Showing posts with label இளவு காத்த கிளி. Show all posts
Showing posts with label இளவு காத்த கிளி. Show all posts

Sunday, June 7, 2009

ராமன் சைக்கிள் --சிறுகதை போட்டிக்கு!

ஒழுங்கான ஒரு ரோடு கிடையாது, பக்கத்துல ஒரு கடைகண்ணி கிடையாது, நல்ல ஊரு இது. இந்த ஊருக்கு ஒரு போஸ்ட் ஆபிஸ், அதுக்கு ஒரு போஸ்ட் மேன் ஒண்ணுதான் குறைச்சல் என்று கருஞ்சாபுதூருக்கு மாற்றல் ஆகிவரும் பொழுது புலம்பிக் கொண்டே வந்தார் ராமன்.

கருஞ்சாபுதூரைப் பற்றி உங்களுக்கு சொல்லிவிடுவது நல்லது. கருப்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தூரம். ஒரு நாளைக்கு இருமுறை வரும் அந்த வெள்ளை தகர பேருந்தை தவிர ரோட்டின் நடுவில் யாரும் போக மாட்டார்கள் கப்பிகல் கிளம்பி கிளம்பி கிடக்கும். ரோட்டில் இரண்டு ஓரத்திலும் ஒத்தயடி பாதை அகலத்துக்கு செம்மண் இறுகி போய் இருக்கும். அதில் ஒருபக்கம் போக இன்னொருபக்கம் வர.



ஒரு ஓட்டு வீட்டின் சைட் போர்சனை 75 ரூபாய்க்கு வாடகைக்கு பிடிப்பதில் ராமனுக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஒரு டெம்போ வைத்து ஒரு கட்டில், ஒரு மர பீரோ, அதோடு கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்களோடும், தன் ஒரே மகனோடு வந்திறங்கினார். மனைவி எவ்வளவோ சொல்லியும் தன்னுடைய சைக்கிளை அந்த வண்டியில் ஏற்ற மறுத்துவிட்டார். தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிய இங்கிலாண்ட் ரலே சைக்கிள். அதில் ஒரு கோடு விழுந்தாலும் துடிதுடிச்சு போய்விடுவார் என்பது சந்திராவுக்கு தெரியும். அதானால் அதுக்கு மேல் பேசவில்லை.


”இரவு போய் நானே ஓட்டிக்கிட்டு வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு, எல்லா சாமான்களையும் இறக்கி வைத்துவிட்டு, டேம்போவிலே சென்று அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டே காலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். கருப்பூரில் இருந்து கப்பிகல் ரோட்டில் வரும்பொழுது சைக்கிளுக்கு ஒன்னும் ஆகிவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக ஓட்டிவந்தார். இரவு முழுவதும் சைக்கிள் மிதித்த களைப்பில் அடித்து போட்டது போல் தூங்கியவரை காலை சாப்பிட கூட எழுப்பவில்லை. மதியம் எழுந்தவருக்கு அப்பொழுது சூடாக வடிச்ச சாதத்தை போட்டு மிளகு பொடி நல்லெண்ணெயும் சுட்ட அப்பளம் அதோடு வடகதுவையல் வைத்து மனைவி சந்திரா போட்ட சாப்பாடை நன்றாக சாப்பிட்டார்.வீட்டை எல்லாம் ஒழுங்குப்படுத்திவிட்டு, மகன் சம்மந்தப்பட்ட டி.சி எல்லாம் எடுத்து R.Kமுதலியார் சன்ஸ் ஜவுளி கடை மஞ்சள் பையில் வைத்துவிட்டு மனைவி சுட்ட கோதுமை தோசை சாப்பிட்டு படுக்க 9 மணி ஆனது.


இப்ப வந்து இறங்கியது போல் இருந்தது சந்திராவுக்கு. பன்னிரண்டு வருடம் ஓடியதே தெரியவில்லை மகனை காலேஜ் படிக்க ஹாஸ்டலில் சேர்த்துவிட்டபிறகு இருவருடைய சாப்பாட்டு அளவும், பேசிக்கொள்ளும் நேரமும் குறைந்து போனது. ஒவ்வொரு மழைக் காலத்தின் பொழுது வீட்டு ஓனரிடம் ஓடு மாற்ற சொல்வது இவர்களுடைய வழக்கம். அவரும் இதோ இதோன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஒழுகும் இடத்தில் எல்லாம் பாத்திரங்களையும், சாரல் அடிக்கும் சன்னலில் யூரியா சாக்கு போட்டு கட்டியும் அந்த மழைக்காலத்தையும் ஓட்டிவிட்டார்கள். மகன் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்கு போய்விட்டால் எல்லா கஷ்டங்களும் போய்விடும் என்று எல்லா தந்தையைப் போல நினைத்து கொண்டு இருந்தவருக்கு, மகன் ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு வந்து, ”இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்” என்று நின்ற பொழுதே எல்லா நாடிகளும் அடங்கிவிட்டன. இருவாரங்கள் கூட ஆகவில்லை முனுமுனுத்துக்கிட்டு இருந்த புது பொண்ணுக்கிட்ட, ”என்னடி சொன்ன! இந்த கிழவிக்குன்னு ஏதோ ஆரம்பிச்ச, சொல்லுடி, என்ன சொன்ன?” என்று கேட்டுக்கிட்டு வந்த சந்திராவை, ”என்னமா தாண்டிக்கிட்டு வர, அவளும் எவ்வளோ தான் பொருத்து போவா?”என்று தள்ளினான் கோபி. இதை ஏதிர்பார்க்காததால் சந்திரா கீழே விழ, அதைப் பார்த்து ஓடிவந்த ராமன், சந்திராவை தூக்கிவிட்டு, கோபிக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தார். நினைவு தெரிந்து மகனை அடிக்கும் முதல் அடி, ”வயசானவரு என்று பார்க்கிறேன் இல்லேன்னா” என்று சொல்லிவிட்டு பொட்டியை கட்டினான் கோபி.


நினைவு தெரிந்த நாளாக ஆசைப்பட்டு எதுவுமே கேட்காத மனைவி காலை எழுந்ததும், ”என்னங்க ஆஞ்சனேயர் கோயிலுக்கு போய்ட்டு வரலாமங்க” என்றதுக்கு மறுபேச்சு சொல்லாமல்கிளம்பினார். அவருக்கு தெரியும் எதுக்கு இன்று கேயிலுக்கு போகனும் என்று சந்திரா கேட்டாள் என்று. இன்றோடு இருபத்து நான்கு வருடம் ஆகிறது கோபி பிறந்து. வீட்டைவிட்டு போய் ஒருவருடத்துக்கு மேல் ஆகுது. பிறசவ வலி வந்த பொழுது இதே சைக்கிளில்தான் தாராசுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் அங்கு தவிப்போடு நிற்றதும், தவழும் மகனே ஹேண்ட்பேரில் ஒயரால் பின்னிய கூடைய முன்னாடி மாட்டி அதில் கோபியை வைத்துக்கொண்டு கும்பகோணம் செல்வம் தியேட்டரில் தங்கபதக்கம் பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது. கோயிலில் மனைவி சாமிபேருக்கு அர்சனை என்றதும் உதட்டோரம் சின்னபுன்னகை தோன்றி மறைந்தது ராமனுக்கு.


”என்னங்க ஏதோ சுறு சுறுங்குது ஒரு சோடா வாங்கிவாங்களேன்” என்று தன் இடதுபக்க மார்பை புடிச்சுக்கிட்டு சொன்னதும், ஓடி போய் வாங்கிவந்து கொடுத்தார்.குடித்ததும் வியர்க்க ஆரம்பித்தது சந்திராவுக்கு. பயந்துபோனவர் தன் சைக்கிளில் உட்கார வைத்து ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்றார். பிரவவத்துக்கு பிறகு சந்திராவை ஆஸ்பத்ரிக்கு அழைத்து செல்வது இப்பொழுது தான். போன சிறிது நேரத்தில், ”சிவியர் ஹார்ட் அட்டாக்” ”சாரி ராமன் எவ்வளோ முயற்சி செய்துபார்த்துவிட்டோம். முடியல.சம்பிராதயமான டயலாக்கை சொல்லிவிட்டு போனார் டாக்டர்.


இறுதிகாரியத்துக்காவது புள்ள வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து தானே கொள்ளிவைத்துவிட்டு வந்தார். தேவையே இல்லாமல், சந்திராவை ஒழுங்கா வெச்சிருந்தேனா?ஒரு நல்ல புருசனா இருந்தேனா? உடம்பு முடியாமல் சுரம் என்று படுத்து இருந்தாலும் ஒருநாள் கூட ஆறிய சோறை போட்டது இல்லையே, ஆனா நான் என்ன செஞ்சேன்?என்று எல்லாம் தோனியது. கடைசியாக சந்திராவோடு வாழ்ந்த வீடு என்பதால் அங்கிருந்து எங்கும் மாற ராமனுக்கு பிடிக்கவில்லை.


சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக உயிர் விடும் பொழுதுதான் தனக்கு வயதாவதை உணர்ந்தார் கடைசியில் பெடல் இருக்கும் இடத்தில் ஒரு கம்பியும் ஒரு பக்க பெடலுமேஇருந்தது, மனைவி கடைசியா அமர்ந்து வந்த சைக்கிள் என்று யாரையும் தொடவிடாமல் வைத்திருந்தார். தானே எல்லா ரிப்பேரையும் செய்தார், பக்கத்து வீட்டு ஓனர் பேரபுள்ளைங்க விளையாட்டு அந்த சைக்கிள் தான். சன்னல் ஓரத்தில் இருக்கும் சைக்கிள் மேல் ஏறி கம்பிய புடிச்சுக்கிட்டு அது மேல ஏறி, குதிப்பது. கேரியரில் உட்காந்து கீங்கீன்னுஹாரன் அடிப்பது என்று அதுங்களுக்கு சைக்கிள் ஒரு விளையாட்டு சாமான். பலமுறை இதுமேல ஏறாதீங்க, ஏறாதீங்க என்று சொல்லி சொல்லி பார்த்துவிட்டு சைக்கிளைவீட்டுக்குள் போட ஆரம்பித்தார். ஏதோ நினைப்பில் அன்று சைக்கிளை உள்ளே போட மறந்து படுத்து இருந்தவர், வெளியில் டமார் என்று சத்தம் கேட்க ஓடி போய் பார்த்தார். பக்கத்துவீட்டு பசங்க சைக்கிள் மேல் ஏறி விளையாடி கீழே தள்ளிவிட்டுவிட்டார்கள். கோவத்தில் நாலு முதுகில் போட்டு விரட்டியும் கோவம் அடங்காமல் கேரியரை கழட்டிவைத்தார். பசங்க விளையாட வருவது குறைந்தது.


ஞாயிறு காலை சைக்கிள் எடுத்துக் கொண்டு கடைக்கு இட்லி வாங்க போனவர் பெல் அடிக்க நினைத்து, அழுத்திய பொழுது சத்தம் வராமல் கிரிச், கிரிச் என்று சத்தம்தான் வந்தது.பார்த்தவருக்கு பெல்லு மேல் இருக்கும் கப்பு காணாமல் போய் இருந்தது. சைக்கிளை எடுக்கும் முன் பக்கத்துவீட்டு பசங்க சைக்கிள் கிட்ட விளையாடியது நினைவுக்கு வர,அது அவர்கள் வேலையாகதான் இருக்கும் என்று கோபமாக பக்கத்துவீட்டு பசங்களை தேடிக்கிட்டுவந்தார் தேடிவந்தவர் மாமரத்தடியில் மணலை குழைத்து அந்த சைக்கிள் மூடியில் வைத்து பூவரசு இலையில் கப்பு கப்பாக செஞ்சு இட்லி சுட்டுக்கிட்டு இருந்தார்கள்.


”ஏய் ஏன் இத்தனை இட்லி சுடுற போதும் போதும்” என்று சொன்னதும், ”உனக்கு ஒரு இட்லி, எனக்கு ஒரு இட்லி, அம்மாவுக்கு ஒன்னு,அப்பாவுக்கு ஒன்னு...”

“அப்படியும் இன்னும் மீதி ஒன்னு இருக்கே”


”அப்ப அது சாமிக்கிட்ட போன சந்திரா மாமிக்கு ஒன்னு” என்று குழந்தை சொல்வதை கேட்ட ராமன், வீட்டுக்கு வந்து தேடி எடுத்தார், கழட்டிபோட்ட கேரியரை!