Tuesday, September 29, 2009

சிரிக்க! சிந்திக்க அல்ல!

புளியமரத்துக்கு பக்கத்துல இருக்குற ஒத்த கீத்துக்கொட்டாதான் எங்கூரு பஸ்ஸ்டேண்டு. அதுல இத்துப்போன தகரத்துல எந்த காலத்திலயோ எழுதுன பயணியர் நிழற்குடை போர்டுங்கற பேர சொமந்துக்கிட்டுருக்குது.போனமுறை தேர்தலப்போ வச்ச தண்ணிக்குடம் மண்பானை ஒடஞ்சு அங்கயே கிடக்கும். ஆனா ஒருநாளைக்கு நாலு தரம் ரோட்டுல மண்ணள்ளி தூத்திக்கிட்டு வர்ற பஸ்ஸுல ஏறதுக்கு எவனும் இருக்கறதுதான் கெடயாது.

பஸ்டேண்டுக்கு எதிர்க்க இருக்கற பொட்டிக்கடையை தண்டல்ல எடுத்து, சக்தி சின்னதா கெரசின் ஸ்டவ் வச்சு டீக்கடையும் சேத்து நடத்திட்டு இருக்கான். ராத்திரில படுத்துக்கறதுக்காக வச்சிருக்கற ரெண்டு கட்ட பெஞ்சுல ஒண்ண எடுத்து வெளில டீ சாப்பிட வர்றவங்களுக்குன்னு போட்டு வச்சிருப்பான். சில சமயம் சும்மா உக்காந்து பெஞ்சை தேச்சுட்டு போறவங்கள அடுத்த முறை உக்காரும்போதே எவனையோ திட்டுற கணக்கா சக்தி காறித்துப்புறதால அங்க உக்கார்றதுக்கு முன்னாடியே டீ சொல்லிட்டுத்தான் பெஞ்சுல உக்காருவாங்க.

சக்தியோட கடைக்கு தவறாம வர்ற ஆளுங்கள்ல முக்கியமானவன் கா.கா.பீ அவுங்க அப்பா அம்மா வெச்ச பேரு சுரேஸ்.ஆனா காலோஜூக்கு படிக்கப்போன பொறவுதான் ”ஸ்” வட மொழி எழுத்து என்பதை கண்டுபிடிச்சு இவனா இவனுக்கு வச்சுக்கிட்ட புதுப்பேரு. காகாபீ.

பழைய பேரு தேவலையா இருக்குதேன்னு யோசிக்கறவங்க காகாபீயோட அர்த்தம் கேட்டு மூக்குல விரலை வச்சு மூடிக்கிட்டு போவானுங்க. கார்லஸ் கார்மன் பீக்ஸ்கன் என்று மூன்று வெளிநாட்டு புரட்சி கதை எழுதறவங்க பேர சேத்து வெச்சுக்கிட்டு சுருக்கமா கேகேபீன்னு சொல்லிக்குவான். கே.கே.பீன்னாலும் காகாபீன்னாலும் மூஞ்சை சுளிக்குற ஊரா இருக்குறதால இவன் வருத்தப்படாதது ஆச்சரியம்தான். சிலசமயம் K.K.P சொன்னேன் என்று ஒரு சிகரட் வாங்கி வான்னு அடிக்கடி சின்னப்பசங்கள அனுப்பி வைக்கறப்ப அவங்க மூலமா கே.கே.பீ காக்காப்பீயா கொடி கட்டி பறந்துச்சு.

காகாபீ என்றதும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றது அவன் கையில் தெனமும் வச்சிருக்கற விதவிதமான தடியான பொஸ்தவம். ஒருநா கருப்பு சட்டை, தலையில் தொப்பி போட்டு தாடியோடு வாயில் அப்பத்தா குடிக்கும் சுருட்டோடு ஸ்டைலா போஸ் கொடுக்கும் ஒருவரோட அட்டை படம் இருக்கும், அடுத்த நாள் தொங்கு மீசை, வெட்டருவா மீசை என்று வித விதமான வெளிநாட்டுக்காரங்க போட்டோ அட்டை படமாக இருக்கும் புத்தங்கள் கையில் தவறாமல் இருக்கும். பேசுறப்ப சாதாரணமா வார்த்தையால த்தோயோளி, மானா பூனான்னு வார்த்தையை போட்டுத்தான் ஆரம்பிப்பான்.அந்த வகையில் முதல் புரட்சிக்கி வித்திட்டவன்.

கீழத்தெரு வடக்கு வூட்டுக்கார பய மாரி ஏழாவது வரைக்கும் படிச்சுட்டு அப்பனாத்தா பேச்ச கேட்டு படிப்ப விட்டவன். மாடுமேச்சுக்கிட்டு இருக்கான். சொந்தமா அடுத்த வருடத்திலாவது ஒரு எருமை மாடு வாங்கிடனும் என்று நோக்கத்துல இருக்கறதப் பாத்து அவன் மாமனே ஒரு மாட்டை இனாமா கொடுத்து அவர் பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தாரு. மாரி காகாபீயோட கொஞ்சம்நாள் ஸ்கோல்ல சேர்ந்து படிச்சதால நெறய்ய படிச்ச காகாபீக்கு ரசிகனாக மாறிட்டான்.

டீக்கடைக்கு காகாபீ வந்து உக்காந்திருக்கும்போது ஒடனே மாரி எழுந்து நின்னுப்பான். நிக்கலைன்னா டீ காசு மாரி தலையில வுழுந்துடும். ஆனா வுடாம காகாபீ, ”எலேய் மாரி! எதுக்கு எந்திருக்கிற.. நீயும் மனுசன். நானும் மனுசன். எதுக்கு இதெல்லாம், கைகட்டுறதுங்கறது அடிமைத்தனம்டா,குனியறது ஒரு குறீயிடுடா. அது இதுன்னு பேசிக்கிட்டே இருப்பான். ஒருதரம் மாரி கையில் வச்சிருந்து சினிமாப்படம் பாத்துட்டு இருந்த ஒத்தைப்பேப்பரை பார்த்துட்டு ”இந்த பேப்பர் பீ தொடைக்கக்கூட லாயக்கு இல்லை”ன்னு ஆரம்பிச்சு இந்தப்பேப்பரை நடத்துறவரை பத்தி அந்தப்பேச்சு பேசினான். அன்னிலேந்து வெறுங்கையில போண்டா தின்னாலும் திங்கறான் அந்த பேப்பரை வச்சி மடிச்சு கொடுத்தா தொடுறது போண்டாவை தொடுறது இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதியாலதான் இந்தியா குட்டிச்சுவராப் போனதாவும் அவர்களை அடிச்சு துரத்தினால் தான் நாடு வெளங்கும்ன்னும் காக்காப்பீ அடிக்கடி சொல்லுவான்.

ஒருதரம் மாரி ”யாரு இவரு? சுருட்டு குடிக்கிறவரு” ஒரு பில்டர் சிகரெட் வாங்க கூட காசு இல்லாதவரும் இம்மாம் பெரிய புக்கு எழுதியிருக்கிறாரு என்று காகாபீ கையில இருந்த பொஸ்தக அட்டையில் இருக்கறவரைப் பத்திக் கேட்டதும் சத்தம் போட்டு சிரிச்சான் காக்காப்பீ. சிரிச்சுக்கிட்டே ”ம்ம்ம் இவரை பத்தி தெரியாததால் தான்டா இன்னும் உன் தெருவுல எல்லா வூடும் அப்படியே குடிசையா இருக்கு”ன்னான்.

”ஏனுங்க! இவரு இலவச வீடு கட்டிதர்றாரா”ன்னதும் காக்காப்பீ சிரிச்ச சிரிப்பு மாரியை என்னமோ செய்தாலும் அதுக்கப்புறம் அவன்கிட்ட பொஸ்தவம் பத்தி எதுவும் பேசுறது இல்லை.

காக்காபீக்ட்ட ஒரு பத்து நிமிசம் பேசினால் அதில் ஒரு நொடிக்கு குறைச்சல் இல்லாம ஈயம்,ஈசம்,அடிமை, இதுல்லாம வேறு ஏதும் இருக்காது.மாரிக்கு கா.கா.பீ என்றாலே ஒரு புரட்சியாளன் அல்லது தேவதூதன் ரேஞ்சுக்கு அவனை வைத்திருந்தான். காரணம் கா.கா.பீ ஒருதரம் பேசுறப்ப கட்டினா உங்க சாதி பொண்ணைதான்டா மாரி கட்டுவேன், இல்ல பைபாஸ் ரோட்டில் இராத்திரி நிக்கும் ஒருவளை சீக்கு இல்லாதவளா பார்த்துதான் கட்டுவேன் என்று சொன்னது கூட காரணமாக இருக்கலாம்.

நேத்தைக்கு மொத நாள், பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு இலை வாங்கிட்டு வரச்சொல்லி மாரியை டவுனுக்கு அனுப்பினாரு காரைவீட்டுக்காரர். மாரி சைக்கிளில் டவுனுக்குப் போனவன் வெய்யிலுக்கு சாஸ்தியா இருந்ததால சர்பத் குடிக்க ஒரு கடைக்கு போனான். அந்த நேரத்துல எதிர்க்க காகாபீ மெத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னாடி கையில் இருந்த தடி பொஸ்தவத்தை பக்கத்து பொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு வராண்டாவில் நின்னான்,நேர்ல பார்த்தா காறித்துப்பி செருப்பால அடிக்கணும்ன்னு சொன்ன சாதிக்கார ஆளு முன்னாடி கும்பிடு போட்டுட்டு, அவர் ஏதோ சொல்ல சொல்ல கை கட்டி குனிந்து நின்று கேட்டுக்கிட்டு தலையாட்டி இருந்தான் காகாபீ.

புரட்ச்சியாம் புண்ணாக்காம் போங்கடா மயிறாண்டிகளா...என்று முனுமுனுத்துக்கிட்டு சர்பத்தை குடிச்சு முடிச்சான் மாரி

Sunday, September 27, 2009

ஸ்வைன் ப்ளூ சில சந்தேகங்கள்???


இங்கே நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ போன வாரம் வந்துவிட்டது, இவர்களும் பயந்து போய் அவர் கூட இருந்த அனைவருக்கும் ஒருவாரத்துக்கு மேல் லீவ் கொடுத்துவிட்டு, ஆபிஸ் பக்கம் வரவேண்டாம் என்று அனைவரையும் சொல்லி விட்டார்கள்.
அவரை இங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள், இங்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பது இல்லை என்று சொல்லி அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறார்கள், அங்கு சென்றதும் டாக்டர்கள் ரொம்ப கூலாக ஒன்னும் பயப்படவேண்டியது இல்லை, தனியாக இவரை ஒருவாரம் வைத்திருங்கள் இந்த மாத்திரைகளை எல்லாம் கொடுங்கள் சாதாரண ப்ளூ மாதிரிதான் இதுவும் சரி ஆகிவிடும். குழந்தைகள், கர்பிணிகளுக்குதான் பாதிப்பு அதிகம் கொஞ்சம் அதிகம் கேர் எடுத்துக்கனும் என்று சொல்லிவிட்டு மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார்கள், இப்பொழுது ஒருவாரத்தில் நல்ல அவருக்கு பரவாயில்லையாம், அடுத்த வாரத்தில் இருந்து வேலைக்கு வரலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க ஏன் இத்தனை பீதி? எது உண்மை?

இங்கு நேற்றுமுதல் ஒரு லோக்கல் கமெணிக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள், இங்கு இனி அந்த லோக்கல் கம்பெணிதான் ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்தை தயாரிக்க போகிறது. நம்மை விட மருத்துவதுறையில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று சொல்லமுடியாது அப்படி இருந்தும் இவர்களால் தயாரிக்கும் பொழுது நாம் ஏன் வெளிநாடில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்?

Wednesday, September 23, 2009

கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்

டரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!





எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர் விருது கொடுத்துவிடாதீங்க!

Friday, September 18, 2009

உன்னைபோல் ஒருவன் - விமர்சனம்

துபாயில் எப்பொழுதும் ஒரு நாள் முன்னதாகவே புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடுவதால், நேற்று இரவு 10மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு சென்றோம். கமல் படம் + வென்ஸ்டேயின் ரீமேக் என்பதால்கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார், இதில் பாட்டு வெச்சது பிளண்டர் மிஸ்டேக் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு ஒத்துவராது என்று ஆருடம் சொன்னவர்கள் முகத்தில் கரி, படம் பார்க்கும் நமக்கே ஒத்துவரும் ஒத்துவராது என்று தெரிகிறது என்றால் கமல் போல் 50வருடமாக சினிமாவில் வாழும் கலைஞனுக்கு தெரியாதா? படத்தில் பாட்டு கிடையாது. (இரண்டு இடங்களில் மட்டும் ஜானே அல்லா ஒரு நிமிடத்துக்கும் குறைவாக வருகிறது).


ராகவன் மறாராக மோகன்லால், ஹோம் செகரட்டரியாக லெட்சுமி(கொடுமை), இவர்கள் இருவரும் பேசும் இடங்களில் வசனங்கள் பட்டாசு, இங்கு தியேட்டரில் வசனத்துக்கு கைதட்டல் கேட்டது புதுமையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இரா.முருகன் வசனத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறார். பிளாக் ஹீயுமர் வகையில் மோகன் லால் லெட்சுமியிடம்பேசும் வசனங்கள் உங்களை அறியாமல் சிரிக்கவைப்பதோடு கை தட்டவும் வைக்கிறது, மிகவும் சென்ஸ்டிவானகளம் இந்த கதை, இதில் கத்தியில் நடப்பதுபோல் வசனங்கள் இரா.முருகனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங், நிச்சயம்இனி அடுத்து பெரிய பெரிய இயக்குனர்களோடு இவர் பணியாற்ற போவது உறுதி. சில இடங்களில் சறுக்கி இருக்கிறார். குஜராத் பிரச்சினை பற்றி தீவிரவாதி பேசும் வசனத்துக்கு தமிழக பி.ஜே.பியில் இருக்கும் நான்கு பேரும் இன்று படத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வென்ஸ்டேவையும் இதை ஒப்பிட்டு பார்த்து கருத்துசொல்வது தேவையற்றது, தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது, கடைசியாக உங்க பேர் என்ன சொன்னீங்க என்று நஸ்ருதின் ஷாவிடம் கேட்கும் காட்சி சிறப்பாக இருக்கும் இதில்அது மிஸ்ஸிங். படம் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடுகிறது.

சுருதி இசையும் பக்காவாக இருக்கிறது முதல் படம் போல் தெரியவே இல்லை, நடஷா ராஜ்குமார் மோகன் லாலிடம் இங்க தம் அடிக்கலாமா என்று கேட்கும் காட்சி போன்றவை ஒரு தேவையற்ற இடைசொருகள். இதுபோல் சின்ன சின்ன குறைகள் தான்.

கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:), பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகளை இடம் மாற்றம் செய்கிறோம் என்றுதமிழில் சொல் CM டீவி பார்த்துக்கிட்டு இருக்கார் என்று சொல்லும் இடம், இனி கடவுள் கையில் தான் இருக்கு என்று மோகன்லால் சொல்லும் பொழுதுCM அடா அடா அவர் ரொம்ப சிக்கலான ஆளாச்சே என்று சொல்லும் இடங்கள் எல்லாம் அருமை. ஆங்கிலத்தில் அதிகம் வரும் வசனங்களை தவிர்த்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.

Tuesday, September 15, 2009

கார்ட்டூன்ஸ் 16-09-2009








Sunday, August 30, 2009

வீட்டுல விசேசமுங்கோ!!!

(கலை கண்ணை மூடிய கேப்பில் கஞ்சி கப்பை ஆட்டைய போட்ட ஆதவன்)
வீட்டில் சின்ன சின்னதாய் விழாக்கள் நடைபெறும் பொழுது வீடு எப்படி உறவினர்களாலும் நண்பர்களாலும் களைகட்டுமோ அப்படி இருந்தது கடந்த வெள்ளி கிழமை மாலை, இடம் ஆசிப் அண்ணாச்சியின் வீடு. வழக்கமான பதிவர் சந்திப்பு போல் இல்லாமல் வீட்டில் நடந்த சின்ன விழா போல் இருந்தது.

நாம எல்லாம் ஓசி சாப்பாடுன்னாலே காலையில் இருந்து வயிறை காலியா வெச்சுக்கிட்டு போய் செம கட்டு கட்டும் ஆளுங்க, பிரியாணி விருந்துன்னா கேட்கவா வேண்டும்? 7 மணி இஃப்தார் பார்ட்டிக்கு முதல் ஆளாக நானும் நண்பர் சிவராமனும் போய் துண்டை போட்டுக்கிட்டோம். அண்ணாச்சி ஏதும் ஹெல் செய்யனுமா என்று கேட்பது மட்டும் தான் என் வேலை என்பதை அண்ணாச்சி தெரிஞ்சுக்கும் வரை எல்லாம் ஒழுங்காகதான் போய் கொண்டு இருந்தது, அவர் சரியாக இரண்டு மணி நேரத்தில் டேய் இவன் இப்படியே எல்லோரிடமும் கேட்டுக்கிட்டு ஒருவேளையும் செய்யாம சுத்தி சுத்தி வருகிறான் டா என்று அவர் கண்டு பிடிச்சதும் இனி பப்பு வேகாதுன்னு ஆரஞ்சு உறிக்கும் வேலைக்கு போய்விட்டேன்.

நண்பர்கள் ஒவ்வொருவராக வர வர ஆள் ஆளுக்கு வேலைகளை அண்ணாச்சி பிரிச்சுக்கொடுத்துக்கிட்டு இருந்தார், பம்மல் கே சம்மந்தத்தில் கமல் டயலாக் ஒன்னு சொல்லுவார் அதுதான் நினைவுக்கு வந்துச்சு, ஆண் சிங்கம் ஒன்லி டிஸ்ரிபியூட் வேலை மட்டும் செய்யும் பெண் சிங்கம் தான் வேட்டைக்கு போகும் என்று, இங்கு பெண் சிங்கங்களுக்கு பதில் சின்ன சின்ன பூனைகள். அண்ணாச்சி சோக்கா ஒரு வெள்ளை கலர் ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கிட்டார், கடைசி வரை அதில் ஒரு சின்ன அழுக்கு கூட ஆகவில்லை என்றால் எப்படி வேலை பார்த்து இருப்பார் பாருங்க!

கீழை ராசா வீடு எங்கன்னு கேட்க போன் செஞ்சார் லொக்கேசன் சொல்லிட்டு வாங்க என்றேன், திரும்ப போன் செஞ்சு எங்க வரனும் என்றார், திரும்ப இடம் எங்கன்னு கேட்டார் அதையே சொன்னேன், என்ன டா இவரு சும்மா போன் செஞ்சுக்கிட்டே இருக்காருன்னு ஹல்லோ பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு பில்டிங் இருக்கு அந்த பில்டிங் தான் என்று வீட்டு நம்பரையும் சொன்னேன், திரும்ப போன் செஞ்சு அல்லோ எப்படி வருவதுன்னு தெரியல கொஞ்சம் ஒழுங்கா சொல்லு, பிரியாணி வேற சூடு ஆறுதுன்னு சொன்னார், அட பாவி பிரியாணி உங்க (ஒத்தை ஆளா ரெண்டு லிட்டர் ஜூஸ் குடிச்சுட்டு மீதி கொஞ்சமாக வைத்திருக்கும் சுபைர்)கூடதான் வருதுன்னு முன்னாடியே சொல்லக்கூடாதான்னு மனசுல நினைச்சுக்கிட்டு அங்கயே நில்லுங்க நான் வருகிறேன் என்று ஓடி போய் அவரை அழைத்து வர சென்றேன், அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது கீழை ராசா (மனசு) மாதிரியே பிரியாணி பாத்திரமும் பெருசுன்னு, அப்பதான் நம்ம ஆதவன், சென்ஷி, கோபி எல்லாம் வர, ஜிம் பாடியான ஆதவனிடம் செல்லம்

பிரியாணிய தூக்கனும் வான்னு சொல்லி கூட போய் ஒழுங்கா தூக்கிக்கிட்டு வராங்களான்னு மேல் பார்வை பார்த்துக்கிட்டே வந்தேன். இது பொருக்காத கீழை ராசா குசும்பா நோம்பு கஞ்சி ஒரு பாத்திரத்தில் இருக்கு அதை தூக்கிட்டு வான்னு சொல்லிட்டார், வேற வழி வேலை செஞ்சே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்! நானும் கவிஞர் சிம்மபாரதியும் கஞ்சி பாத்திரத்தை தூக்கிட்டு வந்தோம், சிம்ம பாரதியோடு வரும் பொழுது பிரண்ட்ஸ் படத்தில் கடிகாரம் கீழே விழும் சீன் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சை செய்தது. அவர்களுடன் மலேசியா புகழ் இஸ்மத் அண்ணனும் வந்தார்.

அண்ணாச்சியின் சரியான வழிகாட்டுதலின் விளைவாக 20 நிமிடத்தில் வரவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் சுத்தி ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் ஆசாத், சுபையர், தினேஷ். நோம்பு முடிக்கும் நேரம் வரை பொறுமை இல்லாமல் ஏதோ ஐஸ்கிரீம் மாதிரி ஒரு கப்பில் இருந்ததை பார்த்து நைசா அதை ஆட்டைய போடும் பொழுது தம்பி கோபி பார்த்துட்டான் சரி வா அப்படியே வெளியில் நைசா போய்விடாலாம் என்று இருவரும் வெளியில் போவதை பார்த்த ஆதவன் பின்னாடியே வர நான் வழக்கம் போல் முதல் பங்கை கோபிக்கு கொடுத்து டெஸ்ட் செஞ்சேன் கோபி பிடிக்கவில்லை என்றான், சரி நாம சாப்பிட்டு பார்க்கலாம் என்று டேஸ்ட் செஞ்சா எனக்கும் பிடிக்கவில்லை கதவை திறந்து வெளியில் வந்த ஆதவனிடம் இந்தா உனக்குதான் சாப்பிடு என்று சொல்லி கப்பை அவன் கையில் கொடுத்தேன், சரியான சமயத்தில் அண்ணாச்சி தேடிக்கிட்டு வெளியில் வந்துட்டார் இங்க என்னாடா செய்யுறீங்கன்னு, பாருங்க அண்ணாச்சி ஒரு கப் ஐஸ்கிரீமை தனியா சாப்பிடுறான் ஆதவன் என்று போட்டு கொடுத்துட்டு வந்துட்டேன். நிகழ்சி முடியும் வரை ஒரு கப் ஐஸ்கிரீமை தனியா திருடி தின்ன ஆதவன் என்ற பெயர் வரும் படியும் பார்த்துக்கிட்டேன்.



கடைசி நேரம் வரை சுந்தருக்காக காத்துக்கொண்டு இருந்தோம் ஏன் என்றால் அவர் எடுத்து வருகிறேன் என்று சொன்ன வடைக்காக என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவர் வந்ததும் ஆஹா வடை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் ஓடி போய் அவரை வரவேற்க சென்றேன், அந்த சைக்கிள் கேப்பில் நான் தனியாக எதில் அதிகம் இருக்கும் என்று ஸ்பெசலாக பார்த்து பார்த்து உட்காந்திருந்த இடத்தில் வேறு ஒரு நண்பர் உட்கார்ந்துவிட்டார்,
சுந்தரும் வடை இல்லை வேறு ப்ரூட் மிக்ஸ் + ஐஸ்கிரீம் தான் என்றார் ஆஹா வடை போச்சேன்னு சொல்லுவது சரியாக பொருந்தியது. இந்தமுறை வடை திருட முடியாமல் போன வருத்தத்தில் மிகவும் சோகமே உருவாக கலை இருந்தார்.

பின் தட்டு நிறைய பழம், சமோசா, கட்லெட்,என்று என்ன என்னமோ வெச்சுட்டு வெடி வெடிச்ச பிறகுதான் சாப்பிடனும் என்று கட்டளை வேறு போட்டுவிட்டார் சுல்தான் பாய், எவ்வளோ கஷ்டமான விசயம் இது. ஒரு வழியா வெடி வெடிச்சதும் சாப்பிட போகும் நேரம் லேட்டாக வந்த லியோவுக்கு பிளேட் இல்லாததால் வாங்க ஷேர் செஞ்சு சாப்பிடலாம் என்று ரொம்ப பெருந்தன்மையா சொல்லிட்டு உள்ளுக்குள் இன்னைக்கு நமக்கு நேரம் சரில்லை போல என்று நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்.

லொடுக்கும் அவர் குடும்பத்தோடு வந்தார், படகும் அவர்களுடைய கணவரும் குடும்ப சகிதமாக ஆஜர் ஆனார்கள்.

எல்லாம் முடிஞ்சு ஷார்ஜாவில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர் நண்பனும் முத்துகுமரனும்.

(சின்ன கப்பில் ரெண்டே ரெண்டு ஸ்பூன் பிரியாணி, நான் ரொம்ப கொஞ்சமாக சாப்பிடுவதுக்கு சாட்சி)
சில லெக் பீஸ்கள்:

1) அண்ணாச்சி ஒரு வெஜ்டெல்புல் சாலடை கையில் வெச்சுக்கிட்டு குசும்பா கொஞ்சாமாச்சும் வெச்சுக்கடா என்று எவ்வளோ கெஞ்சி பார்த்தார் அவரிடம் ஸ்ரிக்டா அண்ணாச்சி நான் Pure Non veg என்னை மாத்த முயற்சிக்காதீங்கன்னு சொன்ன பிறகுதான் போனார்.


2) செந்திவேலன் சில பிரபலங்கள் விமர்சனம் மோசமாக எழுதுவதால் பலர் படம் பார்க்காமல் போய்விடுகிறார்கள் கொஞ்சம் கவனமாக எழுதனும் என்றார்

3) சுபைர் வெண்ணிலா கபடி குழுவில் வரும் புரோட்டா காமெடி போல் என் தட்டில் பிரியாணி வைக்கவே இல்ல இது போங்காட்டம் திரும்ப முதலில் இருந்து எல்லாத்தையும் வையுங்க என்று சண்டை போட்டுக்கிட்டு இருந்தார்.

4) கலை கடமை வீரராக பார்சலும் எடுத்து சென்றது அவரின் கடமைக்கு சிறந்த உதாரணமாக இருந்தது.

5) ராஜா கமால் எழுதிய பூத்துமகிழும் பூக்கள் புத்தக வெளீயிடு நடந்தது, சென்ஷி புத்தகத்தை பற்றி யாரும் உடனே கருத்து ஏதும் சொன்னால் நல்லா இருக்கும் என்றார், அட்டை அழகாக இருக்கிறது புத்தகம் வாசமாக இருக்கிறது என்று வேண்டும் என்றால் உடனடியாக சொல்லலாம் என்றது சைலண்ட் ஆகிவிட்டார்.

6) செந்தில் நாதனுக்காக பதிவை மட்டும் பார்த்துவிட்டு பணம் அனுப்பிய முகம் தெரியாத நண்பர்களை பற்றி அண்ணாச்சி சொன்னார் மிகவும் சந்தோசமாக இருந்தது.

7) பினாத்தல் சுரேஷ் கதை போட்டி வைக்கனும் என்றார் நீங்கதான் நடுவர் நான் 10 கதை எழுதுவேன் என்றதும் அதன் பிறகு போட்டி பற்றி பேசவே இல்லை!



Monday, August 24, 2009

சென்னை அது ஒரு ஊரு!

என்னிடம் பேரை கேட்டாலே டரியள் ஆகும் ஊர் எதுன்னு கேட்டா கொஞ்சமும் யோசிக்காமல் வரும் பெயர் "சென்னை." ஏன்னு தெரியனுமா? ஒரு கொசுவத்தி சுத்தனும்

காலேஜ் முடிச்சுட்டு அனிமேசன் கோர்ஸ் படிக்க சென்னை வந்தேன், என்னுடன் ஸ்கூலில் படிச்ச நண்பன் அவன் ரூமில் தங்கிக்கலாம் என்றான், வந்து கிண்டியில் இறங்கியதும் வந்து வேளச்சேரியில் இருக்கும் அவனுடைய ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனான், சின்ன அறைதான் 4 பேர் இருந்தார்கள். காலையில் எழுந்து குளிக்க போனேன் போய் பைப்பை திறந்தால் தண்ணி வரல, பக்கத்தில் ஒரு நீல கலர் ட்ரம், அதில் தண்ணி இருந்துச்சு எடுத்து பக்கெட்டில் ஊத்தி குளிச்சிட்டு ஜட்டி பனியனை அலசலாம் என்றால் தண்ணி இல்ல, பாத்ரூம் வெளியே ஒரு ட்ரம் தண்ணி இருந்துச்சு அதில் இருந்து தண்ணி எடுத்து ஊத்தி ஜட்டி பனியன் அலசிட்டு வந்தேன், கொஞ்ச நேரத்தில் நண்பன் குளிக்க போனவன் சுவத்தில் அடிச்ச பந்து போல திரும்பி வந்தான், என்னாடா மாப்பு குளிக்க போறேன்னுட்டு உடனே வந்துட்டேன்னு கேட்டேன்.

டேய் ட்ரம்மில் இருந்த தண்ணி எங்கடா என்றான்? குளிச்சுட்டேன் டா என்றேன். என்னமோ அவனோட பிகரை ஆட்டைய போட்ட மாதிரி என்னது குளிச்சுட்டீயா என்றான் அதிர்சியாக, ஆமான்டா பைப்பில் தண்ணி வரல அதான் அங்கிருந்துச்சு ஊத்தி குளிச்சுட்டேன் என்றேன், அவ்வளோ தண்ணியிலுமா என்றான் ரொம்ப அதிர்ச்சியாக. என்ன டா இவ்வளோ ஷாக் ஆவுற, பனியன் ஜட்டி அலச தண்ணி இல்லாம வெளியில் இருந்த ட்ரம்மில் இருந்து ரெண்டு குடம் எடுத்து அலசினேன் என்றேன். ங்கொயாலே பனியன் ஜட்டி அலச ரெண்டு குடமா? அதுவும் ஹவுஸ் ஓனர் வீட்டு ட்ரமில் இருந்து, டேய் வந்த முதல் நாளே உன் ஏழரைய ஆரம்பிச்சுட்டீயே டா, அவுங்க வீட்டு தண்ணிய எடுத்து வேற வீடு மாற வெச்சுடுவ போல, டேய் டேப்பில் தண்ணி வராது ஒருத்தருக்கு ஒரு குடம் தான் டா குளிக்க என்றான், ஹவுஸ் ஓனரிடம் போய் பையன் புதுசு தெரியாம எடுத்துட்டான் திரும்பி நாளைக்கு தந்துடுறோம் என்று சொல்லி சமாளிச்சுட்டு வந்தான்.

எங்க ஊரில் வீட்டுக்கு அருகிலேயே விவசாயத்துக்கு உள்ள எங்க போர் செட், அந்த தொட்டி ஒரு 5 அடி நீளமும் ஒரு 4 அடி ஆழமும் இருக்கும், அதில் போய் குளிச்சோம் என்றால் சும்மா அருவியில் குளிச்ச மாதிரி ஒரு பீளிங் கிடைக்கும், ஒரு மணி நேரம் ஊறிட்டு, அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.அப்படி இருந்த என்னை ஒரு குடத்து தண்ணியில் அடைக்க பார்த்தது சென்னை. அதைவிட கொடுமை தண்ணீர் பிடிச்சு வைக்கும் ஆள் வரவில்லை என்றால் குடத்தை வெச்சு தண்ணி புடிக்கனும் அது அதைவிட கொடுமை.

ஒரு குடத்தில் காக்கா குடிக்க தான் கல்லை போட்டுச்சு அதில் ஒரு நியாயம் இருந்துச்சு ஆனா என்னை குடத்தில் கல்லை போட்டு மேலே வரும் தண்ணியில் குளிடான்னா அது எந்த விதத்தில் நியாயம்?

அதைவிட கொடுமை பஸ், எந்த ஊருக்கு போனாலும் ஜன்னல் ஓர சீட்டுக்கு கர்சிப் போடுவோம் ஆனா சென்னை வந்தப்ப பஸ்ஸில் போனா எல்லோரும் இந்த பக்கம் உட்காந்துக்கிட்டு ஜன்னல் ஓர சீட் கொடுத்தார்கள் அட பார்றா இவ்வளோ நல்லவனுங்களா இருக்கானுங்க என்று ஆரம்பத்தில் நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சுது அது பக்கத்து பஸ் கார் விடும் புகையில் இருந்து தப்பிக்க என்று, நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) ஆழ்வார்பேட்டையில் இருக்கும் இமேஜ் செண்டருக்கு 45A பஸ்ஸை புடிச்சா மொத்த சென்னையும் அதில் இருக்கிற மாதிரி கூட்டம் நிரம்பி வழியும், இறங்கும் பொழுது அயர்ன் செஞ்சு போட்டுக்கிட்டு போன சட்டை அப்படியே கசங்கி பழய துணி போல் இருக்கும்.

அப்புறம் மழை பேஞ்சா கேட்கவே வேண்டாம்...

சென்னையை பற்றி புகழ்ந்தால் அனுஜன்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி பட்டேன் அதான் அவருக்காக இந்த ஸ்பெசல் பதிவு:)))