வயது ஏறாமல், இப்போது இருப்பது போலவே குழந்தையாகவே இருந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்..! "
நன்றி தம்பி
சமயங்களில் சச்சரவுகள் தரும் ஆயாசத்தில், குசும்பனின் வலைப்பூவை மீள்வாசிப்பது ஒரு வைத்தியம். இதே நகைச்சுவை உணர்வு எப்போதும் அவரிடம் இருக்கவும், அது ஒரு தொற்று நோயாக நம் எல்லாரிடமும் ஒட்டிக்கொள்ளவும் பெரிதும் ஆசைப்படுகிறேன்.
முதன்முதலில் தொலைபேசி உரையாடில் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை இனிமையாகத் தொடர்கிறது! என்னை யாராவது கலாய்த்தால் குபீரென்று களத்தில் குதித்து சரி எனக்குத்தான் ஆதரவு தருவார் என்று பார்த்தால், திடீர் பல்டி அடிப்பார் பாருங்கள்..
குசும்பா! நீ நல்லவனா கெட்டவனா?:)
நட்புடன்,
நாமக்கல் சிபி.
லக்கி லுக்
புதுகை அப்துல்லா
”பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்” அப்படினு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் அதை மெயிண்டெயின் பண்ணிட்டு வராரு. இதுல ஹைலைட் பார்த்தா, கோபம் ,வெறுப்பு, கடுப்பு இதைக் கூட நகைச்சுவையா சொன்னது தான். இது தான் குசும்பன் ஸ்பெஷல்னு எல்லாரையும் ரசிக்க வைக்கிறார். புதிதாக எழுதுபவர்கள், பழைய பதிவர்கள் என்று கொஞ்சமும் ஈகோ பார்க்காத குணமும் பாராட்டுக்குரியது.
அடுத்து அவர் பதிவுல எனக்கு பிடிச்சது இவர் முட்டையை வைச்சி பண்ண ரிசர்ச் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி இதுல என்ன ஹலைட்னு யோசிக்கறவங்களுக்கு, இந்த பதிவு போட்டு ஒரு வாரத்துல அவர் போட்ட பதிவு இது. என்ன கொடுமைங்க இது? பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க, ரெண்டையும் படிச்சி பார்த்தா உங்களுக்கே புரியும். அப்பறம் அவரோட பழைய பதிவை படிக்காம மிஸ் பண்ணவங்களுக்கு, நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. ஏன்னா இன்னும் ஒரு மாசம் நீங்க இந்த வலைப்பதிவுல இருக்குற எல்லா பதிவையும் ஜாலியா படிச்சிட்டு இருக்கலாம்.
எங்கயும் தடம் மாறாமல் இன்னைக்கு வரைக்கும் ரசி(ரி)க்கிற மாதிரி கொடுத்துட்டு வரதுக்கு பாராட்டுகள் + நன்றிகள். அதே சமயம் கார்டூன் எல்லாம் எப்படி பண்றாருனு ஒரு சில பதிவுகள் போட்டு நிறைய பேரை ஊக்கப்படுத்தினால் வலையுலகத்திற்கு மேலும் பயன் தரும்.
மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் குசும்பரே.
வெட்டிப்பயல் பாலாஜி
இவரு பதிவுல வாங்கிக் கட்டிக்காதவங்களே குறைவுதான், யாரையும் கலகலக்க கலாய்க்கத் தயங்காதவன் நம்ம குசும்பன். தொலைவில் இருந்து முகம்பார்க்காமல் பழகியதில் குசும்பன் தான் முதன் முதலில் நெருக்கமான பதிவர் ஆனான். குசும்பனால் கலாய்ப்பு, வம்பு தவிர்த்து எதாவது எழுத முடியுமா ? என்று கேட்டால் மூக்கு உடைந்துவிடும், அவனும் 'உருப்படியான' என்ற வகைப்படுத்தலில் இரு இடுகைகள் எழுதி இருக்கிறான். அதில் UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை! - இந்த இடுகையின் தகவல்கள் நம்ம வடூவூர் அண்ணன் துபாய் செல்ல மிகவும் பயனான தகவல்களை தந்தது என்று என்னிடம் தெரிவித்து இருந்தார். உருப்படியாக எழுதுவது வேறு, அதை பயன்படும் படி எழுதுவதே அதன் வெற்றி, அந்த வகையில் குசும்பனின் அந்த பதிவு பல தகவல்களை உள்ளடக்கி இருந்தது. டரியல் டக்ளஸ் என்ற தலைப்பில் குசும்பன் இடும் கார்டூன்கள் பல விகடன் புகழ் பெற்றவை. 200 பதிவு கண்ட குசும்பனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியும், அவன் எனக்கு நெருக்கமான நண்பன் என்ற பெருமையும் அடைகிறேன் வாழ்க குசும்பன், வளர்க்க அவனது வாலு !
கோவி.கண்ணன்
சந்தோஷ்
ரமேஷ் வைத்யா
உங்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான்.
குசும்பு கொப்பளிக்கவும் எழுதுங்கள்,அத்தோடு சமூகத்துக்கு சில நல்ல கருத்துக்கள் தரும் பதிவையும் தாருங்கள்.
பினாத்தல் சுரேஷ்
’என்னடா.. பதிவு எவ்ளோ சீரியஸா இருந்தாலும் போய்க் கும்மீட்டு வர்றாரே இந்த மனுஷன். இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லயா’ என்று போனால்... வலைப்பூவின் உரலே சொல்லிற்று.. குசும்பு ஒன்லி - என்று!
பதிவுகளைப் படித்தால் அவ்வளவு சுவாரஸ்யம், ஹாஸ்யம்.
அதன்பின்... அலுவலகத்தில், வீட்டில், பதிவுலகில் சில மனஅழுத்தக்கணங்களைக் கடக்க... எங்கெல்லாம் இவரின் பின்னூட்டம் இருக்குமோ அங்கெல்லாம் தேடிச் செல்ல ஆரம்பித்தேன்.
நகைச்சுவை உணர்வோடே அரசியல்வாதிகளில் அறிக்கைகள் எதற்கு லாயக்கு என்று வெஸ்டர்ன் டாய்லெட் படத்தைப் போட்டு ‘விளக்கிய’ இவரது சமூக நலனையும் நாம் மறந்துவிடக்கூடாது. இன்றளவும் ஒரு பத்திரிகை எடுத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேடி அவசர அவசரமாகப் படிக்கும் வாசகர்கள் போல... இவரது கார்ட்டூன்களுக்கு ஒரு தனி ரசிகர் படையே இருக்கிறதென்பது ஊரறிந்த உண்மை.
பரிசல் காரன்
தருமி
செந்தழல் ரவி
அடுத்தவர்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ளத்தக்கவர்.!அதனால் கலாய்ப்பதிலும் கண்ணியம் இருக்கும்!
கருத்துப்படம் வெளியிட்டே அனைவரையும் கவர்ந்தவர்!இவரது படைப்பை வெகுஜன இதழ்களும், இணைய இதழ்களும் பயன்படுத்தும் அளவுக்கு வல்லவர் !
பதிவுலக நண்பர்களுக்கு பழகுதற்கு இனியவர்! எல்லோரிடமும் அன்பாக, உரிமையுடன் பழகக்கூடியவர்!அரட்டைக்கச்சேரி ஆரம்பித்தால் அசராமல் , அசரவைப்பவர்! ஒரு எதிர்கால விளம்பரப்பட இயக்குநர்!
வாழ்வில் நல்ல மனிதர்களைச் சந்திக்கத் துடிக்கும் சாதாரணனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டிய அன்புச் சரவணவேலன்!
இதற்கும் மேல் சொல்லிக்கொண்டேபோகலாம்.! எங்களுக்குள் ஒரு ஒற்றுமை!நாங்க ரெண்டுபேரும் ஒரே டெம்ப்ளேட்டுதான் பயன்படுத்துறோம்..! ஹி..ஹி..! வந்ததுக்கு ஒரு வெளம்பரம்தான்!
அன்புடன்நட்புடன்
சுரேகா
ஜாலி டைம்--சும்மா ஒரு டெஸ்ட்!
1) தமிழ்மணம் ஸ்டார் ஆக என்ன செய்யவவேண்டும்?
அ) எனக்கு தெரியாது
ஆ) உனக்கு தெரியாது
இ) யாருக்கும் தெரியாது
ஈ) தமிழ்மணத்துக்கே தெரியாது
2) யார் பிரபல பதிவர்கள்?
அ) யாருக்கும் பின்னூட்டம் போடாதவர்கள்
ஆ) ஸ்மைலி மட்டும் போடுபவர்கள்
இ) பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாதவர்கள்
ஈ) இவை அனைத்தும்
3) எது பின்நவீனத்துவம்?
அ) படித்தால் பீதியாகும்
ஆ) படிக்கும்பொழுதே பேதியாகும்
இ) அடுத்தமுறை அங்கு போக பயம் வரும்
ஈ) இவை அனைத்தும்
4)மூன்று தமிழ்மண விருதுகள் வாங்கியவர்
அ)டாக்டர்.புருனோ
ஆ)டாக்டர்.புருஎஸ்
இ)டாக்டர்.நெஸ்கபே
ஈ)டாக்டர்.நரசூஸ்நோ!
5)குறுந்தொகைக்கு விளக்கம் கொடுப்பவர்
அ) ஏர்டெல்சிம்
ஆ) ஏர்செல்சிம்
இ)ஓடோபோன்சிம்
ஈ) நர்சிம்
6)அவியல் எழுதி மக்களை அலறவிடுபவர்
அ) ஓடக்காரன்
ஆ) சமையல்காரன்
இ) பரிசல்காரன்
ஈ) கப்பல்காரன்
7) கதம்பம் எழுதி மக்களை கதறவைப்பவர்
அ)ஏரிகரை சூலன்
ஆ) தென்கரை பாலன்
இ)வடகரைவேலன்
ஈ)யாரும் இல்லை
8) காக்டெயில் எழுதி மக்களை காண்டாக்குபவர்
அ) கார்க்கி
ஆ) சைக்கிள் கீ
இ) பைக் கீ
ஈ)பீரோக்கி
9) சமையல் குறிப்பு பதிவுகள் எழுதி டாக்டர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பவர்
அ) தூயா
ஆ) பாயா
இ)சாயா
ஈ) மோயா
10)சிங்கப்பூர் பயணக்கட்டுரை எழுதியவர்
அ) யுவான் சுவாங்
ஆ)பான் கின் மூன்
இ)புதுகை.அப்துல்லா
ஈ)ஒளரங்கசீப்
பொருத்துக 5 x 1= 5 (பலருக்கும் நெப்போலியன்,விக்கை பொருத்தலாம் ஆனால் மிகச்சரியாக பொருத்தவேண்டும்)
சஞ்சய் காந்தி--- --------அதீதா
நந்து ---------------------நெப்போலியன்
ஆதிமூலகிருஷ்ணன்-- விக்
ஜ்யோவோராம் சுந்தர்--தங்கமணி
வால்பையன்-------------கேமிரா
கோடிட்ட இடங்களை நிரப்புக 3 x 1= 3
1) திரைவிமர்சனம் என்ற பெயரில் முழு திரைக்கதையையும் எழுதுபவர்...................
2) சுஜாதா என்ற ஒரு எழுத்தாளர் நன்றாக கதைகள் எழுதுவார் என்று புத்தக கண்காட்சியின் பொழுது போய் சுஜாதா புத்தகம் வாங்கி விமர்சனம் எழுதியவர்..............பூ
3) மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கும் சொக்க தங்க பதிவர் கு..ம்பன்
சரியா தவறா? 2 x 1= 2
1) சாரு புத்தகவெளியீட்டின் பொழுது கூட்டம் கடைசிவரை கலையாமல் இருந்ததுக்கு காரணம் வெளியில் பெய்த மழை.
2) அனுஜன்யாவை பெண் என்று நினைத்து பலர் காதல் கடிதம் அனுப்பினர்!
அருஞ்சொற்பொருள் தருக 5x1=5
1)கும்மி
2)மொக்கை
3)கவுஜை
4)பின்நவீனத்துவம்
5)பியர் போத்தல்கள்
டிஸ்கி: அதிக மதிப்பெண் வாங்குபவர்களுக்கு இந்த வார முடிவில் ஒரு பரிசு காத்திருக்கிறது! ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே மதிப்பெண் வாங்கி இருந்தால் வெற்றிப்பெற்றவர் சீட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கனவுகள் விற்பனைக்கு--- விளம்பர உலகம்!









வோடபோன் போல் இதையே கண்டினியுவாக எடுக்கலாம் செஸ் போர்ட், டைல்ஸ் என்று கருப்பு வெள்ளை சேரும் இடங்களில் எல்லாம் இனி கருப்பு வெள்ளை காம்பினேசனுக்கு வாய்பு இல்லை என்று இந்த சாயத்தை காட்டலாம்.
Sunday, March 29, 2009
டும் டும் டுமாங்கி- அப்படின்னா?
தம்பி ஒரே மகள் திருமணம் எல்லா பிரபலங்களும் வருவார்கள் அதனால் ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹுமான் கச்சேரி வைத்தால் நல்லா இருக்கும் அவரை புக் செய்ய முடியுமா பாரு!
உதவியாளர்: இல்ல சார் அவருக்கும் அந்த தேதிகளில் ஜப்பான் படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் இருக்காம்.
தொழிலதிபர்: அப்படியா,சரி இளையராஜாவை புக் செய்யமுடியுமா பாரு!
உதவியாளர்: அவர் இதுபோல் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கமிட் ஆவது இல்லை சார்!
தொழிலதிபர்: ம்ம்ம், ஹாரிஸ் ஜெயராஜ்
உதவியாளர்: அவருக்கு மலேசியாவில் புரோகிராம் இருக்காம் பிஸியாம்
தொழிலதிபர்: யுவனை புக் செய்யமுடியுமா பாருப்பா!
உதவியாளர்: அவருக்கு கை நிறைய படம் இருக்காம் பிஸியாம்
தொழிலதிபர்: தேவா!
உதவியாளர்: அவரும் கமிட் ஆகிட்டாராம் பிஸியாம்...
தொழிலதிபர்: என்னப்பா இது...யாராவது பிரபல ஆர்கெஸ்ட்ராவையாவது புக் செய்யுங்க!
உதவியாளர்: சார், அங்கிங்கு, சாதகப்பறவைவகள் எல்லோரும் பிஸியாம் பருத்திவீரன் டிரம்ஸ் புகழ் டும்டும் டுமாங்கின்னு ஒரு குருப் மட்டும்தான் ஃபிரியா இருக்காங்க!
தொழிலதிபர்: பருத்திவீரன் புகழா? அதுக்கு யுவன் சங்கர் ராஜாதானே மீயுசிக்?
உதவியாளர்: ஆமாம் சார் ஆனா பாட்டுக்கு நடுவில் ஒரு குரூப் டிரம்ஸோட டான்ஸ் ஆடுவது போல் காட்டுவாங்களே, அவுங்க சும்மா டிரம்ஸை மட்டும் வெச்சுக்கிட்டு தட்டுவது போல் காட்டுவாங்க.அவுங்கதான் டும் டும் டுமாங்கி குருப்.
தொழிலதிபர்: சரி சரி புக் செய்யுப்பா!
Saturday, March 28, 2009
ஸ்டார் மாதவராஜால் நான் டேமேஜ் ஆன கதை!
ம்ம்ம் அவரோட மனைவி ஸ்கூல் முடிச்சு கல்லூரிக்கும் போய் இருக்காங்க நீதான் சார் அழகில் மயங்கி படிப்பை ஸ்கூலோட விட்டுவிட்டீயே என்றேன்.
அருந்ததீ அனுஸ்கா மாதிரி எரிக்கும் பார்வை பார்தார்கள்.
சரி சரி தண்ணிய குடி தண்ணிய குடின்னு வேறு பேச்சை மாற்றினேன்!
நேற்று திரும்பவும் அவர் போட்டு இருந்த ”பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி” என்ற பதிவை எடுத்துக்கிட்டு போனேன் படிச்சுட்டு ரொம்ப நல்லா இருக்கு என்றவர்கள், உடனே சிரித்தார்கள் ஏன் என்று கேட்டதற்கு இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க ...
என்னா ஒரு வில்லத்தனம்!
விஜய் நடிக்கும் குளிர் பானவிளம்பரத்தில் பின்னாடி போக்கிரி பட ஸ்டில் இருப்பது போல் வந்தது மனைவி சொன்னாங்க இது ரொம்ப பழய விளம்பரமோ என்று, நான் சொன்னே இல்லை இல்லை கடைசியா ஓடிய படம் அவருக்கு போக்கிரிதானே அதான் போக்கிரி போஸ்டர் வெச்சு இருக்காங்க என்று, என்ன நான் சொன்னது சரிதானே?
டேய் தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா என்றேன்.
ஒரு நிமிடம் குழம்பி போய் யோசித்தவன் ஏன் டா, ஏன் இப்படி என்றான்...
விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!